தமிழ் சொட்டும் கவிதைகள்!

உலகெங்கிலும் உள்ள தமிழ்ப் பிரியர்களின் இலக்கிய சுவைக் கூட்ட,

தமிழரின் குரல் வளையாக கவிதை.காம் 10 ஆண்டுகளுக்கு மேலாக சேவை செய்து வருகிறது!

உலகெங்கும் தமிழ் குரல் ஒலிக்கட்டும்!

சமீபத்திய கவிதை

பூப்பூக்கும் காதல்

மன்னார் அமுதன்

நினைவுகளைத்
துரத்திச் செல்லும் இரவுகள்
இலக்கின்றிப் பயணிக்கும்

உன்
பிஞ்சு மனதிலே
தஞ்சம் கேட்டு
நித்தம் சண்டை பிடிக்கும்

பசியில்லாப் பகல்களும்
பட்டிணி இரவுகளும்
பழகிப் போகும்

பல்லியிடம் வீசியெறிந்த
உன் முதல் பல்
என் காதல் கருவூலத்தை
அலங்கரிக்கும்

உனக்குள் கட்டமைத்த
வாழ்க்கைச் சுனையில்
என் வேர்கள் நீர்தேடும்

இருந்தும்..
தவறுகளின் பட்டியலால்
மலடான நம் காதல்

உன்னொரு
புன்னகையால் மட்டுமே
மீண்டும் பூப்பூக்கும்

குறிப்பில்லாக் கவிதை (random)

முக வரிகள்

இளந்திரையன்

முக வரிகள் நிறைந்து!
முறுவலிக்க மறந்த!
முகம்!
முதிர்ச்சியாய்!
கடும் பனியில்!
கட்டிடக் காட்டினுள்!
இயந்திரத்துடனான போராட்டத்தில்!
இறுகிச் சிவந்து!
வார இறுதியின்!
வரவுக்கும்!
மாசம் தவறாத!
மருட்டும் செலவுக்குமான!
இடைவிடாத போராட்டத்தில்!
இன்னும் தொலைந்தது நித்திரை!
மலர்கள் மழலைகள்!
மரத்துப் போன இதயத்தின்!
மானசீகக் கற்பனை!
மயக்கமூட்டுவதாய்!
கடிகார முள் பார்த்து!
கால் ஓட!
சாத்திய கதவின் பின்னால்!
கவனமாய் ஒரு வரி - என்!
முகத்திலேற!
முறுவலிக்க மறந்த!
முகம் முதிர்ச்சியாய்!
முக வரிகள் நிறைந்து.!
- இளந்திரையன்