முதல் மாடியின் கைப் பிடிச்சுவர்
பிடித்து நான் கவனிப்பேன்
எதிர் மரங்களில் அமர்ந்து
காக்கை நேசர் ஒருவர் பிட்டுப் பிட்டு
எறிகிற இட்டிலித் துண்டுகளுக்காக
காக்கைகள் தம் மொழியில்
கூவிக்கரைந்தே நன்றி தெரிவிப்பதை,
உயரத்தில் இருந்து தாழ்ந்து அவை
கொத்திச் செல்வதை ,
நான் பார்த்துக்கொண்டே இருப்பேன்
எல்லாம் தீர்ந்ததும் வரும்
விளங்காத மொழியை
வீம்புக்குக் கற்றுக்கொண்டிருக்கும்
என் மகளின் பள்ளிக்கூட பஸ்
இறங்கிச்செல்வேன் அவளை
அனுதாபத்தோடு அனுப்பி வைக்க
மாலை வந்துவிடும்
நான் வேலை முடிந்து திரும்பும் வேளையில்
அதே மரங்களில் இப்போது புறாக்கள்;
காதலுக்குத் தூது விட்ட
மன்னர்களை நினைத்தபடி
பார்த்துக் கொண்டே நிற்பேன்
நாட்டியம் ட்யூஷன் முடித்து வரும்
மகளின் வரவை எதிர்நோக்கி
சைக்கிளில் பூ விற்பவன் மணியடிப்பான்.
சாலை ஓரத்துப் புல்
அசையும் காற்றில்.
மூழ்கத் தொடங்கியிருக்கும்
சூரியன் மேற்கில் .
நான் இறங்கிச் செல்வேன்

வையவன்