நான் பேசுகிறேன்
நறுக்கப்படுகிறது என் நாவு
முகம் இழக்கின்றன என் சொற்கள்
இன்னும் நான் பேசுகிறேன்
பறிக்கப்படுகிறது என் பேனா
கருச்சிதைகின்றன என் சொற்கள்
ஆயினும் நான் பேசுகிறேன்
முறிக்கப்படுகின்றன என் விரல்கள்
விசையிழக்கின்றன என் சொற்கள்
மேலும் நான் பேசுகிறேன்
பிடுங்கப்படுகின்றன என் கண்கள்
உயிர் இழக்கின்றன என் சொற்கள்
பின்னும் நான் பேசுகிறேன்
உயிர் விடைக்க
என் உடலே சொல்லாய் எழுகிறது
பேசாவிடில்
நான் சாவேன்
அழகிய பெரியவன்