புகைப் படமாய்
நினைவுகளைச்
சுமந்து கொண்டு!
ஊரின் தொடக்கத்திலே
ஒத்தையடிப் பாதையின்
தாயாகிப் போன குளம்!
பேருந்து நிறுத்தத்திற்கு
எங்கள் ஊரின்
பெரிய அடையாளம்!
பின்னால் பனை மரங்கள்!
வலப்புறம் கரும்புக்
கொல்லை!
காவலுக்கு முனிசாமியும்
கத்தாழையும் கள்ளியும்!
போய் வரவா? எனக்
கேட்கும் ஆலமரக் காத்து!
இப்படியெல்லாம்
எதுவும்
இல்லைஇப்பொழுது!
வேலை தேடி
வெளியூர் போகும்
இளவட்டம் போலே
வெறிச்சோடி
காணாமல் போனது !
"குளம்"
பாட்டன் தலைமுறைக்கு
நிரம்பி வழிந்தது!
தகப்பன் தலைமுறைக்கு
தண்ணீர் வற்றி
தரை வரை தெரிந்தது!
என் தலைமுறையில்
எப்போதோ வரும்
மழையில் தலை
நனைத்தது!
என்- பின் தலைமுறையில்..........!
யாருக்குத் தெரியும்?
அடுக்ககம் ஆகலாம்!
ஊர்க் குப்பையைக்
குத்தகைக்கெடுத்த
குப்பைக் கிடங்கு ஆகலாம்!
பிணங்கள் எரிக்கும்
இடுகாடாகலாம்!
ஏதோ ஓர் தொழில்
நுட்ப நிறுவனத்தின்-
வாகன நிறுத்தம்
ஆகலாம்!
கனிம நீர்
தயாரிப்பின் களம்
ஆகலாம்!
எப்படியாயினும்
'செத்த' குளத்தில்
சில்லறை பார்ப்பார்கள்!
மெத்தப் படித்தவர்கள்;
இயற்கையின்
மேன்மை
மறந்தவர்கள்!
செத்தும்'கொடுக்கும்'
குளம்! சருகுகள்
பரந்து விரிந்த களி
மண் படிமம்!
எழிலி