ஒவ்வொரு அழிவின்போதும் அவர்கள் !
நாலு வார்த்தைகளுடனும் !
கையில் ஒரு கொப்பியுடனும் வந்து போகிறார்கள். !
சாவை நினைத்து அழுகிறது மனம். !
என்னுள் ஏதோவோர் குற்றவுணர்வை !
புதைத்துவிட்டேனும் தம்மைச் சாதிக்க !
பயிற்சி எடுக்கிறது அவர்களின் வார்த்தைகள். !
ஓயாது சலிப்பின்றி !
துயர் பாடும் பாட்டுக்களும் !
நகங்களை எடுத்து வாள்களாய்ச் சுழற்றிக் !
காட்டும் வித்தைகளுமாய் !
அறையைக் காட்சிகள் வியாபிக்கின்றன. !
உடல் சறுகச் சறுக !
சீர்செய்து !
மீண்டும் மீண்டும் இருக்கையைப் பேணுகிறேன். !
தொலைக்காட்சி தொடர்ந்தும் !
காட்சிகளைச் செய்து !
தள்ளிக்கொண்டிருக்கிறது. !
கலாச்சாரம் பற்றி கவலைப்பட்டபடி !
தொப்புள்வெளி விரிய ஆடும் கதாநாயகியின் இடுப்பில் !
காணாமல் போய்விடுகிறேன். !
நேரம் வேகவேகமாய் நகர்ந்து முடிக்கிறது. !
ஒவ்வொரு பிறந்தநாள் கொண்டாட்டங்களின்போதும் !
மெல்லத் தொடங்குகிறது உரையாடல். !
சினிமா அரசியல் என தொடர !
சொற்களின் சேர்க்கைளிலும் மோதல்களிலும் !
வைன் கிளாஸ் மெல்ல மெல்ல !
காலியாகிக் கொண்டிருக்கிறது. !
வார்த்தைகளின் கனத்தை அழிப்பதில் !
வைன்போதையைவிட ஏதோவொன்று !
முந்திக்கொள்கிறது. !
பட்டியலை சரிபார்த்து !
வழமையான சிரிப்புகளைச் செய்து நாம் !
கலைந்து கொள்கிறோம். !
பனிக்காலமிது. !
பனித்திரள் தன்னழகை வெண்ணிறகில் !
விரிக்கிறது வியாபகமாய். !
இயந்திரக் காட்டினுள் வேலை என்னைத் !
தின்று தின்று துப்புகிறது. !
கிடைக்கும் ஓய்வினில் இந்த இயற்கை தன்னும் !
சம்பந்தமற்றுப் போகிறது எனக்கு. !
இன்றைய ஓய்வையும் !
ஒரு திரைப்படம் போலவொரு காட்சி நெய்தலிலோ !
அல்லது பட்டிமன்றம் போன்றதொரு !
நரம்பிசைக்கும் புனைவுகளிலோ !
நான் தமிழனாகி இன்னமுமாய் !
தமிழன் மட்டுமேயாகி வாசிக்கப்படுவதற்காய் !
மண்டப விலாசத்தைத் தேடுகிறேன். !
வாழ்க்கை நகர்கிறது அதுவாய். !
-ரவி (சுவிஸ் 01032005)