மழைத்தவம் - ப.மதியழகன்

Photo by Evie S. on Unsplash

எங்கே சென்றாய் மழையே
இங்கே எங்களை தவிக்கவிட்டுவிட்டு
எங்கே சென்றாய் மழையே
காற்றே கருணை கொள்
கார்மேகத்தைக் கடத்தி வந்து
இந்த ஊருக்கு மேலே நிறுத்திவிடு
வருண பகவானே
மரங்களெல்லாம் இலையுதிர்த்து
நிற்பதைப் பார்
தளிர்க்கச் செய்ய
தாராளமாய் தண்ணீர் பாய்ச்சு
உன்னை வரவழைக்க
கழுதைக்கு கல்யாணம்
உன்னை உருக வைக்க
இசை மேதைகளின்
இன்னிசை கானம்
மழை மகளே புவியரசன்
உன் மீது மையல் கொண்டு
தவிப்பதைப் பார்
முத்தமிட்டு சங்கதி பேச
உன்னை அழைப்பதைப் பார்
ஆனந்த வெள்ளத்தில்
நீ மிதக்கும் வேளையில்
அருவியாய் நிலத்தின் மீது
நீரை ஊற்று
மழை தேவதையே
உன் சிறகிரண்டையும் ஒடித்து விட்டனரா
உன்னைத் தனிமைச் சிறையில்
அடைத்துவிட்டனரா
பயிர் செழிக்க உயிர் தழைக்க
மனது வை மழையே
விண்ணோடு எங்களால்
சண்டையிட முடியாது
வீண் பேச்சு கதைக்குதவாது
வானம்பாடி கானம் பாடி
வசந்தத்தை அழைப்பது போல்
நாமெல்லாரும் அழைத்திடலாம்
காற்றில் மண்வாசம் வருது பாருங்கள்
கிழக்கு திசை கறுக்கத் தொடங்குது பாருங்கள்
மழைதேவியே
வெயில் அரக்கனை சம்ஹாரம்
செய்து கொண்டிருக்கின்றாயா
உயிர்களுக்கு வரமருள
துணிந்து விட்டாயா
உனது வருகைக்கு இடியோசை
கட்டியம் கூறுகிறதே
மழைத்தாயின் மனதில்
ஈரம் இருக்கிறது
சற்று அண்ணாந்து
வானைப் பாருங்கள்
மின்னல் கண்ணைப் பறிக்கின்றது
ப.மதியழகன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.