நண்பர்கள்
இரா.பழனி குமார்
பிறக்கும் போதே நண்பர்களாய் பிறப்பதில்லை!
பிறந்திட்ட எவரும் நண்பர்களாய் இருப்பதில்லை!
இறுதிவரை பலரும் நண்பர்களாய் இருந்ததில்லை!
உறுதியாய் உள்ளோர் என்றுமே பிரிவதில்லை !!
இன்சொல் இன்முகத்தால் ஈர்த்திடும் அன்பர்கள்!
இதயத்தால் இணைந்திடும் நாளைய நண்பர்கள் !!
பள்ளிப் பருவத்தே துள்ளி விளையாடும்!
கள்ளமில்லா உள்ளமுடன் பால்ய நண்பர்கள் !!
கல்லூரிக் காலத்தில் கற்பனை கனவுடன்!
உல்லாச பறவைகளாய் உலாவரும் நண்பர்கள் !!
அலுவல் பணிதன்னில் உளமகிழ உரையாடி!
அளவோடு பழகிடும் பகுதிநேர நண்பர்கள் !!
பயணிக்கும் நேரத்தில் சயனிக்கும் நேரம்வரை!
சிந்தையின் சிதறல்களை பகிர்ந்திடும் நண்பர்கள் !!
நலிவுற்ற நேரத்தில் பொலிவுடன் மீண்டிட!
உதிரத்தால் உதவிடும் உயிரான நண்பர்கள் !!
அகமும் புறமும் இருவேறு உருவங்களாய்!
வஞ்சமிகு நெஞ்சுடன் வலம்வரும் நண்பர்கள் !!
காரியம் நடந்திடும் காலம்வரை உறவாடி!
முடிந்தபின் நட்பினை முறித்திடும்* நண்பர்கள் !!
உதவிகள் செய்திட்டால் உறவாடும் உள்ளங்கள்!
உதவிஎனக் கேட்டால் உதறிடும் நண்பர்கள்!!
புண்பட்ட நெஞ்சினை பண்பட்ட உள்ளத்தால்!
ஆற்றிடும் மருந்தாய் அருமைமிகு நண்பர்கள்!!
பொன்னும் பொருளும் பணமும் பதவியும்!
நம்மிடம் இருந்தால் நாடிடும் நண்பர்கள் !!
இல்லாமல் இருந்து இருக்கும்நிலை உயர்ந்திட்டால்!
அறியா முகங்களாய் மாறிடும் நண்பர்கள் !!
காலம் முடியும்வரை களைந்திடுவோம் பகையுணர்வை!
காலன் அழையும்வரை அணிந்திடுவோம் நட்புணர்வை!
இன்பம் நிலைத்திட ஒன்றிடுவோம் நண்பர்களாய் !!
இதயம் நிற்கும்வரை நின்றிடுவோம் நண்பர்களாய் !!
-இரா.பழனி குமார் !
சென்னை