வெற்றுப் பாதங்கள் புதைந்தன வெண்மணலில்.!
பற்றும் மணலைத் தீவிரமாக பறிப்பதில்!
சுற்றிச் சுழலும் நுரையலை சுயமுயற்சியில்.!
ஓற்றியெடுத்துக் கால் கழுவும் அலை.!
அற்றைத் தென்றல் தழுவிய நிலை.!
ஆதவன் ஆட்சியில் நீலவான் நாணமிழந்து!
ஆதரவாயங்கே முத்தமிட்ட தங்கக் கடல்.!
ஆதாரமான தாய் நிலக் கடல் எழில்.!
பளிச்சிடாத மங்கல் வடகடற் கரையில்!
குளிர் காற்று வெறுப்பைச் சுமந்து வீசியது.!
மெல்லிய அலை வெண்மணற் கரை அணைய!
சில்லிடும் நீர் ஊடுருவா பாதணி காலில்.!
விளிம்பு நீரிலும் குளிரின் தாக்கம்.!
பளிங்கு நீர் கால் தழுவிய ஆதங்கம்.!
வானப் பெண் வெண்ணிற முக்காடிட்டு !
மோனமாய் அழகை மூடிக்கட்டிய கடற்கரை.!
இரு கடற்கரை அனுபவ ஒப்பீடு!
ஒரு எதிர் புதிரான நோக்கு மதிப்பீடு.!
ஓரக்கடல் தழுவும் என் ஏக்க விழியூடு!
தூரக் கடலின் மங்கல் வானக் கோடு.!
இந்து மகா சமுத்திரம் தழுவிய பாதங்கள் !
இந்த வடகடல் கரையில் றப்பர் பாதணியோடு!
எந்தன் தொழிலிடக் குழந்தைகளோடு சுற்றுலா.!
சுந்தரக் கடற் கரையில் சுழன்ற மதிப்பீடு.!
!
6-7-2004

வேதா. இலங்காதிலகம்