சொல்லித்தானாக வேண்டும்
தத்தெடுப்பாரின்றி தனித்துப் போய்விட்ட எம் தீவுகளைப்பற்றி.
சஞ்சீவி மலையை அனுமன் காவிச்செல்கையில்
கடலிடைச்சிந்திய துண்டங்களாம்
இத்தீவுகளைக் கவனியாமலேக
கரைசேராத் திட்டுகளாய் தனித்திருந்தழுதனவாம்.
கைவிடப்பட்ட துண்டங்களை கரைசேர்க்க யாருமில்லை.
சஞ்சீவிமலையினின்றும் தூரித்த தீவுகளானோம் நாம்.
சஞ்சீவி மலையின் துண்டங்கள் நம் தீவுகள் என்றால்
விண்ணெழுந்து ராவணனைப் பொருதிய ஜடாயுவின்
துண்டாடப்பட்ட இறக்கைகளாய் நாம்
வெட்டுண்டோம்; வீழ்ந்தோம்
கடல்வெளித் தனித்தலைகிற மிதவைகளாய்
எக்கரையுமற்று எற்றுப்படுகின்றோம்.
ஆயினும்
வீழுமுன் விண்ணெழுந்து பொருதிய ஞாபகம்
வெட்டுண்ட இறக்கைகளுக்கு இல்லையெனலாமோ?
சஞ்சீவி மூலிக்காற்றே வா
வெட்டுண்ட இறக்கைகளுக்கு உணர்வின் தைலமிடு
எழுந்து பறந்ததாக வேண்டும்
எம் முந்தைப் புலம் நோக்கி
வெட்டுண்டு வீழுமுன் வீடிருந்த உச்சிப்புலம் அது.
இறந்தாரை எழுப்பும் சஞ்சீவி கொணர
அனுமனும் இங்கில்லை.
இராமர்அணையும் கடலுள் அமிழ்ந்தாச்சு
எம்முயிர்த்துவமே சஞ்சீவியாக
எழுந்து பறந்தாகத்தான் வேண்டும்

சு. வில்வரெத்தினம்