குளிர் காலத்தின் இரவொன்றில்
நீ எனக்காகப் போர்த்திய போர்வையில்
உன் பிரியத்தின் கதகதப்பை உணர்ந்தேன்
மழைக்காலத்தின்
மாலை நேரத்தில்
நீ தந்ந தேனீரை விட
சுவையாக இருந்தது
உனது அன்பான முத்தம்
அறை முழுக்க
மின் விளக்குகள் ஒளிர்ந்தாலும்
நீ இல்லாத அறை
இருண்மையை எனக்குள் தடம் பதித்தது
"வான்கா"வின் நவீன
ஓவியத்தைப் போன்று
என் உணர்வுகளைப்
புரிந்து கொள்ளாமல்
நீ ஊடலிடும் சமயத்தில்
உதிர்க்கும் வதைச்சொல்
உணர்த்தும்
உன் மனதின் வன்மத்தை
ஊடலுக்குப் பிறகு
சங்கீதமாய் ஒலிக்கும்
உனது சமாதான முயற்சியான
மெல்லியக் குரல்
தனிமையில் நான் இருக்கும் தருணத்தில்
உன் புகைப்படத்தின் வழியே கசியும்
மௌனம் பேசும் வார்த்தைகளை
யாரால் கவிதையாக மொழி பெயர்க்க முடியும்?
- நீலநிலா செண்பகராஜன், விருதுநகர், இந்தியா

நீலநிலா செண்பகராஜன்