ராஜ்பவன் கனவுகள் - புதியமாதவி, மும்பை

Photo by engin akyurt on Unsplash

புதியமாதவி, மும்பை. !
கனவு காணுங்கள் !
விடிந்துவிடும் !
நம் கலாம் சொல்லலாம் !
எங்கள் கவிதைகள் !
சொல்லுமோ? !
கனவுகள் காண விழிகள் வேண்டுமே !
கனவுகள் எழுத இமைகள் வேண்டுமே !
விழிகளில்லாத இமைகள் !
இமைகள் எரிந்த விழிகள் !
எப்படி எழுதுவது !
எங்கள் கனவுகளை. !
இமயத்தைப் புரட்டிப்போடும் !
நெம்புகோல் கவிதையை !
இந்த நொடியிலும் !
என்னால் !
உங்கள் அவைக்குத் தரமுடியும் !
அதனால் என்ன பயன்? !
கங்கையும் காவிரியும் !
இணைந்திடவா போகிறது? !
எல்லோருக்கும் விடுதலை !
எல்லோருக்கும் சம உரிமை !
மக்களாட்சியின் மகத்துவத்தை !
எழுதிய சட்டங்கள் !
வாழ்ந்து கொண்டிருக்கிறது !
செங்கோட்டையில். !
ஆனால் !
நாங்கள் மட்டும் எப்போதும் !
வெண்மணியில் எரிந்து !
தாமிரபரணியில் கரைந்து !
ஊடகங்கள் காட்டமறுக்கும் !
கோர முகத்துடன் !
புதைந்து கொண்டிருக்கிறோம். !
டாலர்க் கனவுகளில் !
கணினி மூலைகள் !
கடவோலைக்காக காத்திருக்கின்றன. !
இரட்டைக் குடியுரிமைப் பேசும் !
பச்சை அட்டைகளின் !
பாதம் நக்கிய !
இந்திய நாக்குகள் !
வல்லரசுகளின் ஒப்பந்தகோப்பையில் !
மதுவருந்தி !
மயங்கிக் கிடக்கின்றன. !
சட்டம் ஒழுங்கு !
கெட்டுப்போனதாய் !
நித்தமும் குரைக்கின்றன !
அரசியல் மேடைகள். !
மறதி எப்போதும் !
மனிதகுணம் என்பதால் !
வாழ்ந்துகொண்டிருக்கிறது !
கூட்டணி பேரங்கள். !
குடிசைகள் இல்லாத !
மும்பையின் சாலைகள் !
சாத்தியப்படுமா? !
எத்தனைக் கோடிகள் !
எத்தனைச் சட்டங்கள் !
எத்தனைத் திட்டங்கள் !
அத்தனையும் தலைகுனிகிறது !
ஓட்டைக்குடிசைகளின் !
கிழிசல்கள் கண்டு. !
புரிந்துகொள்ள முடிவதில்லை !
சமுதாய ரசனையை. !
சந்திரமுகியுடம் ஆடிய கண்கள் !
தவமாய்த் தவமிருக்கும் !
விசாலமான பார்வை !
விசித்திரமான காட்சிகள் !
எப்போது நடக்கிறது !
எங்கள் நாடகமேடையில். !
எங்கள் பதினாறு வயதில் !
எந்தை சொல்லுவார் !
எப்போதும் !
உதவி வேண்டுமானால் !
கேட்டுவிடு காவல்துறையிடம். !
இன்று- !
எங்கள் புதல்விகளுக்கு !
எங்கள் தந்தையர் சொன்ன மந்திரத்தை !
தரணியில் சொல்லமுடியாமல் !
தலைகுனிந்து நிற்கிறது !
எங்கள் சரித்திரம். !
'விடுதலை விடுதலை !
எல்லோருக்கும் விடுதலை' !
இப்படி எல்லாம் !
விடுதலைப் பண்பாடி !
விண்ணதிர ஆடிட !
எனக்கும் ஆசைதான் !
ஆனால் !
ரத்தம் சிந்தாத போராட்டங்களில் !
ஆயுள்கைதியாகும் விடுதலை !
சமத்துவமில்லாத சமுதாயத்தில் !
தூக்கிலிடப்படுகிறது. !
எங்கள் !
போராட்டக்களத்தில் மட்டுமே !
எழுதப்பட்டிருகிறது !
சமுதாய மீட்சி. !
எதிரிகளை வீழ்த்தும் !
இமாலயப் போர்களின் !
வெற்றி முரசுகள் !
வெற்றி மயக்கத்தில் !
எதிரிகளிடமே !
விற்கப்படுவதும் !
விலைபோவதும் !
தொடர்கதையாக !
தொடரும்வரை !
எப்படி எழுதுவேன் !
சமத்துவ சமுதாயத்தின் !
சரித்திரக் கனவுகளை? !
தோற்றுப்போவது !
கனவுகள் மட்டுமல்ல !
கனவுகளைச் சுமந்த !
எங்கள் தலைமுறையின் !
போராட்டங்களும்தான். !
இனி- !
நாங்கள் கனவுகளை !
விலக்கி வைக்கின்றோம் !
மன்னிக்க வேண்டும் !
வல்லரசு கனவுகாணும் !
ராஜ்பவன் தோட்டங்கள். !
மன்னிக்க வேண்டும் !
கனவுகளைத் தின்று கொழுத்த !
எங்கள் கவிதைராசாக்கள். !
மன்னிக்க வேண்டும் !
கனவு வரிகளில் !
உங்கள் விருதுகளுக்காக !
காத்திருக்க மறுக்கும் !
எங்கள் கறுப்பு கவிதைகளை
புதியமாதவி, மும்பை

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.