நான் பிறந்தபோது
பாட்டி சொன்னாளாம்
அம்மா போல என்று.
தலைமுடி மட்டும்
தாத்தா போல
முத்தத்துடன் சொல்வாள்
அத்தை.
குளிக்க மறுத்து
அழுது புரண்டபோது
முதுகில் இரண்டு வைத்து
அம்மா சொல்வாள்
அப்பா போல
அடம் என்று.
பள்ளிக்குப் புறப்படும்போதெல்லாம்
அப்பா சொல்வார்
பக்கத்து வீட்டு
பரசுராம் போல
படிக்க வேண்டுமென.
முதல் மதிப்பெண்
பெற்றபோது
தாத்தாவின் பெருமிதம்
மாமா போலவே
அறிவாளி என்று.
மட்டை பிடித்து
மைதானம் இறங்கும்போது
நண்பர்களின் கூச்சல்
ஸ்ரீகாந்த் போல
சிக்ஸர் அடியென்று.
உறவும் நட்பும்
திருமணத்தில்
வாழ்த்தினார்கள்
வானும் நிலவும் போல
வாழ வேண்டுமென.
மருத்துவமனையில்
மரணப்படுக்கையில்
மெல்ல நான்
நினைவிழந்து கொண்டிருக்க
சன்னமாய்க் கேட்கிறது
சங்கர் அண்ணாவின் குரல்
சித்தப்பா போலவே
சிறுநீரகக் கோளாறு
என்று.
கோகுல கிருஷ்ணன்