உழைத்திடுவோம் உயர்ந்திடுவோம் உழைப்பினை போற்றுவோம்!
உழைத்திடுவோர் உயர்ந்திடவே உழைப்பினை போற்றுவோம்!
வேர்வையும் வாசம் வீசுமே!
மேநாளின் மேன்மை பேசுமே!
பாலை கூட பூக்கள் பூக்கும் சோலை ஆக ஆக்கு'மே'!
சேற்றில் கூட நாற்றை ஊன்றி சோற்றை ஈனு'மே'!
வேட்டை யாடும் காட்டு வாழ்வை மாற்றி வீட்டைக் காட்டு'மே'!
நீங்கள் காணும் யாவும் யாவும் எங்கள் ஆக்க'மே'!
பார் அதோ! உழைப்பாளியால்...
விதை பூவாகி காயாகுதே!
திடல் ஜோரான வீடாகுதே!
பார் இதோ! உழைப்பாளியை...
தினம் சோறின்றி நோயாகிறான்!
ஒரு வீடின்றி தான் வாழ்கிறான்!
தேகம் தேயும் கைகள் ஓயும் ஓடும் கால்கள் ஓடு'மே'!
வேகம் கூட சோகம் ஓட காலம் கூடு'மே'!
ஆலை ஓட்டி ரேகை தேய்ந்த கையில் ஆட்சி மாறு'மே'!
பாரம் ஏற்றி வாடும் தோளில் மாலை ஏறு'மே'!
விதைத்தோமே வளர்த்தோமே அடைந்தோமா? தோழா! தோழா!
உழைத்தோமே களைத்தோமே உயர்ந்தோமா? தோழா! தோழா!
நீ யாரோ நான் யாரோ பாட்டாளி ஆனோம் தோழா!
நீ வேறோ நான் வேறோ கூட்டாளி ஆவோம் தோழா!
உழுதோம் அதனைப் புசித்தோமா?
தறிதான் அடித்தோம் உடுத்தோமா?
விதைத்தோம் வளர்த்தோம் அடைந்தோமா?
உழைத்தோம் களைத்தோம் உயர்ந்தோமா?
பேதம் பேதம் பேதம் ஏழு நூறு கோடி பேத'மே'!
போதும் போதும் தோழன் தானே நீயும் நானு'மே'!
பூதம் பூதம் பூதம் நாங்கள் கோடி கால்கள் பூத'மே'!
கோடி கைகள் கூடி நாளை வையம் ஆளு'மே'!
யாரிங்கு உயர்ந்திட நாமிங்கு உழைத்தோம்!
யாரிங்கு கொழுத்திட நாமிங்கு இளைத்தோம்!
யாரிங்கு அணிந்திட நாமிங்கு தொடுத்தோம்!
யாரிங்கு துணிந்திட நாமிங்கு பணிந்தோம்!
யாராரோ உயர்ந்தார்!
யாராரோ கொழுத்தார்!
யாராரோ அணிந்தார்!
யாராரோ துணிந்தார்!
படைப்போம் புதிதாய் சரிதமே...
இணைவோம் எழுவோம் படையாக!
எதுவும் இல்லையே இழக்கவே...
அடைவோம் அடைவோம் உலகையே!
தூக்கம் ஓய்வு வேலை ஆக நாளில் மூன்றும் வேண்டு'மே'!
தேசம் ஊடே கோடு யாவும் போக வேண்டு'மே'!
காவல் நீதி ஏவல் நாயை தூர ஓட்ட வேண்டு'மே'!
யாதும் ஊரு யாரும் கேளிர் ஆக வேண்டு'மே'!
தினம்தினமே தினம்தினமே உழைப்பினை போற்றுவோம்!
உழைத்திடுவோர் உயர்ந்திடவே உழைப்பினை போற்றுவோம்!
வேர்வையும் வாசம் வீசுமே!
மேநாளின் மேன்மை பேசுமே!
ஞானகுரு