கவிதை
கவிதைகள்
சாதி மறு! சண்டையொழி!
- விவரங்கள்
- பிரிவு: கவிதைகள்
- வெளியிடப்பட்டது: வியாழக்கிழமை, 07 செப்டம்பர் 2017 08:52
- எழுத்தாளர்: வித்யாசாகர்
- படிப்புகள்: 3471
சதையறுக்கும் பச்சைவாசம்
ஐயோ சாதிதோறும் வீசவீச,
தெருவெல்லாம் சிவப்புநாற்றம்
முட்டாள்கள் மேல்கீழாய் பேசப்பேச!
மாக்க ளூடே சாதி வேறு
மண்ணறுக்கும் சாதி வேறு
மனிதங்கொல்லும் சாதியெனில் – அதைச்
சாக்கடையில் விட்டெறிடா!
பெற்றவயிற்றில் மூண்ட நெருப்பு
வெற்று சாதிக்காய் மூண்டதுவே,
பத்துமாதம் சுமந்த நெஞ்சில் – தீண்டாமை
தகதிமிதோம் ஆடுதுவே;
ஐயகோ பூமிப் பந்தை
அற்பசாதி அறுத்திடுமோ
ஓட்டைத்தட்டில் வறுமையென்றால்
உயிர்க்கொண்டு அடைத்திடுமோ..?
வீட்டுக்குவீடு சாதிப்பேச்சு
ஊரெல்லாம் ரெண்டாப் போச்சே,
அடேய்; மனிதத்தை விற்காதே, நில்
இனி மிருகங்களே காரி உமிழும்!
மிச்சத்தை மீட்கவேனும்
மனிதர்களாய் ஒன்று கூடு,
அங்கே ஆடையற்று கூட நில்
சாதியோடு நின்று விடாதே;
சாதியை விடு..
சாதி போகட்டும் விடு..
ஓ மனிதர்களே வா’
என் மனிதர்களே வா “நான் சாதியற்றவன்”
சொல் “நான் சாதியற்றவன்”
சாதியற்ற இடத்தில்தான் நாளை
மனிதர்கள் மனிதர்களாகப் பிறக்கக் கூடும்,
மழை நிலா காற்று போல நாமும்
மனிதர்களாக பிறப்போம்; மனிதர்களாக மட்டுமே மடிவோம்!
- வித்யாசாகர்
Add a commentபுரிதல்
- விவரங்கள்
- பிரிவு: கவிதைகள்
- வெளியிடப்பட்டது: வெள்ளிக்கிழமை, 29 ஜூலை 2016 11:43
- எழுத்தாளர்: எரிசுடர்
- படிப்புகள்: 2497
என்னை நான் அறிந்து கொள்ள
எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும்
உன்னையே மேம்மேலும் அழகாய் காட்டுகிறது காலம்.
காத்திருக்கிறேன்,
என்னை நான் முற்றிலும்
தெரிந்து கொள்ளும் முத்தான நாளுக்காய்
-எரிசுடர்
Add a comment
இயைந்த நிலை
- விவரங்கள்
- பிரிவு: கவிதைகள்
- வெளியிடப்பட்டது: புதன்கிழமை, 01 பிப்ரவரி 2017 12:09
- எழுத்தாளர்: மௌனன்
- படிப்புகள்: 4227
அடுத்து வரப்போகும்
குளிர்காலத்துக்கான எரிபொருளாக
இப்போது உதிரும் இலைகளையே சேமிக்கிறேன்.
ஒடிந்து விழுந்த சின்னஞ்சிறு
விறகுகள் தவிர்த்து
மரங்களின் கிளைகளில்
கத்தி வைத்துவிடாதவனாக என்னை
இந்த இயற்கையின் முன்
விசுவாசத்தோடு இருக்கவிடுகிற
சாத்தியங்களை யாசிக்கிறேன்.
நிறைய மலர்களோடு வரவிருக்கும்
வசந்த காலத்திற்கு
கிளைகளுடன் கூடிய மரங்களை
குளிர் பொறுத்தேனும்
விட்டு வைத்திருக்க விரும்புகிறேன்.
இயற்கையின் முன்
மண்டியிடுபவனாகவே இருந்துவிடுகிறேன்.
என் தலைமீது
இயற்கையின் பாதமிருக்கட்டும்.
- மௌனன்
Add a commentவிடியல்
- விவரங்கள்
- பிரிவு: கவிதைகள்
- வெளியிடப்பட்டது: புதன்கிழமை, 27 ஜூலை 2016 18:22
- எழுத்தாளர்: நித்ய ஜெய ஜோதி
- படிப்புகள்: 2836
விடியல்
நீல வானில் உலா வந்த நிலவு
அழைத்துப் பேசியது பூங்காற்றை.
விசுக்கென்று கிளம்பியது காற்று
பசும் மரக்கிளைகளில்
ரகசியப் பேச்சு.
சருகுகள் பறந்தன
ஆற்றுநீர் விழித்துக்கொண்டாட்டம்
மலையருவி வீழ்ந்த இடமெல்லாம்
முத்துப் பரல்களாய்
நிலாத்துண்டுகள்
பூக்கள் எல்லாம் சோம்பல் முறித்தன.
விடியப் போகும் செய்தியை
இப்படிச் சொல்லி அனுப்பியது
குறும்பு நிலா.
சூரியனின் வருகையை-
'தாமரைக்கு'
-நித்ய ஜெய ஜோதி
Add a commentபாயு மொளி நீ யெனக்கு
- விவரங்கள்
- பிரிவு: கவிதைகள்
- வெளியிடப்பட்டது: சனிக்கிழமை, 30 ஜூலை 2016 14:43
- எழுத்தாளர்: சி.சுப்ரமணிய பாரதியார்
- படிப்புகள்: 2957
பாயு மொளி நீ யெனக்குப் பார்க்கும் விழி நானுனக்கு;
தோயும் மது நீ யெனக்குத் தும்பியடி நானுனக்கு;
வாயுரைக்க வருகுதில்லை, வாழிநின்றன் மேன்மை யெல்லாம்;
தூயசுடர் வானொளியே! சூறையமுதே! கண்ணம்மா!
வீணையடி நீ யெனக்கு, மேவும் விரல் நானுனக்கு;
பூணும் வடம் நீ யெனக்கு, புது வயிரம் நானுனக்கு;
காணுமிடந்தோறு நின்றன் கண்ணி னொளி வீசுதடி!
மாணுடைய பேரரசே! வாழ்வு நிலையே! கண்ணம்மா!
வான மழை நீ யெனக்கு, வண்ணமயில் நானுனக்கு;
பான மடி நீ யெனக்குப் பாண்டமடி நானுனக்கு;
ஞான வொளி வீசுதடி, நங்கை நின்றன் சோதிமுகம்;
ஊனமறு நல்லழகே! ஊறு சுவையே கண்ணம்மா!
வெண்ணிலவு நீ யெனக்கு, மேவு கடல் நானுனக்கு;
பண்ணுசுதி நீ யெனக்குப் பாட்டினிமை நானுனக்கு;
எண்ணியெண்ணிப் பார்த்திடிலோர் எண்ணமிலை நின்சுவைக்கே;
கண்ணின் மணி போன்றவளே! கட்டியமுதே! கண்ணம்மா!
வீசு கமழ் நீ யெனக்கு, விரியுமலர் நானுனக்கு;
பேசுபொருள் நீ யெனக்குப் பேணு மொழி நானுனக்கு;
நேசமுள்ள வான்சுடரே! நின்னழகை யேதுரைப்பேன்?
ஆசை மதுவே, கனியே, அள்ளு சுவையே கண்ணம்மா!
காதலடி நீ யெனக்குக் காந்தமடி நானுனக்கு;
வேதமடி நீ யெனக்கு, வித்தையடி நானுனக்கு;
போதமுற்ற போதியிலே பொங்கிவருந் தீஞ்சுவையே!
நாதவடி வானவளே! நல்ல உயிரே கண்ணம்மா!
நல்லவுயிர் நீ யெனக்கு, நாடியடி நானுனக்கு;
செல்வமடி நீ யெனக்கு, சேம நிதி நானுனக்கு;
எல்லையற்ற பேரழகே! எங்கும் நிறை பொற்சுடரே!
முல்லை நிகர் புன்னகையாய்! மோதுமின்பமே! கண்ணம்மா!
தரையடி நீ யெனக்குத் தண்மதியம் நானுனக்கு;
வீரமடி நீ யெனக்கு, வெற்றியடி நானுனக்கு;
தாரணியில் வானுலகில் சார்ந்திருக்கும் இன்பமெல்லாம்
ஓருருவமாய்ச் சமைத்தாய்! உள்ளமுதே! கண்ணம்மா!
-சி.சுப்ரமணிய பாரதியார்
Add a commentமே தினப் பாடல்
- விவரங்கள்
- பிரிவு: கவிதைகள்
- வெளியிடப்பட்டது: சனிக்கிழமை, 30 ஏப்ரல் 2016 22:45
- எழுத்தாளர்: ஞானகுரு
- படிப்புகள்: 2706
உழைத்திடுவோம் உயர்ந்திடுவோம் உழைப்பினை போற்றுவோம்!
உழைத்திடுவோர் உயர்ந்திடவே உழைப்பினை போற்றுவோம்!
வேர்வையும் வாசம் வீசுமே!
மேநாளின் மேன்மை பேசுமே!
பாலை கூட பூக்கள் பூக்கும் சோலை ஆக ஆக்கு'மே'!
சேற்றில் கூட நாற்றை ஊன்றி சோற்றை ஈனு'மே'!
வேட்டை யாடும் காட்டு வாழ்வை மாற்றி வீட்டைக் காட்டு'மே'!
நீங்கள் காணும் யாவும் யாவும் எங்கள் ஆக்க'மே'!
பார் அதோ! உழைப்பாளியால்...
விதை பூவாகி காயாகுதே!
திடல் ஜோரான வீடாகுதே!
பார் இதோ! உழைப்பாளியை...
தினம் சோறின்றி நோயாகிறான்!
ஒரு வீடின்றி தான் வாழ்கிறான்!
தேகம் தேயும் கைகள் ஓயும் ஓடும் கால்கள் ஓடு'மே'!
வேகம் கூட சோகம் ஓட காலம் கூடு'மே'!
ஆலை ஓட்டி ரேகை தேய்ந்த கையில் ஆட்சி மாறு'மே'!
பாரம் ஏற்றி வாடும் தோளில் மாலை ஏறு'மே'!
விதைத்தோமே வளர்த்தோமே அடைந்தோமா? தோழா! தோழா!
உழைத்தோமே களைத்தோமே உயர்ந்தோமா? தோழா! தோழா!
நீ யாரோ நான் யாரோ பாட்டாளி ஆனோம் தோழா!
நீ வேறோ நான் வேறோ கூட்டாளி ஆவோம் தோழா!
உழுதோம் அதனைப் புசித்தோமா?
தறிதான் அடித்தோம் உடுத்தோமா?
விதைத்தோம் வளர்த்தோம் அடைந்தோமா?
உழைத்தோம் களைத்தோம் உயர்ந்தோமா?
பேதம் பேதம் பேதம் ஏழு நூறு கோடி பேத'மே'!
போதும் போதும் தோழன் தானே நீயும் நானு'மே'!
பூதம் பூதம் பூதம் நாங்கள் கோடி கால்கள் பூத'மே'!
கோடி கைகள் கூடி நாளை வையம் ஆளு'மே'!
யாரிங்கு உயர்ந்திட நாமிங்கு உழைத்தோம்!
யாரிங்கு கொழுத்திட நாமிங்கு இளைத்தோம்!
யாரிங்கு அணிந்திட நாமிங்கு தொடுத்தோம்!
யாரிங்கு துணிந்திட நாமிங்கு பணிந்தோம்!
யாராரோ உயர்ந்தார்!
யாராரோ கொழுத்தார்!
யாராரோ அணிந்தார்!
யாராரோ துணிந்தார்!
படைப்போம் புதிதாய் சரிதமே...
இணைவோம் எழுவோம் படையாக!
எதுவும் இல்லையே இழக்கவே...
அடைவோம் அடைவோம் உலகையே!
தூக்கம் ஓய்வு வேலை ஆக நாளில் மூன்றும் வேண்டு'மே'!
தேசம் ஊடே கோடு யாவும் போக வேண்டு'மே'!
காவல் நீதி ஏவல் நாயை தூர ஓட்ட வேண்டு'மே'!
யாதும் ஊரு யாரும் கேளிர் ஆக வேண்டு'மே'!
தினம்தினமே தினம்தினமே உழைப்பினை போற்றுவோம்!
உழைத்திடுவோர் உயர்ந்திடவே உழைப்பினை போற்றுவோம்!
வேர்வையும் வாசம் வீசுமே!
மேநாளின் மேன்மை பேசுமே!
-ஞானகுரு
Add a comment