தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

வேலைக்கு போகிறேன்

அக்மல் ஜஹான்
இப்படித்தான் தொலைகிறது!
நமது புன்னகைகள்!
விபத்துக்களாய்...!
தலையணை நனைக்கும்!
தூக்கம்..!
தெருமுனையில் தொங்கும்!
காத்திருப்புக்கள்..!
என்கண்கள் காலடியில் தான்..!!
ஆனாலும்!
நெருஞ்சி முள்ளாய் இறங்கும்!
தெருக்களின் எச்சில்கள்..!
பேரூந்து நெரிசலில்!
புரண்டு தவிக்கும் மானம்..!
நீ அனுப்பி வைத்த புன்னகைகள்!
கொட்டுண்டு போகிறது!
உம்மா..!!
இத்தனை தொலைவுகளிலும்!
என்னை தொலைக்காமல்!
இறுக்கி பிடித்தபடி..!
வேலைக்கு போகிறேன்..!!!
எனக்குள் தொங்கும்!
எல்லாக் கேள்விகளோடும்!
அலுவலக முகங்களின்!
அதிகார பார்வைகள்!
நெருக்குவதும் ..!
நெருடுவதும்..!
சில நேரம்!
சலுகைகளுக்கு மட்டுமே!
என்னை சரக்காக்கும்!
உங்கள் சுயநலங்களில்!
நான் முறிந்து வீழ்வதும்....!
சுவர்களோடும் மரங்களோடும்!
மட்டுமே!
சுவாசிக்கிறதென் மெளனங்கள்..!
இப்போதெல்லாம்!
மன்னிக்கவே முடிவதில்லை..!
என்னை மௌனமாக்கி தூக்கிலிட்ட!
உங்கள் வார்த்தைகளை..!
ஓடி முடித்துவீடுதிரும்பும்!
மனசு..!
உராய்வும் கீறலும்!
ஒரு சொட்டு கண்ணீரும்!
உள்ளே ஒளித்தபடி...!!
எதையாவது தின்னேன்..!
என்ற அக்கறையிலும்!
ஓடி ஓடி ஊற்றி தரும் தேநீரிலும்!
என் உதிர்ந்து போன புன்னகை!
இனி திரும்புவதேயில்லை!
உம்மா

பத்தினி ஓதும்.. அவனும் எனக்கு

வே .பத்மாவதி
பத்தினி ஓதும் வேதம்.. அவனும் எனக்கு சொந்தம்!
01.!
பத்தினி ஓதும் வேதம்!
---------------------------- !
காற்றில் கவிபாடும்!
குழலை விரித்து!
உனக்கு கம்பளி போட சொன்னாய்!
நித்தம் நித்தம்!
நிலவு தவழும் மேனியென!
நீந்தி போகும் விண்மீன்கள்!
எத்தனை எத்தனை ..!
என் யௌவன தாள்கள் எல்லாம்!
பலரின் மோகன!
எழுத்துக்களால் கிறுக்கப்பட்டு!
மூலையில் எறியப்பட்டபோது!
வருந்தினேன்!
என்றோ மூலையில் அமர்ந்ததற்காக .....!
யாருக்குத் தெரியும்!
என் உடன் பிறப்போடு!
உதிரம் கலந்திருக்கலாம்!
என் அன்னைக்கும் தெரியாது!
தந்தையின் ரெத்தம்!
எதுவென்று!
என் இளமை பிராயத்தில்!
எனக்கு பால் ஊட்ட!
என் தாய்!
சொல்லிகொடுத்த!
அதே சூத்திரம் தான்!
அவள் முதுமை பிராயத்தில்!
பால் ஊற்றவும்!
பின்பற்றுகிறேன்!
இரண்டாம் ஜாமத்தில்!
மட்டுமே பிழைப்பு!
நடத்தும் எனக்கு!
இன்னும் புரியவில்லை!
பத்தினிகள் ஓதும்!
தலையணை மந்திரம் ...!
02.!
அவனும் எனக்கு சொந்தம்!
-----------------------------!
நான் அவனை பெற்றெடுக்கவில்லை!
நான் அவன் சகோதரியும் இல்லை!
அவனுக்கு நான் அத்தை மகளும் இல்லை!
அவன் கைபிடிக்கும் மாமன் மகளும் இல்லை!
அவன் மடிசேரும் மனைவி என்றும் நிச்சயிக்கப்படவில்லை!
எந்த வினாடியும் அவனை பற்றி நினைத்ததில்லை!
எந்த ஊரிலும் அவனை பார்த்ததில்லை!
கனவில் கூட சந்திக்க விழையவில்லை!
அவன் பெயர் கூட எனக்கு தெரியவில்லை!
எனினும் நாங்கள் சொந்தமானோம் ..!
அந்த மருத்துவமனியில்!
மனிதநேய ஊசி வழியாக!
என் ரெத்தம் அவன் உடலில் சென்ற பொது

பழகிப்போனவை

சீலன் நவமணி
பங்கரில் இருந்தே!
பாதி வாழ்க்கை போனதும்!
பாம்பு கடிபட்டு பல பேர் சாவதும்!
கூரை இல்லாமல் பள்ளி நடப்பதும்!
பாடசாலையில் படிக்கும் போதே!
பாதி கால் போவதும்!
பள்ளிக்கூடமே இல்லாமல்!
பரீட்சை எழுதுவதும்!
பாழாய்ப்போன தமிழனின்!
வாழ்வில்!
பழகிப்போனவை!
பாவம் சிங்களவன்!
பங்கரும் தெரியாது!
பாதிப்பேருக்கு பாம்பே தெரியாது!
பொம்மரை கண்டேய்!
பேயாய் சுடுகிறான்!
குண்டு போட்ட பின்னே!
பித்தலாடுகிறான்!
பழகட்டும் அவனும்!
நாம் பட்ட வேதனையின் பாதியை!
அப்போது தெரியும்!
ஈழம் தான் முடுவு என்று. !
-சீலன் நவமணி

பிம்பங்கள்

அமானுஷ்ய புத்ரன்
தாமிரபரணி ஆற்றில்!
குளித்து எழும்போதெல்லாம்!
என் மீது!
யாரோ!
தங்க முலாம் பூசிவிட்டது!
போன்ற ஒரு பிரமை.!
அந்த சிந்து பூந்துரையில்!
எதிர்க்கரையில்!
படித்துறையை பார்க்கும்போது!
அங்கெ புதுமைப்பித்தன்!
வேப்பங்குச்சியில்!
பல் துலக்கிக்கொண்டிருப்பதாய்!
ஒரு பிம்பம்!
நிழலாடுவது உண்டு.!
அந்த கயிற்றரவு!
என் காலைச்சுற்றிக்கொண்டது!
த‌ண்ணீர்ப்பாம்பை போல்.!
உயிர்க்கயிறு !
உடல்திரித்தது தான்.!
உள்ளே உள்ள‌ம் ம‌ட்டும் !
எதையும் தொடாமல் !
எப்படி திரிந்தது?.!
அதனுள் உடைந்த !
க‌ண்ணாடி வ‌ள‌ய‌ல்துண்டுக‌ள்!
க‌லைடோஸ்கோப்பாய்!
வ‌ண்ணாத்திப்பூச்சிக‌ளை ப‌ற‌க்க‌வைத்தன.!
ஏதோ ஒரு தெரு முனையில்!
ஏதோ ஒரு முக‌த்தைப் பார்த்த‌து!
ம‌ல்லிகைப் பூ போல்!
ம‌ண‌ம் க‌சிந்து கொண்டிருக்கிற‌து.!
அது எந்த‌ முக‌ம்?!
துணிக்க‌டை வாச‌லில்!
விள‌ம்ப‌ர‌த்துக்காக‌!
ஒரு முக‌த்தை !
க‌ண்ணின்றி மூக்கின்றி வாயின்றி!
மொழுக்கென்றுவைத்திருப்பார்க‌ளே!
அந்த‌ மூளிமுக‌மா?!
க‌யிற்றுப்பாம்புக‌ள்!
க‌ன‌வுக‌ள் தோறும் கொத்திப்பிடுங்கின‌.!
ம‌ர‌ண‌ப‌ய‌த்தின் இனிமையான‌!
ம‌றுப‌க்கம்!
காத‌ல் சிதையில் எரிந்துகொண்டே!
இனிப்பை தீயின் பிம்ப‌ம் ஆக்குகிறது.!
வயதுகள் நீண்டு நீண்டு !
ஒரு கயிறாகி இறுக்கும்போதும் !
அது கயிறா பாம்பா இல்லை !
அவள் நினைவின் மின்னல் கொடியா?என‌க்குள் பிம்ப‌ங்க‌ள்!
உத‌டு பிதுக்கிக்கொண்ட‌ன‌.!
புதுமைப்பித்தன் அந்த ஆற்றங்கரையில் பனங்குட்டியின் ஓலை சலசலப்புகளில் கேலியாக சிரிக்கிறார்.!
கயிறு..பாம்பு எது ஆத்மா!
என்ற‌ க‌பில‌முனிவ‌னின்!
சாங்கிய‌த‌த்துவம் காதலுக்குள் எப்ப‌டி குடை சாய்ந்த‌து?!
வேதங்களின் அப்பென்டிக்ஸ் !
எனும் குடல் வால் உபநிஷத்துகள் ப்ரச்னோபநிஷத்தில்!
இந்த பிரபஞ்சமே !
ஒரு ப்ரக்ஞை என்கிறது.!
பிறக்க நினைத்த ப்ரக்ஞை பிறக்கிறது.!
இறப்பின் சந்திப்பில் !
இன்னொரு பிறப்பின் ப்ரக்ஞை!
கடைசிச் சொட்டு செல்லில் டி.என்.ஏ,ஆர்.என்.ஏ க்களின் !
பிம்ப பிஞ்சுகளின் பிரளயம் ஆகின.!
முறுகிய !
இத்தீ வாசனையில்...!
இன்னும் அவள் முறுவல்கள்.!
பிம்பங்கள் !
பிசைந்து கொண்டேயிருக்கின்றன.!
இன்னும் இன்னும் !
பிறப்புகளாய் இறப்புகளாய்.!
சிந்துபூந்துறையில்!
அந்த‌ தாமிர‌ப‌ர‌ணி ஆறு!
புதுமைப்பித்த‌னின்...ஓர்!
ப‌ளிங்கு பிம்ப‌ம்,!
!
-அமானுஷ்யபுத்ரன்

முற்றுப் பெறாதவையாய்!

நடராஜா முரளிதரன், கனடா
எழுந்து நடக்கும் என்னிருப்பைத்!
தக்க வைத்தது என் மொழி என்பாய்!
அந்த மொழியின் கழுத்தைத் திருகி!
மூச்சுக்குழல் வாய் இறங்கி!
அகத்தைப் புறத்தே!
உருக்கி வார்ப்பதற்காய்!
எழுதுவேன் ஒரு கவிதை!
தொன்மங்களின் சுகானுபவம்!
வாதைகளாய் மாற்றம் பெறும்!
நவீனத்துவ முகம்!
உன்னுடையதென்பாய்!
மரபுகள் வழியாக!
உன் முன்னோர்!
வஞ்சிக்கப்பட்டதாய்!
சரிதங்கள் விரிக்கின்றாய்!
பழமையைக் கொழுத்தும்!
நெருப்பின் நதிமூலத்தைத்!
தேடியலைவதாக!
சீற்றம் கொள்கிறாய்!
பாறையின் ஆழத்திலிருந்து !
மயிர்துளைக்குழாய்!
வழியே எழுகின்றது!
ஒரு துளி நீர்!
வெப்பக் காட்டின் உக்கிரம்!
அதைத் துடைத்தழிக்கின்றது!
அழித்தலிலும் முற்றுப் பெறாதவையாய்!
அவை இயக்கமாய் இயங்குதலாய்!
இன்னோர் வடிவம் நோக்கி!
எனவேதான் இரத்தம் சிந்தாத!
போர்களங்களை நோக்கி!
என் மனம் அவாவுகின்றது!
ஆனாலும் மனிதர்கள்!
இரத்தம் சிந்தும்!
போர்களங்களையே விரும்புகிறார்கள்!

இயற்கை

இ.இசாக்
காலை வேலைக்கு போகவேண்டும்!
என்ன செய்ய!
மழைக்கால இரவு!
!
மழை ஓய்ந்த நேரம்!
மரத்தடியில்!
மீண்டும் மழை!!
!
சமாதிக்கு மட்டுமல்ல!
மலர்வளையம்!
பூக்களுக்கும்.!
!
யாருமற்ற பாலைவனம்!
தன்னந்தனியாக!
ஒற்றைமரம்!!
!
மிகச்சிறந்த ஓவியத்தை!
மிஞ்சிய அழகு!
குழந்தையின் கிறுக்கல்

இளைஞனுக்கு

s.உமா
இளமையின் பாதையில்!
முதல் அடி !
வாழ்க்கையின் !
முதற்படி!
புதிதாய் பூத்த மலர் நீ!
வாசத்தை வானம்!
முழுதும் பரவவிடு..!
காலத்தை வீணாக!
கழிக்காதே!
கடன் வாங்கமுடியாதது அது...!
இலட்சியங்களை !
கூட்டு!
திறமைகளை !
பெறுக்கு...!
உன் காலடியில்!
கிடக்கிறது!
எதிர் காலம்!
மிதித்துவிடாதே!
நீயே அழிவாய்!
எடுத்தணைத்துக்கொள் !
நீயே வெற்றிபெருவாய்... !
மன இருளை !
அகற்றி விடு!
வெளிச்சமாகும்!
உன் இலட்சியப்பாதை...!
இளமையை !
அசைப்போடுவதே!
முதுமை!
இளமை மட்டுமே!
வாழ்வு...!
புரிந்து கொள்!
புரிய வை...!
பழமைகளை ஜீரணித்து!
புதிய விழிப்பு கொள்...!
புதிதாய் பார் !
புதிதாய் யோசி!
உன் பதிலுக்காக!
காத்துக்கிடக்கின்றன!
பலப் புதிர்கள்...!
கட்டிய சோற்றையும்!
சொல்லிய சொல்லையும் !
மீறி நட... !
உணர்வு கொள்!
உணர்ச்சி கொள்!
இன்பம் கொள்!
துன்பம் தேடு...!
தோல்விகள்!
உன்!
முயற்சியின்!
உழைப்பின்!
வெளிப்பாடுகள்...!
சோம்பலின்!
முரண்பாடுகள்...!
நாளைய உன்!
வெற்றிக்கான!
ஏணிப்படிகள்

பெற்றேனே துன்பம் பெரிது

அகரம் அமுதா
காமக் கயவனவன் கைக்குள் சிறைப்பட்டுச்!
சாதப் பொழுதுகளில் சீரழிந்(து) -ஊமையாய்!
இன்றுவரை வாழ்வில் இடர்பட்டேன் வேறுண்டோ!
என்போல் உழந்தார் இடர்?!
தொட்டில் உறவைத் துளிர்த்துவரும் காமத்தால்!
கட்டிலுற வாக்கிக் களித்திட்டான் -இட்டமில்லாத்!
தன்மனையைக் கூடத் தழுவத் தடையிருந்தும்!
என்றனுக் கிந்தநிலை ஏன்?!
அழுது புலம்பி அவனிருதாள் பற்றித்!
தொழுது துவண்டு; துடித்தேன் -உழன்றேன்!
இனிப்புத்தான் என்மேனி என்றெறும்பாய் மொய்த்தான்!
நினைக்கத்தான் கூசுதென் நெஞ்சு!!
அன்னைக்குத் தன்மகளே ஆனாள் சகக்கழுத்தி!
என்னுமிழுக் கேற்பட்ட தென்னாலே! -என்விதி!
ஏட்டிலே காணா எழுத்தாச்சே! என்கதை!
நாட்டிலே காணா நடப்பு!!
வெங்கானம் தானேகி வெந்துத் தணிந்தாலும்!
மங்கைநான் முன்புற்ற மாசறுமோ? -பங்கமெல்லாம்!
உற்றும் உயிர்வாழக் கற்றேனே! பெற்றவனால்!
பெற்றேனே துன்பம் பெரிது!!
அன்பைப் பொழிந்துநாளும் அன்னையவள் மஞ்சத்தில்!
தன்னை வருத்தித் தவம்கிடந்து -முன்னம்!
கொடுத்தான் உயிரைக் கொடுத்தவன்பின் கற்பைக்!
கெடுத்தான் அருகில் கிடந்து!!
தான்பெற்ற பெண்ணென்னை தாரமென் றெண்ணியென்!
ஊன்மீது மோகவெறி உற்றவனை -யான்பெற்ற!
சேய்களெல்லாம் தந்தையெனச் செப்ப விழைந்திடுமே!!
தாய்வழிப் பாட்டனைத் தான்!!
அப்பனை ஆசையால் ஆளன் எனஅழைக்க!
எப்படியென் நெஞ்சம் இடம்கொடுக்கும் -அப்படியே!
கற்பனையும் காணக் கடவுவதோ? அய்யோநான்!
முற்பிறப்பில் செய்தவினை யோ?!
!
-அகரம்.அமுதா!
----------------------------------------!
ஆஸ்திரியாவில் தான் பெற்ற மகள் எலிசபெத்தை 24 ஆண்டுகள் வீட்டின் பாதாளச் சிறையில் வைத்து அவள் ஏழு குழந்தைகளுக்குத் தாயாகக் காரணமானான் ஜோசப் ஃபிரிட்சல்!!
செய்தி-!
(எலிசபெத்தின் நிலையிலிருந்து எழுதப்பட்டது!)

காதல் கொடை.. மார்கழி காதலி..மாதிரி

வி. பிச்சுமணி
கள்!
01.!
காதல் கொடை!
---------------------!
என் காதலை!
உன் பாதங்களில்!
சமர்ப்பிக்கிறேன்!
ஏற்றுகொள்வதும்!
ஏற்றுக்கொளளாததும்!
உன் இதயத்தின் முடிவில்!
மிஞ்சினால்!
மிதியடியாக பயன்படுத்து!
பிஞ்சி போனால்!
உன்னை சீண்டுபவரை சாத்தும்!
உன்பாதத்துடன் பழகி பழகி!
பரதன் மதிக்கும்!
இராமனின் பாதஅணிகளாக மாறி!
உன் மனது ஆளும் நேரம்!
மழை வரும்!
சிரமேற்கொண்டால்!
என் காதல் (கொ) குடையாகும்!
02.!
மார்கழி காதலி!
-----------------------!
மார்கழி பனி நீ வெளியே வரும்வரை!
உன் வீட்டு வாசலில் காத்திருந்து!
உன்னை தொட்டு குளிர் காய்ந்து கொள்ளும் !
வெட்டைஇல்லாமல் வாசல் தெளித்தை கண்டு!
மார்கழி பனி வெட்கி தலை கவிழும் !
நீ உன்வீட்டு வாசலில் போடும் மாக்கோலத்தை கண்டு!
கதிரவன் கிழக்கு வாசலில் போட்ட கோலங்களை!
கலைத்து விடுவான் !
நீ உன் வாசலில் இட்ட கோலம்!
பூமாதேவிக்கு வைக்கப்பட்ட திலகமாகும் !
நீ வைக்கும் செம்பருத்தி பூவுக்காக!
சாணி பிள்ளையார் கோலத்தின் நடுவில்!
அழகாக அமர்ந்து அருள் வழங்கிறார் !
நேற்று வைத்த சாணி பிள்ளையார்!
தட்டப்பட்டு காய்கிறார் வெயிலில்!
அவரை ஆற்றில் விடும் காணும் பொங்கலை!
எதிர்நோக்கி பொருநை ஆறும்!
உன் பாதம் தொட காத்திருக்கிறது !
03.!
மாதிரிகள்!
----------------!
அண்ணன் மாதிரி என்றும் !
தங்கை மாதிரி என்றும் !
அபத்த மாதிரிகள் !
வேறு மாதிரிகளாக மாறுவதுண்டு !
மாமனார் அப்பா மாதிரி !
மாமியார் அம்மா மாதிரி !
மருமகன் மகன் மாதிரி !
மருமகள் மகள் மாதிரி !
ஒரு போதும் மாதிரிகள் அசலாவதில்லை !
மாய மான் என தெரிந்தும் !
சீதைகளுக்காக ராமர்கள் !
அன்பு அற த்தை தூக்கி போட்டுவிட்டு !
துரத்தும் நாடகம் நடந்து கொண்டே இருக்கிறது !
கங்குகள் மீது படிந்த சாம்பலை !
கைகள் அறியும் !
அலுத்துவிட்ட காட்சிகள் என்றாலும் !
அலுக்காமல் அரங்கேறுகின்றன !
உண்மை முகம் காட்டும் போது !
உறவு பனிகள் உதிர்ந்து விடுகின்றன

பனிப்பிரதேச பேரழகி

ரசிகன்!, பாண்டிச்சேரி
ஒரு!
வெளிர்நீல மைதானத்தின் கீழ்!
பனிக்குவியல்களை உரிமை கோர!
நிதர்சனப்படுகிறது ஒரு புகைப்படம்!!
கொஞ்சம் எடுப்பாகவும்!
கொஞ்சம் மிடுப்பாகவும்!
வண்ணம் பூசிக்கொள்கின்றன!
அவள் அழகுகள்!!
மிதமாய்!
தூறல் விட்டுக்கொண்டே !
அங்குமிங்குமாய்!
சில புன்னகை மழைகள்...!
ஆர்குட்டையோ!
முக நூலையோ!
இன்ன பிற சமூக வலைத்தளங்களை !
கவர்ந்து விட எத்தனிக்க!
முற்றிலுமாக!
முடங்கிக்கொள்கிறாள்!
ஒரு !
குளிர் தாங்கும் மேலாடையில்!!