அலட்சியமாய் களைந்த
ஆடைகளையெல்லாம்
பொறுக்கி எடுத்து ...
துவைத்து வைப்பாள்!
தன் வயிறு
காய்வதைப்பற்றி
கவலைப்படாமல் ...
துணிகளை காயவைப்பதில்
கவனமாய் இருப்பவள்!
மிச்சம் ஏதுமின்றி
தின்று வீசிய
பாத்திரங்களை ...
பத்திரமாய் பூசி விடுவாள் !
நாங்கள் வேண்டாமென்று
ஒதுக்கிய உணவுகள் ...
அவளுக்கு அமுதம் !
சொந்தக்குழந்தை
வீட்டில் அநாதையாய் இருக்க...
எங்கள் வீட்டுக்குழந்தைகளை
சொந்தமாக்குபவள்!
ஒருநாள் வராவிடினும்...
வீட்டை கூவம் என்று அழைப்போம் !
இப்படி
விவரம் தெரிந்த நாள்முதல்
அறிவிக்கப்படாத உறவாக,
வலம் வருபவள்!
இன்று காலைதான் செய்தி வந்தது:
என் வீட்டு
வேலைக்காரி இறந்துவிட்டாளாம்!
அய்யோ!
நாளை
தேங்கும் வேலையை
யார் செய்வதாம்?
ரசிகவ் ஞானியார்