தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

கணக்குப் பதிவியலும். . தன்னம்பிக்கை

கவியன்பன் கலாம்
கணக்குப் பதிவியலும் கவிதையும்..தன்னம்பிக்கை!
01.!
கணக்குப் பதிவியலும் கவிதையும்!
-------------------------------------------------!
’எண்ணும் எழுத்தும்!
கண்ணெனத் தகும்”!
எனக்குக்!
கணக்குப் பதிவியல்!
எண்ணாகும்!
எழுத்தென்பது செய்யுளாகும்!
இரண்டிற்கும் வேண்டும்!
இலக்கணம்!
கணக்குப் பதிவியலின் விதிகள்!
அறியாமல்!
கணக்குப் பதியவே முடியாது;!
யாப்பின் இலக்கணம் அறியாமல்!
யாத்திட இயலாது செய்யுள்!
பற்று, வரவு விதிகளைப்!
பற்றிப் பிடித்தால் கணக்குச் சரியாகும் !
அசை, சீர், தளை, தொடை, எதுகை, மோனை!
இசை பாட வைக்கும் யாப்பின் சேனை!
ஒன்றோ, ஒரு கோடியோ!
ஒன்றாகப் பற்றும் வரவும் நேராகாமல்!
இடம், வலம் மாறினால்!
கடனீந்தோர் கடனாளியாவார்;!
கடனாளி கடனீந்தோராவார்!!!!
இசை பாடும் இலக்கணச் செய்யுளில்!
அசை மாறினால்; தளை தட்டினால்!
வசை பாடும்!!!!
“எமக்குத் தொழில் கவிதை” என்றான் பாரதி!
கவிதை எனக்குத் தொழில் அல்ல;!
கவிதை எனது உயிர்!!!!
“கணக்கு எனக்குப் பிணக்கு” என்றான் பாரதி!
கணக்குப் பதிவியலே எனக்குத் தொழில்!
எனது வாழ்வில் எழில்!
02.!
தன்னம்பிக்கை

கோழி இறகும் காகங்களும்

துவாரகன்
துவாரகன்-!
ஒரு நாள் மதியம்!
எல்லாக் காகங்களும் கூடிக் கரைந்தன. !
வீட்டின் முன்புற மாமரத்திலும்!
பின் வளவு முருங்கையிலும்!
வேலியோரக் கதியால்களிலும்!
கூடியிருந்த காகங்கள்!
பலமாகக் கரைந்தன.!
தேடலில் இறங்கினேன்.!
வீட்டிலேதும் மீன் வெட்டவுமில்லை.!
அதன் உறவுக் காகம் இறந்த !
அடையாளமும் இல்லை. !
வீட்டாரைக் கேட்டேன். !
யார்க்கும் ஏதென்று தெரியாதாம்.!
அப்போதுதான்,!
என் வீட்டு மஞ்சள் பூப்பந்தற் காலருகே!
பிடுங்கி எறியப்பட்ட !
நான்கைந்து !
வெள்ளை சாம்பல் கலந்த கோழி இறகுகள்.!
கோழி தானாக இறகு உதிர்க்குமா?!
காகங்கள் இன்னமும் கரைந்தபடி!
இறகுகள் மட்டும் அடையாளமாக

முதிர்ச்சி

பாண்டித்துரை
பெருமூச்சு சப்தங்கள்!
பெரியவள் ஆனபின்பு!
ஒன்றும் தெரியாது!!
போகுமிடத்தில்!
வாங்கிக் கட்டிக்க என்று!
ஏச்சுக்களும்!
பேச்சுக்களும்!
எதிர்மறையாய்!
எல்லாம் முடிந்தது!
மூன்று முடிச்சில்!
கொஞ்சம் கொஞ்சமாய்!
என்னின் ஆழுகை!
எதிர் கூடாரத்தில்!
ஒன்றும் தெரியாதவளாய்!
ஒதுங்கிச் செல்லாமல்!
ஆழுமை!
அரவணைப்பு!
என!
ஒவ்வொன்றாய்!
தொட்டுச் செல்ல!
தாய்மையடையும்!
தருணத்தில்!
முழுமையடைகிறேன்!!
!
ஆக்கம்: பாண்டித்துரை

சொமை

வெண்ணிலாப்ரியன்
சோத்தைக்காணாத வவுறு!
சோவமாய் சுருங்கிப்போய்க்கெடக்க!
வவுத்துப்பிரச்சனையைச்சொல்லி!
வழிகாட்ட வேணுமாய்!
சாமிகிட்டெ சொல்லி!
சப்பரந்தூக்கினேன்.!
பொணமாட்டம் கணக்குறான்!
பொங்கச்சோத்து ஐயர்பய!!
வெண்ணிலாப்ரியன்

நிறைவேறிய காதல்?

எதிக்கா
பல வருடக்காதல்!
நிறைவேறிய அறிகுறியாய்த்!
‘திருமணச் சடங்கு’!
மேளம் முழங்கவில்லை!
நாதஸ்வரம் ஒலிக்கவில்லை!
பிராமணிகள் இங்கே!
மந்திரங்கள் ஓதவில்லை!
அம்மி மிதிக்காமல்!
அருந்ததியும் பார்க்காமல்!
இனிதாகப் பூண்டோம்!
திருமணக்கோலம்!
இல்லறம் இன்பமாய்!
தொடங்குகையில்!
கனடிய வாழ்க்கை வட்டத்துள்!
நுளைந்துகொண்டது – நம்!
இல்லறமும்!
ஆசைகளைப் புதைத்தும்!
உணர்வுகளை கொய்தெறிந்தும்!
நள்ளிரா வேளையில்!
ஊரடங்கிப்போகையிலே!
துணையேதுமின்றி தனியே!
விட்டு!
இரவுவேலை செல்லும்!
‘துணைவன்’!
மார்தட்டி வீரம் முழங்கும்!
வாய்ப்பேச்சுகள் அடங்கிக்போக!
நாலு சுவருக்குள்!
பீதிபெருக்கெடுக்க!
பெண்மை இங்கே மெதுவாக!
நிழலாட!
விழித்திருக்கும் என் இரவுகள்!
- எதிக்கா

கழக இலக்கியக் கணிக்கருஞ் சால்பு

தமிழ்நம்பி
சங்கத் தமிழின் சால்பு”எனுந் தலைப்பில்!
இங்குவந் தெங்கள் இன்னவை தன்னில்!
நன்கொரு பாட்டினை நல்குவிர் என்றே!
அன்பொடு “பொதும்பர்” அமைப்பினர் கேட்க!
அவ்வவை தந்ததைத் துவ்வுற ‘வார்ப்பு’ச்!
செவ்வையர்க் கென்றே இவ்விடந் தீட்டினேன்!!
அன்பும் மதிப்பும் அணிசெயுந் தலைவ!!
நன்புரைப் பாவலீர்! நல்லவை அமர்ந்த!
அறிஞரீர்! பெரியீர்! அன்புசால் தாய்க்குலச்!
செறிதமிழ் உணர்வீர்! செயல்வல் இளமையீர்!!
தோழமை சான்ற தூயநல் லுளத்தீர்!!
ஆழன் போடே அவையினை வணங்கினேன்!!
‘சங்க’த் தமிழின் சால்புறு காலம்!
மங்காத் தமிழின் மதிப்பொளிர் காலம்!
முக்கழ கத்தே முற்றறி வோடே!
எக்கா லத்தும் ஈடில் சிறப்பொளிர்!
செந்தமிழ்ச் செவ்வியல் செப்பிடு மிலக்கியம்!
எந்தமிழ் மொழியில் இயற்றிய காலம்!!
தொன்மை செம்மை தூய்மை யதனுடன்!
தன்தனித் தன்மையும் தகைசால் பொதுமையும்!
செம்மொழிக் கிலக்கணம் செப்பினர் அறிவர்!!
எம்மொழி யேஅவ் எல்லாச் சிறப்பையும்!
உயர்வுறக் கொண்டதென் றுலகம் உரைக்கும்!!
மயர்வற ஆய்ந்தே மாட்சியை விளக்கும்!!
பொதுமை உணர்வைப் போற்றிய மொழிதமிழ்!!
இதுமிகைக் கூற்றிலை; இன்றமிழ் இலக்கியம்!
‘உலகம் உவப்ப’, ‘உலகம் யாவையும்’,!
‘உலகெலாம் உணர்ந்து ஓதற்கு’ என்றும்,!
‘வையகம் பனிப்ப’ வாழ்த்தித் தொடங்கலும்,!
பொய்யில் புலவர் ‘முதற்றே உலகு’!
எனக்குறிப் பிடலும் இனும்பிறி தொன்று!
‘நனந்தலை உலகு’என நனிதொடங் கிடலும்!
பொதுமை உணர்வுப் பொதிந்துள துரைக்கும்!!
இதுதவிர்த் தின்னும் சான்றுக ளுண்டே!!
உலக இலக்கியம் உரைப்பதோ மாந்தரின்!
இலகிடும் இயற்பெயர்! எந்தமிழ் மொழியிலோ!
“மக்கள் நுதலிய அகன்ஐந் திணையும்!
சுட்டி ஒருவர் பெயர்கொளப் பெறார்”!
என்ற நெறியினில் இயற்பெயர் தவிர்த்தே!
நன்றாம் பொதுப்பெயர் நாடிக் குறிக்கும்!!
இயற்கையை விளக்கும் இனியநற் பாக்கள்!
வியப்பி லாழ்த்தும் நாடகக் காட்சிகள்!!
“ஆடமைக் குயின்ற...” அகநா னூற்றுப்!
பாடல் காட்டும் ஆடரங் கழகே!!
பிரிவால் வருந்தும் பேதைத் தலைவி!
அருந்துயர் தன்னில் அரற்றலைக் கேளீர்!!
“முட்டு வேன்கொல்? தாக்கு வேன்கொல்?!
‘ஆஅ! ஒல்’எனக் கூவு வேன்கொல்?!
அலமரல் அசைவழி அலைப்ப என்!
உயவுநோய் அறியாது துஞ்சும் ஊர்க்கே!”!
ஒப்பிலா துரைத்தயிவ் ஓங்கிய அவலம்!
செப்பிய திறத்தின் சீர்சிறப் பறிக!!
“அகவன் மகளே, அகவன் மகளே!!
மனவுக்கோப் பன்ன நன்னெடுங் கூந்தல்!
அகவன் மகளே பாடுக பாட்டே!”!
இன்றரு கிருந்து இயம்பிடற் போன்றே!
என்றும் ஒளிர்ந்திடும் எழிற்றமிழ்ப் பாடல்!!
மாபெருஞ் செல்வன், மருத நிலத்தான்!
தாவும் அலையுறு தாழ்நிலப் பரதவர்!
பெண்ணை விரும்பினன்; பேரறி வோடே!
எண்ணிடுந் தோழி இயம்பிடும் பாடலே!
“செம்மீன்” தகழியார் தீட்டிடச் செய்ததோ?!
அம்மம் மா,ஓ! அகத்தினிக் கின்ற!
செந்தமிழ்ச் சீருறைச் செவ்வியல் பாக்கள்!!
எந்தநாட் டறிஞரும் ஏற்றிடும் இலக்கியம்! !
உலகத் திற்கே ஒப்பிலாக் காதல்!
இலக்கணம் இலங்கிட இயம்பிய பாடல்!
“யாயும் ஞாயும் யாரா கியரோ!
எந்தையும் நுந்தையும் எம்முறை கேளிர்!
யானும் நீயும் எவ்வழி அறிதும்!
செம்புலப் பெயல்நீர் போல!
அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே!”!
வாடிய பயிர்கண்டு வாடிய தாக!
ஈடிலா வள்ளலார் இயம்பிய தறிவோம்!!
பயிர்களும் மரஞ்செடி படர்கொடி வகைகளும்!
உயிருடை யனவே உணர்ந்துளோம், உண்மை.!
தன்தாய் வித்தித் தழைத்த மரத்தை!
இன்தமக் கையிவள் என்றே நாணி!
காதலற் சேரவோர் கரவிடம் தேடிய!
காதலி கூற்றைக் கனித்தமிழ்க் கழக!
‘நற்றிணை’ப் பாடல் நமக்குக் கூறிடும்!!
எற்றைக் கும்இது ஈடிலாப் பாடல்!!
அன்புதோய் காதலை அகத்திணை நூல்கள்!
என்பும் ஈர்க்கும் இனிமையிற் கூற!
மறமும் கொடையும் மற்றுமெய் யறிவின்!
திறமும் உரைக்கும் புறநா னூறு!!
செந்நா அவ்வை அந்நா ளதியமான்!
மன்னன் மறத்தைச் சொன்ன திறமிது:!
“களம்புகல் ஓம்புமின், தெவ்விர்! போரெதிர்ந்து!
எம்முளும் உளனொரு பொருநன்; வைகல்!
எண்தேர் செய்யும் தச்சன்!
திங்கள் வலித்த காலன் னோனே!”!
மங்கையர் மறவுர மாட்சி விளக்கும்!
பொங்கிடு முணர்வு பொற்பா பலவே!!
“சிற்றில் நற்றூண் பற்றி நின்மகன்...”!
எற்றைக்கும் மறக்க இயலாப் பாடல்!!
காரி பாரியோ டோரி குமணன்!
வாரி வழங்கிய வண்மை விளக்கும்!
சீருறு பாக்கள் செழிப்புறக் காண்கிறோம்!!
ஒருதலை யாக உலகிற் குரைக்கும்!
ஒருவரி கணியன் உளத்தெழுந் துரைத்தது!
“யாதும் ஊரே யாவரும் கேளிர்”!
தீதெலாம் அறுக்கும் தேர்வுரை இதற்கிணை!
எங்குள தென்றே யாவரும் வியப்பர்!!
மங்காப் பெரும்புகழ் தங்கிடும் தமிழ்ப்பா!!
“ஓர்இல் நெய்தல் கறங்க ஓர்இல்!
ஈர்ந்தண் முழவின் பாணி த்தும்ப...”!
தண்டமிழ்ப் புறப்பா கண்டுகேட் டிருப்பீர்!!
“உண்டா லம்மயிவ் வுலகம்” எனும்பா!
‘புகழெனின் உயிருங் கொடுக்குவர் பழியெனின்!
உலகுடன் பெறினும் கொள்ளலர்’ என்னும்!!
இன்னொரு பாடல் இயம்பிடும் இன்னெறி!
பொன்றா உலகிற் பின்றிடாப் பொன்னெறி!!
“நல்லது செய்தல் ஆற்றீ ராயினும்!
அல்லது செய்தல் ஓம்புமின்” என்பதே!!
எடுத்தெடுத் துரைப்பின் எல்லாப் பாவையும்!
அடுத்தடுத் திங்கே அடுக்கிட நேரும்!!
கழக இலக்கியக் கவினுறு சால்பு!
பழகிப் படித்துப் பயனுற வேண்டும்!!
நம்மிருப் பென்ன? நாம்யார்? அறிந்தே!
செம்மாப்பு உணர்வில் செறிவுற வேண்டும்!!
செழுந்தமிழ்ச் சிறப்பில் அழுந்த மூழ்கி!
எழுச்சியும் உணர்ச்சியும் எய்திட!
இனிக்கும் கழக இலக்கியம் பயில்வோம்

என் கண்களில்

சந்திரவதனா
அருவி பாய்ந்தது!
நீ உன் காதலை!
அவளிடம் தெளித்த போது.!
இரவு!
பகலை விழுங்கியது!
காதலை நிராகரித்த!
உன் கடிதம்!
என் சந்தோசத்தை!
விழுங்கியது போல்.!
நெஞ்சில்!
சுரீரென்று வலித்தது!
உன் காதல் அம்பு!
என் நண்பியைத்!
துளைத்த போது

விழி! எழு! தாயே

நா.முத்து நிலவன்
நா.முத்து நிலவன்- !
இமயத் தலைமுடி நரைத்தஎன் தாயே! !
எத்தனை புகழ்வளர்த்தாயே - உன் !
குமரிக் கால்களில் கொஞ்சும் அலைகளில் !
நெஞ்சினைக் கொள்ளைகொண்டாயே! - முன் !
அமைதியும் அழகும் எங்கு தொலைத்தனை? !
அய்யகோ! இன்றைய நிலவரம்! - மனச் !
சுமையினை எங்குபோய்ச் சொல்லுவேன்? அடடா! !
சூழ்ந்ததே இனமதக் கலவரம்! !
புத்தரும் காந்தியும் போலப் பெரும்புகழ்ப் !
புத்திரர் உனக்கென்ன குறையா? - இனி !
இத்தனைப் பெருமைகள் இருந்தும் உன்பிள்ளைகள் !
இன்னமும் நலிவுறல் முறையா? - மத !
யுத்தமும் சாதியால் ரத்தக் களரியால் !
உயிர்ப்பலி யாவதும் சரியா? -இவை !
ஆத்தனைக் குள்ளுமோர் சுயநலப் பேய்பிடித்(து) !
ஆடுதல் இனியும் காண்கிலையா? !
விடுதலை பெற்றநள்ளிரவிலே மௌனமாய் !
விரதம் இருந்ததேன் காந்தி? - மதப் !
படுகொலை தொடர்வதும் பாரதர் மடிவதும் !
பார்த்துத் தொலைந்ததோ சாந்தி? - இனி !
ஆடுதலும் கெடுதலும் அண்ணனே தம்பியை !
ஆடிப்பதோ இடிப்பதோ தாயே! - ஒரு !
முடிவிலையா?உன் மோனம் கலைந்திடு! !
மூர்க்கமாய் விழி! எழு! தாயே

தொழில்நுட்பம்

முத்தாசென் கண்ணா
செம்பருத்தியா வக்கிறது?!
சிவனக்கு ஆகாதே - என்ற!
கோயில் கிழவியிடம்!
எப்படி சொல்லி புரிய வைப்பது !
இன்று பிரதோஷத்திற்காக!
பரமசிவனுக்குப்!
பாக்கெட் பாலில்தான்!
அபிஷேகம் நடத்தினோம் என்று!
இப்படிக்கு!
முத்தாசென் கண்ணா

வெடிகள் வாங்க‌ வியத்தகு காரணங்க‌ள்

மு. பழனியப்பன்
வெடிகள் வாங்க‌!
வியத்தகு காரணங்க‌ள்!
--------------------------------------!
சொந்தங்கள் மடிய!
தேசநலன் கருதி!
சிறைக் கம்பிகளுக்குப்!
பின்னால் இருந்துப்!
பற்ற வைக்க!
இந்தத் தீபாவளிக்கு!
புஸ்வானத்தைக் கட்டாயம்!
வாங்குங்கள்!
சம்சாரம் முகம் கூடத்!
தெரியாமல்!
மின்சாரம் படுத்தும் பாட்டில்!
மத்தாப்பு கொளுத்த மறந்துவிடாதீர்கள்!
விலைவாசி ஏறி!
பொருளாதாரம் வீழ்ந்து!
வாங்குவோர் சக்தி குறைந்து!
நிற்கும் இந்தவேளையில்!
சாட்டையைக் கொளுத்தி வீசுங்கள்!
அதுவே சரியான தீர்வு!
அணுகுண்டு செய்ய!
அனுமதி நமக்கு இல்லை!
எனவே நாம் வெடிக்கத்!
தக்கது வெங்காய வெடியே!
அதற்கு முக்கியத்துவம் கொடுங்கள்!
!
சரவெடிகள்!
மழையில் நனைந்த!
மனிதச் சங்கிலிகள் போல் கலைந்தும்!
கலையாமலும் மோசம் செய்யலாம்.!
தனிவெடியே நல்லது.!
புவி வெப்பம் அதிகமாகும்!
ஒலி மாசு அதிர்ந்து விடும்!
அதனால் புகையில்லா!
ஊதுவத்தியே!
இந்தத் தீபாவளிக்குப் போதும்!
புகைந்தால் அதற்கும்!
அபராதம் கட்ட நேரிடும்!
துப்பாக்கிகள் தேவையில்லை!
அவை இலக்(ங்)கை(யை)க்!
குறிவைத்து விடலாம்.!
சுத்தியல் தேவையில்லை!
அது கட்சிச் சின்னம் ஆகிவிட்டது.!
பொட்டுவெடிகளைப் பொசுக்க!
வெறுங்கல்லே போதும்!
கற்காலம் நோக்கி!
நாம்!
பயணிக்கிறோம்!
என்பதற்கு இதுவே சாட்சி!
வெடிகளை வாங்க!
வியத்தகு காரணங்கள் இவை.!
-மு. பழனியப்பன்!
------------------------------!
M.Palaniappan