அமைதி!
மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்
பூங்காற்றின் அரவணைப்பில் பூவிதழை மெத்தையாக்கி!
பொன்னெழிலாய் பனியுறங்கும் அமைதி.!
நீங்காமல் நெஞ்சமதில் நிலைத்திருக்க நாள்தோறும்!
நினைக்கின்ற சுகமுமொரு அமைதி!
தேங்காய்க்குள் ளிருக்கின்ற தீர்த்தத்தப் போலினிக்கும்!
தெய்வீகத் தன்மையுள அமைதி!
வாங்காத கடனுக்கு வட்டியுடன் முதலாக!
வந்துவிடும் ஆனந்தம் அமைதி.!
தூங்காமல் வதைக்கின்ற துயரத்தில் வாடுகையில்!
தூரத்தே போய்நிற்கும் அமைதி!
தாங்காத துயரங்கள் தனைஏந்தி வைத்தமனம்!
தூர்வார ஊற்றெடுக்கும் அமைதி!
ஏங்காத இதயத்தில் இதமாக பதமாக!
என்றென்றும் குடியிருக்கும் அமைதி!
தீங்கற்ற எண்ணத்துள் திளைக்கின்ற ஆசைக்கு!
தேனாலே நீராட்டும் அமைதி.!
இல்லாத பேருக்கு இருப்பதிலே ஏதேனும்!
ஈவதிலே கிடைக்கின்ற அமைதி!
பொல்லாத மனிதர்களின் புகழ்வாக்கின் போதையிலே!
புளகாங்கிதம் கொள்ளாத அமைதி!
கல்லாத பேர்களிடம் கவலையற்றுக் கிடந்தேனும்!
கண்ணுறக்கம் கொடுத்துவிடும் அமைதி!
சொல்லாத வார்த்தைகளின் சுகமான அர்த்தத்தில்!
சுகராகம் இசைத்துவிடும் அமைதி!
உனக்குள்ளே உனைத்தாங்கும் உயிர்த்தூணாய் இருக்கின்ற!
உள்ளத்தின் உறுதியெனும் அமைதி!
தனக்கென்றக் கொள்கைக்கு தடைபோட்டு பிறர்க்கென்று !
தான்வாழச் சொல்கின்ற அமைதி!
இனத்துக்கும் சனத்துக்கும் எப்போதும் போராடி!
இழக்கின்ற சந்தோசம் அமைதி!
எனக்கென்றும் உனக்கென்றும் எல்லாமே பொதுவானால்!
இழப்பற்று இருந்துவிடும் அமைதி