தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

உன்னோடு வாழாத

அனாமிகா பிரித்திமா
என் முதல் திரை அனுபவம் ... !
நடிப்பதில் அல்ல...!
படம் பார்ப்பதில் !!
படம் பிடித்திருந்தது... !
கதைக்காக அல்ல...!
என்னவருடன் ...!
பார்த்ததற்காக !!
படத்தில் வந்த ...!
ஒரு பாட்டின் போது...!
என்னவர் கூறியது !!
இந்த பாட்டின் வரிகள் ...!
என்னை மனதில்... அல்ல...!
என் மனதில் உன்னை வைத்து ...!
எழுதியது போன்று இருக்கிறது !!
படத்தின் மற்றொரு பாடல்...!
மிகவும் பிடித்தது...!
எனக்கா அல்ல...!
என்னவருக்காக... !
எனக்குப் பிடித்திருந்தது !!
பாடல் எங்களுக்காகவே ...!
எழுதப்பட்டது போன்று...!
இருந்தது !!
இல்லையே !!
!
படத்தில் நடித்தவர்கள் கூட...!
இன்று இணைபிரியா ஜோடிகள் ... !
வாழ்க்கையில் !!
ஆனால் ...!
நாங்கள் ?!
!
-அனாமிகா பிரித்திமா

காத்திருக்கும் காலம்

இளந்திரையன்
இளந்திரையன் !
காலம் நீண்டு செல்கின்றது !
என் மண்ணில் !
ஒரு சுதந்திர மூச்சுக்காய் !
காத்திருக்கும் காலம் !
நீண்டு செல்கின்றது !
பச்சை வயல்களையும் !
குச்சு வீடுகளையும் !
அலையெறியும் கடலையும் -அதில் !
துடிக்கும் கதிரொளியையும் !
பார்த்து நாளாகின்றது !
பாசத்துடன் ஒரு அழைப்பையும் !
நடு நடுங்கும் கரங்களின் !
தலை தடவலையும் -அதை !
உணரும் ஆன்மத்தின் சிலிர்ப்பையும் !
நாட்கள் யுகங்களாகின்றது !
பச்சை டாலர்களும் !
பகட்டு வாழ்க்கையும் !
வெட்கமின்றித் திருடிக்கொள்ளும் !
எல்லாவற்றையும் !
காலம் நீண்டு செல்கின்றது !
காலடியில் நிழலளக்கும் நேரமும் !
கூரையின் மேலால் குதித்துவரும் !
வரியனும் பச்சைப் பூவரசில் !
தேங்கி விடும் வெப்பமும் !
அதற்கும் மேலான சுதந்திரமும் !
என்மனதில் பதிந்துவிட்ட வாழ்க்கையோ !
ஆழ்கடலின் அமுக்கத்தில் !
பொருமி நிற்கும் அமைதிபோல !
ஒரு புயலுக்கு முன்னாலுள்ள !
சினக்கும் கணங்கள் போல !
பார்த்து நாளாகின்றது !
போகும் தூரம் நீண்டுவிடுகின்ற !
போதிலும் தளரா நம்பிக்கை !
தளையிட்டே நிற்கின்றது !
ஏறி மிதித்துவிடும் வேகத்துடனும் !
தோளில் சுமையுடனும் !
தடையில்லா நம்பிக்கையுடனும் !
மூச்சில் அனலுடனும் !
முன்னால் போகின்றவர்களே !
நானும் வந்து விடுவேன்-நம் !
வாழ்க்கை பற்றிய பாடல்களுடன் !
காத்திருக்கும் காலம் !
யுகமானாலும் ஒரு நூற்றாண்டுக் !
கனவுகளுடன் என் மண்ணில் !
ஒரு சுதந்திர மூச்சுடனும் !
அதற்கான நியாயங்களுடனும்

சிரிப்பு

ஜான் பீ. பெனடிக்ட்
அடிமனதின் அழுத்தத்தை!
அறவே அகற்றிடும்!
அரிர்தாஞ்சன்!
நெஞ்ச பாரத்தைக்!
கொஞ்சம் குறைத்திடும்!
வலி நிவாரணி!
பதற்றத்தையும்!
படபடப்பையும் போக்கிடும்!
புகை போக்கி!
சிந்தனைக் குதிரைகளை!
சீரிப் பாயச் செய்திடும்!
ஸ்காட்ச் விஸ்கி!
அக்னி வெயிலின்!
உக்கிரத்தைக் குறைத்திடும்!
தர்பூசணி!
சூறாவளிக் காற்றில்!
சுழன்றிடும் வாழையைத் தாங்கும்!
சவுக்கு மரம்!
அழுபவனையும்!
ஆனந்தத்தில் மூழ்கடிக்கும்!
அன்னை மடி!
நீயும் சிரித்துப்பார்!
சிறகடித்துப் பறந்துபார்!!
ஜான் பீ. பெனடிக்ட்!
வாசிங்டன்

நுழைதல்.. விலகல்.. தெளிதல்..மலை

எம்.ரிஷான் ஷெரீப்
01.!
நுழைதல்!
-----------------!
எந்த நட்சத்திரமும் உதிர்ந்துவிழா பனிபடர்ந்த இரவின் காலம்!
எனது கைவிரல்களை ஒற்றியொற்றி!
உன் நேசத்தைச் சொல்லிற்று!
பசியினைத் தூண்டும் சோள வாசம்!
காற்றெங்கிலும் பரவும்!
அத்திப்பூ மலையடிவாரக் கிராமங்களினூடான பயணத்தை !
முடித்து வந்திருந்தாய்!
குடிநீர் தேடி அடுக்கடுக்காய்ப் பானைகள் சுமந்து நடக்கும்!
பெண்களின் சித்திரங்களை!
புழுதி பறக்கும் தெருவெங்கும் தாண்டி வந்திருந்தாய்!
வெயிலெரித்த சருமத்தின் துயரம்!
உன் விழிகளுக்குள் ஒளிந்திருக்கும்!
அந் நெய்தல் நிலத்தின் அழகை என்றும் மறந்திடச் செய்யாது!
நகரும் தீவின் ஓசை!
நீ நடந்த திசையெங்கிலும்!
பாடலாகப் பொழிந்திடக் கூடும்!
அனற்சூரியனை எதிர்க்கத் தொப்பிகள் விற்பவன்!
வாங்க மறுத்து வந்த உன்னை நெடுநாளைக்கு நினைத்திருப்பான்!
உனைத் தீண்டி நகர்ந்திருந்ததொரு விஷத் தேள்!
உச்சியிலிருந்து சருக்கச் செய்தது அதன் நச்சு!
எல்லாம் கடந்துவிட்டன!
நேற்றிருந்த மேகத்தைப் போல!
இக் கணத்து நதி நீர் போல!
உனது பயணங்கள் முடிவற்றன!
எல்லையற்று நீளும் உனது பாதைகள் வலியன!
ஏமாற்றங்களில் தடுக்கி விழுந்து!
அனுபவங்கள் பல ஒளிந்திருந்த நெஞ்சுனது!
பாளங்களாய்க் கனன்றெரிந்து!
உன் வாழ்வின் கதைகள் பேசிற்று!
உள்ளிருந்த எனக்கான உன் நேசம் சுகமாயும் வலியாயும் மிதந்தூறிட!
தெப்பமென நனைந்தேன்!
நரகப் பெருநெருப்புக்கஞ்சி!
எவருக்கெனவோ மூடிக் காத்திருந்த பொக்கிஷ நந்தவனமொன்று!
நீ வரத் திறந்தது!
அன்று!
உனக்கென உதிர்ந்ததொரு மந்திரப் பூ!
உனக்கெனத் தெளிந்ததொரு வாசனைப் பொய்கை!
உனக்கென மட்டும் துளிர்விடத் தொடங்கியிருக்கிறது ஒரு தளிர்!
எல்லாவற்றையும் குறித்துத் தெரிந்திருக்கிறாய்!
ஆனாலும் சகா!
நீ உணர்வதற்கும் நம்புவதற்கும்!
அப்பாலுள்ளது எனதுலகம்!
02.!
விலகல்!
----------------!
அடைமழை பெய்தோய்ந்த!
நள்ளிரவுக்கு முன்னரான பொழுதின் வளி!
குளிரில் ஒடுங்கிக் கண்ணாடியில் தன்னைப் பார்க்கும்!
பனியை விரலிலேந்தி கடைசிப் பேரூந்திலிருந்து இறங்கினாய்!
பகலை விடவும் இருளிடம் இருக்கின்றன!
பல்லாயிரம் விழிகள்!
அன்று ஒவ்வொரு விழியின் துளியுமிணைந்து!
தெருவெங்கும் குட்டைகளாய்த் தேங்கியிருந்ததை!
தாண்டித் தாண்டி நீ வந்த காட்சி!
இருளின் கறுப்புத் திரைக்குள் மறைந்தது!
பட்ட மரத்தின் அடிப்பாகத்தில்!
புற்றெழுப்பும் கரையான்களைக்!
கொத்த வரும் சாம்பல்குருவிகளை!
பொறி வைத்துப் பிடிக்க ஆவலெழும்!
வேட்டைக் கதைகளை நீ கொண்டிருந்தாய்!
நாம் கதைத்தபடியே நடந்து கடந்த!
எனது கிராமத்தின் ஒற்றையடிப் பாதை!
வழித்தடங்களிலெல்லாம் அக் கதைகள் சிந்தின!
விடிகாலையில்!
அக் கதைகளைப் பொறுக்கித் தின்ற சாம்பல்குருவிகள்!
தொலைதூர தேசமேகிப் பின்னர் வரவேயில்லை!
உன்னைப் போலவே!
!
03.!
தெளிதல்!
-------------------!
ஏமாற்றத்தின் சலனங்களோடு!
மெல்லிய வேனிற்காலம் தொடர்ந்தும்!
அருகாமையை எண்ணச் செய்தவண்ணம் தேய்கிறது!
மழை பெய்யலாம் அல்லது பெய்யாது விடலாம்!
இரண்டையும் எதிர்கொள்ளத் தயாராகவே இருக்கிறேன்!
எல்லாவற்றையும் அதிர்ந்துபோகச் செய்த இறுதிக் கணங்கள்!
மிகப் பற்றுதலோடு என்னைப் பிடித்திருந்தன!
வாழ்வைப் பற்றிய பற்றுதல் குறித்து இனி எதுவும் எழுதுவதாயில்லை!
மகிழ்ச்சி ததும்பிய நேற்றின் தருணங்கள்!
ஒரு புகையென மறைந்து அழிந்துவிட்டன!
நூதனங்களை மிஞ்சிய பழங்காலத் தடயமொன்றைப் பேணிக் காக்கும்!
மூதாட்டியொருத்தியைப் போல எல்லாவற்றையும் சுமந்து திரிவதில்!
விசனப்படத்தான் வேண்டியிருக்கிறது!
மிக எளிய ஆசைகள் கொண்டு!
நான் பூட்டிய குதிரைகள் தப்பியோடினவோ!
புழுதி மட்டுமே எஞ்சியிருக்கிறது!
வெளிச்சம் எதிலுமில்லை!
கடற்கரையெங்கிலும் மணற்துகள்கள்!
அகலும்போது உறுத்துவதைத் தட்டிவிடத்தான் வேண்டியிருக்கிறது!
ஊரில் கடலற்ற சிறுவனின் பாதம் நனைக்க!
அலைகளும் எங்குமில்லை!
நேற்றைய சமுத்திரத்தோடு அது ஓய்ந்துவிட்டது!
எந்த நேசமுமற்று எப்பொழுதும்!
உனது தேவைகளுக்காக மட்டுமே நான் பயன்படுத்தப்பட்டேன் எனும்!
ஏமாற்றத்தின் முதல் தளிரோடு!
ஒரு கவிதை எஞ்சியிருக்கிறது தலைப்பேதுமற்று!
நாளைக்கு இருக்கும் முகம் உனதானதில்லை!
04.!
மலையுச்சிப் பூவின் தியானம்!
-------------------------------------------!
கைக்குழந்தை உள்ளங்கையென மொட்டவிழ்கிறது!
பறிக்கப்படாத கனிகள் வீழ்ந்தழியும் மலைத் தரைகள்!
வனப்பு மிக்க காடுகளைச் சுமக்கின்றன தம்மில் அவை!
அந்திப் பறவைகள்!
கறுப்புத் திட்டுகளாகப் பறந்து மறையும்!
மாலை நேரங்களில் வனங்கள் என்ன செய்யும்!
உன் பாடலெனப் பொழிந்திடும் மழை பார்!
ஒவ்வொரு துளிகளிலும் உறைந்திருக்கக் கூடும்!
தாண்டிப் பறந்த பட்சி இறகுகளின் ரேகைகள்!
நீ மிதந்திருக்கிறாய் ஒரு வெண்குதிரையின் மீது!
யாரும் அகற்றிடா ஆதிச் சருகுகள் மூடி மறைத்திருக்கும்!
தடித்த வேர்கள் பிடித்து வைத்திருக்கும்!
கருங்கற் குகைகளிடை வழி!
உனது பயணப் பாதையல்ல!
நீ பறித்து வரச் சென்ற மலையுச்சிப் பூவின் தியானம்!
கடவுளுக்கானது!
காட்டின் விரூபங்களை மறைக்கும் இராப் பொழுதுகளில்!
உதிக்கும்!
மலையுச்சிப் பூவின் சோர்ந்திடாத் திமிர்!
உனது இலக்குகளில்!
பகலைக் கரைத்த ஈரம் சொட்ட அழுத சூரியன்!
எங்கோ தொலைந்துபோகும் இத் தருணத்தில்!
தாமதியாதே!
வனத்தின் வேர்களில் உனது புரவிகள் சற்று ஓயட்டும்

வானங்கள், பூமிகள் மீது சத்தியமாக

பர்ஸான்.ஏ.ஆர்
குளிர்ந்து கிடக்கும் என் நிலத்தின்!
குளிர்ச்சியடையும் முன்னான!
மூக்கையரிக்கும் மிக இனிய சுவாசத்தினிதம்!
மனதினுள்ளே புதைந்து புதைந்து விருட்சமாகி விட்டது..!
அந்த நினைவனுபவத்தின் முதிர்ச்சிகள்!
உன் மீதான வாசிப்பின் பின் பகிர்தலில்!
உன்னாலே காவு கொள்ளப்படுகிறது.!
எனது மிகச்சிறிய பருவத்தின் ஆரம்பமே!
உன் காவுகளின் பிரதிகளை!
என்மீது பதியவிட்டுக்கொண்டே வளர்ந்தது.!
நீங்கள் எத்தனைபேர்/நிலங்கள்!
காவுக்காய் அல்லாஹ்வால் படைக்கப்பட்டீர்கள்..?!
சில இடங்களில் தமிழிலுள்ள கெளரவ வசனங்களால்!
நீ முகமறைக்கிறாய்!
அதுவொரு துன்பியல் நிகழ்வு.!
இசை நிரம்பிக்கிடக்கும்!
எனக்கேயான நீண்ட கடலினை காவிவிட்ட சுனாமியைவிட!
உன் ஆணவமும் திமிரும் மிகக்கடும் கொடிய கேவலம்.!
உன் பலவீனங்களுடன்!
நீதானே திரையிட்டுக்கொண்ட அதிகாரம்.!
இறுகிப்போன உனது அதிகாரம்!
மழைபோல் கொட்டித்தீர்த்துவிட்டு!
செய்வதறியாது திகைத்து நிற்பாய்/நிற்கும் எப்போதும்,!
உன்னிடம்தானே நிறம்பிக்கிடக்கிறது!
கெளரவ வசனங்கள்.!
--பர்ஸான்.ஏஆர். !
04.07.2007

வதந்தி

வேதா. இலங்காதிலகம்
வெடித்துப் பறக்கும் இலவம் பஞ்சு.!
துடித்துப் பறக்கும் வதந்திப் பஞ்சு.!
படித்துக் கேட்டு வெடிக்கும் நெஞ்சு.!
அடிக்கும் கோபம் தடுத்தும் மிஞ்சும்.!
நாகாக்காததால் எழும் வார்த்தைப் பந்தி.!
சோகாக்குமிப் பெரும் சோலிச் சந்தி.!
ஆதாரமின்றிச் செவியோடு பரவும் கெந்தி.!
சேதாரமாக்கும் பலர் வாழ்வைக் கொந்தி.!
வசந்தத்திற்கு இது ஒரு நந்தி.!
வதந்தி பூதமெனத் தரும் பயப்பிராந்தி.!
இதம் தராதிது ஒரு வகைக் கிரந்தி.!
இது நூலற்ற பட்டம், வலைபின்னும் சிலந்தி.!
ஆற்றாமையால் புரண்டு விழும் வாந்தி.!
ஆத்திரத்திலும் சிறகு விரிக்கும் முந்தி.!
அச்சுக்கூடமற்ற அதிவேகப் பத்திரிகைச் செய்தி.!
அமைதி நெஞ்சை அசைக்காது வதந்தி.!
!
- பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.!
ஓகுஸ் டென்மார்க்

நின்னைத் துதித்தேன்

சத்தி சக்திதாசன்
சக்தி சக்திதாசன்!
!
நின்னைத் துதித்தேன் - நின்!
நினைவில் கலந்தேன்!
என்னை மறந்தேன்!
எழுத்தாய்ச் சுரந்தேன்!
ஆயின நூற்றோடு ஒரு!
அகவைகள் இருபத்திஜந்து!
அவனியில் நீ பிறந்து!
அன்னைத்தமிழின் மைந்தனாய்!
தமிழைப் போற்றினாய்!
தமிழாய் வீசினாய் - ஜயா!
தமிழாய் மணந்தாய்!
தமிழைச் சுமந்தாய்!
கார் முகிலாய் நீயும்!
கவிதை பொழிந்தாய்!
கவிதை செய்தே பார்கவி!
கர்ஜனை புரிந்தாய்!
சுதந்திரக் காற்றாய்!
சுந்தரத் தமிழில்!
சொரிந்த கவிதைகள்!
சிலுப்பின உணர்வினை!
கனவாய் நீ கண்ட!
கற்பனைச் சுதந்திரம்!
நினைவாய் ஆனதொரு!
நிகழ்வாய் நீயானாய்!
ஆணுக்குப் பெண் உலகில்!
அடிமையில்லை என்னும்!
அழியாத உண்மையை!
அடித்துச் சொன்னவனே!
பிறப்பால் வந்ததல்ல!
பிழைதான் ஜாதிபேதமென!
பகன்றாய் துணிவுடனே!
பழித்தார் பித்தனென உன்னை!
என்னருமைப் பாரதியே!
என்னெஞ்சின் ஒளி நீயே!
என்றென்றும் அகிலத்திலே!
எரியும் ஞானச்சுவாலை நீயே!
பிறந்த தினம் உனக்கு!
மறந்ததில்லை உனை ஒரு கணமும்!
திறந்த இதயத்தோடு உனை!
தியானிக்கிறேன் எந்தையே!
வணக்கத்துடன்!
சக்தி

மொட்டுக்கள் மலர்கின்றன !

ஜே.ஜுனைட், இலங்கை
இயற்கை மூடி வைத்த!
மொட்டுக்கள் ஒவ்வொன்றும்!
சிறுசத்தம்போட்டு உலகை!
எட்டிப் பார்க்கின்றன!
பூக்களாக…!
பூவுலகின்!
சிறுதூண்டலால்!
அழகழகாய்!
மலர்கின்றன!
எழில் பூக்கள் - தம்!
புறவிதழால்!
புதுக் காற்றை!
பிடிபிடித்தும்!
பார்க்கின்றன…!
வளிபோன போக்கில்!
அசைந்தாடவும்!
வாயின்றி சில வார்த்தை!
இசை போடவும்!
வான் போடும் மழை நீரில்!
விளையாடவும்!
வையத்தில் தேன் பூக்கள்!
பூக்கின்றன.!
ஒரு மொட்டு!
மலரும் போது…!
மெல்லப் பேசுகின்றது…!
பேசும் விழிகளால்!
புன்னகை பூக்கின்றது…!
பூமிக்கு!
வளையோசை கேளாமல்!
காற்றிலே நடனம் ஆடுகின்றது…!

தலைவனின் மதம்..சாபத்துக்..பாதுகாப்பற்ற

ரோஷான் ஏ.ஜிப்ரி
தலைவனின் மதம்.. சாபத்துக்குரியவனின் வாழ்வு!.. பாதுகாப்பற்ற உலகத்தில் வசிப்பவள்!!
01.!
தலைவனின் மதம்!
---------------------------!
மக்களுக்காக தலைவர்கள்!
வாழ்ந்த காலம் போய்!
தலைவர்களுக்காக!
மக்கள் வாழ வேண்டிய!
கலி காலம் இது..!
இங்கும் எனக்கு தெரிந்த!
ஒரு கோண் கோலோச்சுகிறான்!
திசைகள் நாற்புறமும் மந்திரித்து!
பூதங்கள் நிறுத்தியிருகிறான்!
ஏவல்,விலக்கல் இரண்டும்!
அவனது ஆணையின் படியே!
ஆகுமானதாகிறது...!
வாக்கையும்,வசதியையும் வழங்கியவன்!
கஞ்சிக்கும் வழியற்று !
கல்வெட்டு கனவுகளில்...,!
வாக்கையும்,வசதியையும் வாங்கியவன்!
வெல்வெட்டு விரிப்புகளின் !
வீராப்பு இருக்கைகளில்!
தலைவனின்!
இருப்பின் சௌகரியத்தை!
மேல் நாட்டு நாய் கம்பிரமாய்!
குரைத்து சொல்கிறது “வாவ்” வென..!
அந்த தெருவே குலை நடுங்கும் அளவு!
வசதியின் அனைத்து படித்தரங்களும்!
அரண்மணையின் தட்டுகளை!
நிறைத்து இருக்கின்றன!
இறக்குமதி மதுபான புட்டிகள்!
குவளைகளுக்குள் குதிக்க!
தயாராகி நிற்கின்றன!
கண்ணாடி மேசியில்!
தடாகத்தில் நீந்துகின்றன!
தலைவன் விரும்பி உண்ணும்!
செதிலற்ற மீன்கள்!
இப்போதும் அவனது கல்லையில்!
இரண்டு துண்டுகள் வலதும்,இடதுமாய்!
“செகுருட்டி கமரா” என்னும்!
தெய்வங்களை வழிபட்டபடி!
தலை நகரில் தரித்திருக்க!
தலைவனின் மதம் படர்ந்து!
வேர் பிடிக்கிறது என் மண் பற்றி!!
!
02.!
சாபத்துக்குரியவனின் வாழ்வு!!
------------------------------------------!
வேறொருவரை!
வலிந்து தினிப்பதர்க்கென!
அரசின் பட்டியலிலிருந்து நீக்கப்படுகிறது!
கண்களில் தேக்கி வைத்திருந்த!
வீடெனும் கனவு!
பின்புலம் அற்றவனின் வாழ்வு!
அக்கணமே சாபத்துக்குரியதாகிறது!
இன்றைய குடில் புற்றில்!
நீர்ப் பாம்புகள் சீறியபடி!
சூரியனை நோக்கி படமெடுக்க!
குடும்ப அரங்கில் வசை வசூல்!
களை கட்டுகின்றன பேச்சு வாக்கில்!
கல்லா கையாலாகத்தனத்தை கௌரவித்து!
விளை நிலங்களில் தத்துப்புழு தாவி!
அறக்கொட்டியென மேய!
தூற்றி விடப்படுகின்றது!
நம்பிக்கையின் கடைசி மணியும் பதரென!
எஞ்சிய மூட்டைகளாலாகும் நிவாரணம்!
இடைத்தரகர்களின் விலை நிர்ணயமாக!
எதிர் பார்ப்பின் கால்கள் இடர!
உடைந்த வக்கடைகளில்!
இடிந்து விழுகிறது முகம் குப்புற மனசு!
பரண் திடலில் நாட்டிய!
ஆள் விரட்டி பொம்மையென!
வரப்பில் வரிசையாய்!
கொடுப்பனவு பாக்கியுள்ள கூலிகள்!
“வேலையற்றவனின் வேலையென்று”!
மனைவி போனமுறை!
சொன்ன சொற்கள்!
கன்னத்தில் அறைந்து விட்டு போக!
துரத்திய யானைகளின் பிளிறல்!
ஒலிக்கின்றன செவியின் சுவரில்!
மரணத்தை தோற்றுவிக்க தக்கதாய்!!
03.!
பாதுகாப்பற்ற உலகத்தில் வசிப்பவள்!!
------------------------------------------!
புண்ணிய பூமி என்ற!
கன்னி கழிந்த!
மனிதம் தொலைந்த மண்ணின்!
வனாந்திரத்தில் வாழ்வது!
எத்தனை கடினம் என்பது!
இருள் சூழ்ந்த இன்றைய!
விஷமப் பொழுதுகளிலிருந்து!
விளங்க முடிகிறது..!
திரும்பும் திசையெங்கும் திகில் முகங்கள்!
பூக்கூடைகள் வைத்திருக்கும் என்மேல்!
சாக்கடையினை வாரியிறைக்க!
சமயம் பார்த்தபடி காலம்!
வழி நெடுகிலும் பின் தொடர்ந்து!
நிலவுவரை சென்று திரும்பி!
வாசல் வரை வர்ணிக்கிரவன்!
சந்தடிகளற்ற சமயம் ஒன்றிற்கே!
சாதகம் பார்க்கிறான்!
நெரிசலில் உரசியபடி தினமும்!
அருவருப்பின் உச்சத்தில் மேய்ந்து!
நெளிகின்றன மண் புழுக்கள்!
என் ஏற்ற இறக்கங்களை!
கொத்திப் பறக்கின்றன!
பெயர் தெரியாத கழுகுகள்!
முள்ளம் பன்றிகளின் ஆக்கிரமிப்பில்!
எனது சேனை நிர்மூலமாக!
இன பந்தங்களை தொலைத்த மண்ணில்!
இன்றைய என் இருப்பின்!
இருபத்து நான்காவது!
இறுதி மணித்துளியும்!
பாதுகாப்பு அற்றதாகவே ஆயிற்று!
எனவேதான் நான்!
வாழ்வின் கடைசி பாடலை!
கடலிடமே சொல்லி கரைகிறேன்

தானிய‌ங்கி குழாய்க‌ளும்.. அமைதியை

உயிரோடை லாவ‌ண்யா
தானிய‌ங்கி குழாய்க‌ளும் நானும்.. அமைதியை விளைவித்த‌ல்!
01.!
தானிய‌ங்கி குழாய்க‌ளும் நானும்!
-----------------------------------------!
கை நீட்டினால் !
த‌ண்ணீர் கொட்டும்!
தானிய‌ங்கி நீர்க் குழாய்க‌ளும்!
த‌லையைத் த‌ட்டினால்!
நீர் த‌ந்து பின் தானே !
நிற்கும் குழாய்க‌ளும்!
ஏனோ பிடிப்ப‌தில்லை!
என‌க்கு !
முத‌ன் முத‌ல்!
தானிய‌ங்கி குழாயில்!
எப்ப‌டி கைய‌லம்புவ‌தென்று!
குழ‌ம்பி அவ‌மான‌ம்!
அடைந்த‌தாலோ!
குழாயை நிறுத்தாமல்!
வீட்டில் ப‌ழ‌க்க‌ தோச‌த்தில்!
இருந்து விடுவாதாலோ!
சோம்ப‌லை வ‌ள‌ர்ப்ப‌தாலோ!
கார‌ண‌ம் எதுவாயினும்!
தண்ணீர் தேவைய‌ற்று!
வீணாகிற‌தே இந்த‌ தானிய‌ங்கி!
குழாய்க‌ளில் என்ப‌து!
ம‌ட்டும் கார‌ண‌மில்லை.!
!
02.!
அமைதியை விளைவித்த‌ல்!
--------------------------------!
என் நுழைவின் பின்!
தானே அடைத்துக் கொள்ளும்!
தானியங்கிக் க‌த‌வுக‌ள் !
என்னை ப‌ய‌ங்கொள்ள‌ச்!
செய்கின்ற‌ன‌.!
திறந்து வெளியேற‌வோ!
சிறு ஆசுவாச‌ம் செய்து!
கொள்ள‌வோ தேவைப்ப‌டும்!
அடையாள இல‌ச்சினை!
எந்த‌ நேர‌மும் தொலைத்துவிடும்!
ப‌ய‌த்தோடே இய‌ங்குகிறேன்.!
பொருட்க‌ளை இட‌ம்மாற்றி !
வைக்கிறேன்!
புறப்படும் முன் !
எடுக்க‌ வேண்டிய‌வ‌ற்றை!
ப‌ட்டிய‌லிட்டு எழுதியும் வைக்கிறேன்!
நேர்த்தியாக‌ திட்ட‌மிடுகிறேன்!
பின்னும் தீர்வதில்லை ச‌ந்தேக‌ங்க‌ள்!
எல்லாம் முடிந்த பின்!
இங்கிருந்து செல்ல‌ முடியுமா?!
செல்லும் முன் எல்லாம் !
ச‌ரியாக‌ முடிந்துவிடுமா!
க‌த‌வுக‌ளோ அடையாள‌ இல‌ச்சிக‌ளோ!
அத‌ன் நியாய‌ங்க‌ளை செய்த‌!
வ‌ண்ண‌மே இருக்கின்ற‌ன‌!
என்றாலும் ச‌ந்தேக‌ங்க‌ள்!
என்னோடே ப‌ய‌ணிக்கின்ற‌ன‌!
அனிச்சையாய் சுழலும் சுவாச‌ம் போல‌.!
ச‌ரி..!
தானியங்கிக் க‌த‌வுக‌ளோ!
இருப்பை ப‌திவிக்கும் !
அடையாள‌ இல‌ச்சினைக‌ளோ !
இல்லாத‌ ஓரிட‌த்தில்!
ம‌ட்டும் அமைதியின் நெற்பயிர்க‌ள்!
தானே விளைந்திடுமா என்ன‌