தூக்கு மர நிழலில் - தமிழ்தாசன்

Photo by Steve Johnson on Unsplash

மரண பேய்களுக்கு
மதியச் சாப்பாடு -ஒரு
மாவீரன் என
தூது அனுப்பியது
தூக்கு மரம்.

தூக்கிலிட்டதும்
மரத்திலிருந்து மண்ணில் விழும்
மாமிசத்தை
தூக்கி செல்ல
துஷ்ட பேய்கள்
துரத்தி வந்து
தூக்கு மரத்தை.

தன் மன்னனின் மரணம் காண
கூட்டமாய் மக்கள் கூடி இருந்தனர்.

கர்ப்பிணி கழுத்திற்கு
காயிற்று வளையலிட்டு
கவுரவிக்கும்
சீமந்தம் நடத்தி வைக்க
வெள்ளை சீமான்களும்
வந்து நின்றனர்..

நிஜ உருவத்தை கண்டால்
நிற்கும் மக்கள்
நிலை குலைந்துவிடுவார்கள் என்பதால்
மனிதனைப் போல்
மாறுவேசமிட்டு கொண்டது
மயானப் பேய்கள்.

கொடும் பசியில் இருக்கும்
குட்டி பிசாசுகளுக்கு
தூரத்தில் வரும்
விலங்கிட பட்ட மனிதன்
விழிகளுக்கு
விலாங்கு மீனாய்
விருந்தளித்தான்.

சாத்தான்களும்
சாப்பாடுக்கு தயாராகின.

இலையின் அருகே
இரை வந்துவிட்டதால்
இரைச்சலிட்டு
இந்த பேய்கள் எல்லாம்
இன்பத்தை வெளிபடுத்தின..

"பேய்களே!
சத்தமிட்டால்
நம் சாயம் வெளுத்துவிடும்.
பாவி மக்கள்
பயந்து போவார்கள்.
உணவு கீட்டும் வரை
ஊமையாய் இருங்கள்"
ஆணையிடுகிறான்
அப்பேய்களின் அரசன்.

வெயிலின் அடியில்
வெள்ளையனின் பிடியில்
வெறிப் பிடித்த
வேங்கையோன்று
வெட்டு கத்தியின் பார்வையோடு
எட்டு வைத்து
கிட்ட வருவதை கண்ட
பயங்கர பேய்கள்
பயந்து போயின..

நாகம்ப் போல்
அவன் நடந்து வருவதை கண்டு
நடுங்கி போயின..

முனங்கி கொண்டிருந்த
மக்களிடையே
முழக்கம் ஏற்படுகிறது..

" வீர பாண்டியனை
விடுதலை செய்
வீர பாண்டியனை
விடுதலை செய் "

அந்த
இந்திய பெருஞ்சுவரின்
இடி முழங்கிய பெயரை கேட்டதும்
இடுகாட்டு பேய்கள்
கருவாடு போல்
காய்ந்து போயின..

மரண அன்னையின்
மலர் மடியில் - ஓர்
மழைலை யென
நடந்து செல்கிறான்.

தூக்கு மர நிழலில் - ஒரு
தேக்கு மரம்
ஊக்குவிக்கும் தான் மக்களுக்கு
ஊற்றெடுக்கும் உணர்சிகளை
உதிர்த்துவிடுகிறது.

" முனையில் நிற்கும் எதிரிக்கு
முதுகால்
முகம் காட்டுபவன்
எறும்பு கூட
ஏறி மிதிக்கும்
எருதட "

" துணிந்தவனுக்கு
தூக்கு மரமும்
துப்பாக்கி சூடும்
வீரத் திருமகள்
வியந்து வழங்கும்
விருதட "

பசித்து காத்திருந்த பேய்கள்
ரசித்து கேட்டு கொண்டிருந்தது
அந்த
இரட்சகனின்
ராட்சச வசங்களை.

" இத் தலைவனை கண்டிருந்தால்
தற்கொலை செய்திருக்க மாட்டேன் "
தலையில் அடித்து கொண்டது
தளபதி ஆவி.

அவன்
வீரப் பேச்சில்
ஈர குலைகள்
ஆடிப் போயின.
அவன்
மோகனம் கண்டு
மோகினி பேய்களும்
மோட்சம் அடைந்தன.

தின்று கொழுத்த காதோடும்
தீராத பசி வயிற்ரோடும்
திரும்பி சென்றது
திகில் பேய்கள்.

சீமந்தம் முடிந்தது.
சீரழிவு நடந்தது.

சரித்திரத்தில்
பச்சை தமிழன்
வீரனென்று
பதிவு செய்ய...

தூக்கு மர நிழலில்
ஒரு தேக்கு மரம்
சரிந்து கிடந்தது
தமிழ்தாசன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.