ஏழ்மையொடு ஒட்டிப் பிறந்திட்டோம்
ஏற்றமிலாச் சாதியில் பிறந்திட்டோம்
கூழின்றி குடும்பமே நட்டாற்றி லிருப்பதனால்
கொடுமைகள் பலசுமந்து துன்பத்தில்நாம்!
கற்றுத்தேர்ந்திட பள்ளிசென்றிட ஆசை
கயவர்கண்கள் குருடனதால் நாமிங்கே
முற்றும் துறந்துமுட்களிடை யேயின்று
முனிந்துமுனிந்து வேலைசெய்கின்றோம்!
கொடைகொடுக்கும் வள்ளல்கள் உண்டாமிங்கு
கேள்வியுற்றோம் செவிகளுக்குள் – இடியெனவே
மடைதிறந்த வெள்ளமென விழிநீரெங்கும்
மரித்துயிர்த்து மரிக்கின்றோம் நாமிங்கு!
கல்லுடைத்தும் கல்சுமந்தும் பால்யர்நாம்
கனிவின்றிய சொற்களுடு வாழ்வதற்காய்
சொல்லுகின்ற வன்செயல்கள் செய்கின்றோமே
சொர்க்கத்தில் உறங்குகின்றார் உயர்சாதி!!
மானுடநீதி பேசுகின்ற ஊழைகேட்டோம்
மனிதமின்றிய மானுடத்தின் அழகும்கண்டோம்
ஊனின்றி உடையின்றி தவிப்பதாலேநாம்
உண்டியொரு கவழத்திற்காய் மாடாயின்று!
எமக்கென ஒருதின மெடுக்கின்றார்
ஏற்றமிலா எமைக் காணாதிருக்கின்றார்
சுமக்கின்ற சுமைகளால் சிறுமைநீங்கி
சயனமின்றி யொருபோதும் அழுக்காய்நாம்!
சொப்பனங்கள் உண்டு சிறுவ ரெமக்குள்ளும்
சென்றிட வழியின்றி முட்களுக்குள்நாம்
நப்பாசையிலா சிறுவர்நாம் என்றபோதும்
நகைகாட்டா மானுடமென்ன மானுடமோ?
அழகான மேனியெங்கும் அசிங்கமாக –இவர்
அழுக்குகளே உதிரமீதும் ஓடுதிங்கு
பழக்கமிலை பணிகளிவர் என்றபோதும்
பணிந்தேசெய்கின்றோம் – பிறந்த்துதப்பா?
வடிகின்ற வியர்வையெங்கும் கொதிநீராக
வன்மனது தருகின்ற கொடுமையாலே
துடிக்கின்றோம் அனலிடை புழுவெனநாம்
தூங்குகின்ற தூயவர்கள் எங்கே? பாரும்!!
நிலைகெட்ட வலியாரின் கண்களெங்கே?
நிலைகெட்டுப் போகின்றோம் சிறுவர்நாமே
விலைபோகும் மனிதத்தின் விலையிறக்கி
வித்திடுங்கள் “சிறுவர்” விதைகளெங்கும்

கலைமகன் பைரூஸ்