சாலையோர டீக்கடை
நாள் முழுவதும் உயிரோட்டமுடன்
உள்ளே....
பச்சை சட்டை
பதினைந்து ரூபாய்...
பச்சிளம் பாலகனின்
பளிச்சென்ற குரல்
புத்தகங்களை சுமக்கும்
கைகளில்
எச்சில் தட்டும் டம்ளரும்
மனதில் பறக்கும் பள்ளிக்கூட பறவையின்
சிறகுகளாய்
பாக்கெட்டில் பேனா
வலது கையில் சிலேடும்
இடது கையில் நண்பனுமாய்
பள்ளி செல்லும் காலமிது - மாறாக
குடும்ப பாரம் சுமக்கிறான்
குடும்பஸ்தனாக!
தடம்மாறிய பயணத்திலாவது
திரும்ப வழியிருக்கும்
தடம்புரண்ட பயணத்தில்
விபத்தொன்ரும் விதிவிலக்கல்ல!
வெளியே...
இலையோடு கனி சுமக்கும்
கிளையொன்று
கூரை சுமக்கிறது!
அநேகமாய் வேர்விட்டிருக்கும்
மண்ணுக்கடியில் முத்தமிட்டுக்கொண்டிருக்கும்
வேரின் நீளம் நன்றாய் தெரிகிறது
புதிதாய் அரும்பியுள்ள அரும்பில்!
வசந்தத்தின் மடியில் காய்கனியுடன்
உறவாடும் காலமிது - மாறாக
கூரை சுமக்கிறது
தனி மரமாக!
வேதியியல் மர்ற்றம் கண்களுக்கு
புலப்படாததுபோல் - கல்லாப்பெட்டியில்
பணம் எண்ணும் முதலாளி
ஆம்!
கூரைக்குத் தூணெடுக்கத் தெரியாதவனுக்குக் கூலியாள்
மட்டுமென்ன விதி விலக்கா
முத்து கருப்புசாமி