காதலென்னும் சோலையிலே கீதமொன்று பாடி வந்தேன்!
கன்னியுந்தன் கனவுலகில் நீச்சலடித்து மகிழ்ந்திருந்தேன்!
வண்ணமயில் தோகை போல விரிந்திருந்த கூந்தல் கண்டேன்!
வழிமறந்து விழிமூலம் உள்ளத்தினுள் குடி புகுந்தேன் !
புன்னகை அரும்பியதும் எந்நிலை இழந்து விட்டேன்!
பொன்னகை பூட்டி உந்த எழில்காணத் துடிக்கின்றேன்!
அன்னம் போல நடைபயின்று அள்ளிக்கொண்டாய் மனதினையே!
மின்னல் போன்ற இடையசைவில் எனை நானே தொலைத்து விட்டேன்!
வாட்டுகின்றாய் உள்ளத்தைக் கோதையுந்தன் நினைவுகளால்!
வாசமில்லை மலர்களுக்கு உந்தன் கூந்தல் ஏறாவிட்டால்!
மீட்டுகின்றாய் இன்பராகம் குயிலிசையாய் மொழிந்திடுகையில்!
மீதி என்னில் ஏதுமில்லை மிகுதி சொல்ல வார்த்தையில்லை!
தேவியுந்தன் கரம் பிடிக்க ஏகுதெந்தன் காளை மனம்!
தோல்வியில்லை என் காதலுக்கு காவியத்தில் வாழுமென்றும்!
நாளையெங்கள் வாழ்வினிலே நடப்பதெல்லாம் இன்பநிகழ்வுகளே!
நாயகியாய் நீ இருக்க நிற்பதெங்கே உணர்வலைகள் !
-சக்தி சக்திதாசன்
சத்தி சக்திதாசன்