இயல்பு - எழிலி

Photo by Pawel Czerwinski on Unsplash

பொழுது புலர்ந்தது!
பூக்கள் மலர்ந்தது!

கறவைப்  பசுக்கள்
கன்றுகளுக்குப்
பால் சுரந்தன!

தெப்பக் குளத்தில்
தாமரைகள் விரிந்தன!
தெய்வப் பாசுரங்கள்
கோயிலில் முழங்கின!

தெருக்களில்-
முற்றந்தெளித்து
புதுக் கோலம்
அமைந்தது!

வீட்டின் கூரையில்
காக்கைகள்  விருந்துன்ன
அமர்ந்தன!

பள்ளிக்குழந்தைகள்
புத்தகப் பையுடன்
ஓடினர்!

மெத்தை வீடுகளில்
நெல் மணிகள்
காய்ந்தன!

ஆற்றில் குளிப்பவர்
ஆடு மேய்ப்பவர்
வீட்டில் இருப்பவர்
வெளியில் போவோர்
கூடிய சந்தையில்
பேரம் பேசுவோர்
ஓடி ஆடிட
ஏனையோர்
ஏதேதோ வேலையில்
உடன்பட-

சொல்லாமல் கொள்ளாமல்
சுழன்று வந்தது
சுனாமி!
இல்லாத வீட்டுப்
பிள்ளை-
வாரித் தின்பதேப்
போல் எல்லாவற்றையும்!                                                   

அரை மணிக்குப் பின் -
ஊர் அழிந்தது!
திண்ணை வீடுகளில்
பிணங்கள் மிதந்தன!
நொறுங்கிய  பங்களாக்களில்
பொருட்கள்  சிதறின!
பள்ளியில் பெஞ்சுகளோடு
பிஞ்சுகளும் மிதந்தன!

உயர் திணையும்
ஆய்தத்திணையும்
ஒன்றாய்த்  தின்ற
திருப்தியில்
ஏப்பமிட்டுக்
கடலுக்குள்
மூழ்கியது
காலக் கோளாறு!

புதிதாய்ப்
பொழுது புலர்ந்தது.
கழிவுகளை
அப்புறப்படுத்தி
அன்றாடக் கடமைகளில்
ஆழத்தொடங்கியது -
மனிதம்!
எதிர்மறையின்
இயல்பை
ஏற்கவும்
பழகிக் கொண்டது
எழிலி

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.