குளித்து பொட்டிட்டு மலர்முகம் காட்டும்
எதிர் வீட்டுப் பெண்போல் சூரியன்!
கருங்கல் விதையிட்டு வளர்ந்த
கட்டிட மரங்களுக்கு மத்தியில்
பச்சை மனது காட்டி சிரிக்கும்
சென்னையின் தென்னை மரங்கள்!
என் வீட்டு ஜன்னல் கம்பியில்
உடற்பயிற்சி செய்யும் சிட்டுக்குருவிகள்!
அடடா நண்பனே அதோ பார்
அடிக்கடி பார்க்கும் அந்த அலுமினியப்
பறவைக் கூட அழகாய்த் தெரிகிறதென்றேன்.
இல்லையடா! அலுவலகத்திற்கு
நேரமாகி விட்டதென்று
தரை பார்த்தபடி
விரையும் நண்பன்.
-

எட்வின் பிரிட்டோ