மழையின் இரவுகளில்தாம் புத்தகங்கள் திறக்கப்படுகின்றன
குட்டி ரேவதி
மழையின் இரவுகளில்தாம் புத்தகங்கள் திறக்கப்படுகின்றன
பிரபஞ்சத்தின் மிகச் சிறந்த நாவல்களிலுள்ள
கதைமாந்தர்களான முதிய கிழவனும் அகதிப் பெண்ணும்
ஆட்டுக்குட்டியும் போலீஸ்காரனும்
தங்கள் கதைகளிலிருந்து வெளியேறி
நகரை உலா வருகின்றனர்
வாசகர்களோ சாலை நடைபாதைகளின் தாழ்வாரங்களில்
ஒதுங்கி நிற்கின்றனர் மழையின் கூச்சல் ஓயட்டுமென
அந்த அகதிப்பெண் தனது உடலின் ரசம்
புத்தகச்சுவரெல்லாம் வழியக் கீறி வெளியேறி
மழை பெருகிய வழிகளை நீந்திக் கடக்கிறாள்
காமத்தின் சாரல் முகத்தைக் கிழிக்கத்
தனியே கதைகளுக்குள் உறங்கும் கன்னிப்பெண்களும் ஏராளம்
மழைக்கு ஒதுங்கிய புறாவும்
இப்படித்தான் படைப்பாளியின் கதைக்குள் நுழைந்தது
புத்தகங்கள் நனையாமலிருக்க ஜன்னல் கதவுகளை மூடும்
அத்தோல் நரைத்த கைகள்
தனது அடுத்த புனைவை நெய்யத் துடிக்கின்றன