ஒரு கையில் புத்தகப்பையும்
மறுகையில் உணவுக்கூடையும் சுமந்துகொண்டு
பள்ளியிலிருந்து திரும்பிக் கொண்டிருக்கிறது
புடவையணிந்த குழந்தையொன்று.
இரு கையிலும் ஐஸ்க்ரீமைப் பிடித்துக்கொண்டு
அதட்டிக்கொண்டே வருகிறாள்
சீருடையணிந்த தாயொருத்தி!
அன்புடன் உணவூட்டி
அழகாய் உடையுடுத்தி
செல்லமாய் அதட்டி
பக்கத்தில் படுக்கவைத்து
குழந்தை காட்டுகிற அன்பில்
உயிர் பெற்றுவிடத் துடிக்கிறது
பொம்மை.
முதன்முறை திரையரங்கிற்கு வந்திருந்த குழந்தை
ஒலியளவு அதிகமாயிருந்ததால்
தாயைக் கடிந்து கொண்டிருந்தாள்…
‘ரிமோட்’ கொண்டுவராததற்கு
அருட்பெருங்கோ