தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

மாட்டுப் பொங்கல்

முத்தாசென் கண்ணா
முதல் நாள்!
பொட்டிட்டு!
கொம்பில் வண்ணமாய் துணி கட்டி!
சூடம் காட்டி!
முன்னால் விழுந்து எழுந்து!
உணவளித்து!
ஒரு நாள் ஓய்வும் அளித்தான்!
உழவன்!
மறுநாள்!
முதல் நாள் களிப்பில்!
முன்னரே விழித்தெழுந்தது!
மாடு!
காலை விண்ணப்பத்தைக்!
கடவுளிடம் வேண்டியது!
இறைவா ! நன்றி!!
வருடம் முழுவதும்!
தன் வயிற்றுக்காக!
வேலை வாங்கி!
உனக்காக பயந்து!
ஒரு நாள் மட்டும் ஓய்வளிக்கும்!
கள்ள எண்ணம் கொண்ட!
மனிதனாய் படைக்காமல்!
மாடாய் படைத்ததற்கு!
''இருந்தும் ஒரு நப்பாசை!
மாதம் ஒரு முறை வரட்டுமே!
மாட்டுப்பொங்கல் என்று!
ஆனால்!
அதன் முந்திய நாள்!
பக்தன் அளித்த பொங்கல் உண்ட மயக்கத்தில்!
இறைவன் இன்னும் துயிலெழவில்லை என்பதை!
மாடு அறியாது !!
பாவம் அதற்கு ஐந்தறிவுதானாம்.!
-முத்தாசென் கண்ணா

மௌன அதிர்வுகள்

நவஜோதி ஜோகரட்னம்
நெஞ்சு அதிர்கிறது!
நீர்த்துமிகள் துளிகளாகி!
பேரிரைச்சலுடன் ஒலிக்கும்!
நயாகராவைப்போல்…!
உணர்வுகளுக்குள்!
வார்த்தைகள் விலகிப்போகின்றன!
சொற்களுக்குள்!
உச்சரிப்புக்கள்!
சிறைப்பட்டு வலிக்கிறது…!
ஏக்கங்களுக்குள்!
உடல் வதைந்து!
அவஸ்தைப்படுகிறது…!
விவாதங்கள் ஆரம்பித்து!
போலியாகின்ற உறவுகள்…!
இடையிடையே முரண்பாடுகள்!
பயங்கரக் கதை சொல்கின்ற பாதைகள்…!
அவளின்!
பாடலின் மௌனம்!
அந்த மூலப் பிரதி!
பத்திரமாய் இருக்கிறது வீட்டில்!
தேய்ந்து அழிகிறது உடல்!
அடிவாரத்தில் ஆவியாகின்ற தோல்விகள்!
மனதின் காயத்துள்!
சுவாசம் வெப்பமாகிறது!
கசிகிறது உதிரம்!
மனதின் சித்திரவதைகளில்!
சிறை மீண்டு!
பொழுதுகளை தாலாட்ட!
தெரியவில்லை அவளுக்கு!
காற்று மழை!
இரவு பகல்!
இவைகளுக்கு இயற்கையான இடைவேளை ஆனால்!
அவளுக்கோ!
தூரத்தில் ஒரு காத்திருப்பு…

வேண்டுவதும், வேண்டாமையும்

சித. அருணாசலம்
கருப்பைக் குறைவாக நினைப்பதும்,!
பிறப்பைக் கேவலமாய்ப் பார்ப்பதும்,!
தேறாத மனங்களில் நஞ்சாகிப் போன!
ஆறாவது அறிவின் அடையாளம்.!
உடுத்துவது கருப்பில் வேண்டும்,!
உச்சிமுடி கருப்பில் வேண்டும்,!
வணங்கிடும் இறைவன் கருப்பில் - உடன்!
வாழ்ந்திடுவோர் கருப்பில் வேண்டாமோ?!
உழுபவனின் விளைச்சல் வேண்டும்.!
பழுது பார்க்கப் பாட்டாளி வேண்டும்!
பக்கத்தில் வந்து நிற்க மட்டும்!
பாழாய்ப் போன சாதியால் வேண்டாமோ?!
-சித. அருணாசலம்.!
சிங்கப்பூர்.!
சித. அருணாசலம்!
சிங்கப்பூர்

கொடூர விலங்கொன்றின் சாயை

வேல் கண்ணன்
கொடூர விலங்கொன்றை வளர்த்து வருவதாக சொன்னார்கள்!
கொடியது ஆயினும் சைவ உண்ணி தான்,!
வற்றினாலும் புசிக்கது அசைவத்தை எனவும் சொன்னார்கள் !
விரல் நீள மெமரி கார்டில பதிவு செய்தவன் கேட்டான்!
வளர்ப்பது ஏன் ? வெளியேற்றப்படும் நாள் எது ?!
வெள்ளை நிற சட்டை அணித்தவர் பதில் சொன்னார்:!
சூழல் கனிந்து வரும் காரணம் அன்று தெரியும் !
மறுநாளில் தலை முதல் வால் வரை செய்தியானது !
உலக அரங்கில் ஆலோசித்தனர்!
விண்வெளி கண்கள் இருப்பிடம் தேடிமொய்த்தன.!
தீனி செலவு கணக்கிடப்பட்டது ரகசியமாக!
உள்துறை ஆட்கள் வேவு பார்த்தார்கள்!
சந்தையில் விலங்கின் கற்பனை ஓவியமும்!
கட்டுடைத்த கதைகளும் விற்று தீர்த்தது.!
கேலிச்சித்திரம் ஒன்று எழுதி எழுதி அழிக்கப்பட்டது.!
பிறிதொரு நாளில்!
பெருந்தலைவனின் தலைமறைவு குறித்தும்!
நடிகைகளுடன் தொடர்பு குறித்தும் செய்தியானது. !
ஆனாலும்!
குழந்தைகள் விளையாடும் தோட்டத்திலும்!
கனவிலும்!
கொடிய விலங்கு ராட்சத பேருருவமாய்!
உலவிவருகிறது இன்னமும்

பூர்வீகம் மறுக்கப்பட்ட நிலங்களில்

துர்க்கா தீபன்
புதைந்திருக்கும் கனவுகள்.!


மொறேவேவா - பன்குளக் காடுகளில்!
முப்பதாண்டுகளின் முன் - அப்பாக்கள்!
முள் கிழிக்காத கனவுகளின் சொந்தக்காரர்கள்.!
கரடி துரத்தி இங்குதான்!
காடு பிரித்தார்கள் - கனவு நுரைக்க!
கைபிடித்த மனைவிமாருடன்.!
வேர் கிளப்பி ஏர் புதைத்த போதும்!
வியர்வைத்துளி கிணற்றில் நீர் நிறைத்த போதும்!
தங்கள் கனவுகளுக்கு வண்ணம் பூசிக் கொண்டார்கள்!
இப்படித்தான் இருந்தன ..!
அம்மாக்களுக்கு பிள்ளைகளாய் நாமும்!
அப்பாக்களுக்கு கனவுகளாய் அவையும்.....!
அதிகாரத்தின் கரங்கள் - குருதி வழிய!
சூரியனை கைது செய்திருந்த பகலொன்றில்!
அவர்கள் விரல் புதைந்த சேற்றில் இருந்து!
நிலம் பிரிந்தார்கள்.!
பிற்பாடு!
நிலமிழந்த மனிதர்கள்!
கனவு கிழிந்த கண்களோடு, கடவுச்சீட்டுக்காய் புன்னகைத்தார்கள்.!
நித்தியம் நோக்கிய பயணங்களில்!
மத்திய கிழக்குக்கு பெயர்ந்தார்கள்.!
பண்ணையாளன் தன்மானம்!
முசல்மான்களிடம் அடகு வைக்கப்படுகையில்!
அவர்கள் முடியிழக்க ஆரம்பித்தார்கள்.!
முறைக்கு முறை கடவுசீட்டுகளை புதுப்பித்துக்கொண்டார்கள்!
மீண்டும் காடாகியது அவர்கள் கிணற்றடி.!
இப்படித்தான் உதிர்ந்தது அவர்கள் கனவு!
மரணம் - தன் படுக்கையோரத்தில் அனுமதிக்கும்!
உரையாடல்கள் வார்த்தைகளால் மட்டும் ஆவதில்லை!
புலன்களை வாசிக்கும் அப்பொழுதுகளுக்கு இறப்பில்லை!
நினைவின் சுழலில் - கனவின் துகளை மறைக்க!
முயன்று தோற்ற மனிதன்,!
பண்ணையாளனாய் இருந்திருக்க வேண்டியது.. என்ற!
பேச்சோடு மூச்சை விட்டான்.!
கனவுகள் அழிக்கப்பட்ட நிலங்கள்!
இப்போது திரும்பி வருகின்றன...,!
அப்பாக்களின் பெயரைச் சரியாய் சொன்னபடி!
நிலம் குறித்தான அம்மாக்களின்!
தொலைபேச்சில் மீள்குடியேறுகிறது - அப்பாக்களின் புன்னகை!
நாங்கள் பெறுமதி குறித்தான சிந்தனைகளுடனும்,!
ஃபர்ம் வில்லெ வில் ஃபான் களாக இருக்கும் அவர்கள் பேரகுழந்தைகளுடனும்,!
மீட்சியற்ற தருணங்களில் பிரக்ஞையற்று இருக்கிறோம் -!
அவ்வபோது இதுபோல எதிர்காலமிழந்த கவிதைகளை எழுதிக்கொண்டு

ஊரறிய உலகறிய.. அரைக்கணமும்

புலவர் சா இராமாநுசம்
ஊரறிய உலகறிய உண்மை தன்னை.. அரைக்கணமும் நில்லாது விரைந்தே வாரும்!
01.!
ஊரறிய உலகறிய உண்மை தன்னை!
-----------------------------------------------!
ஊரறிய உலகறிய உண்மை தன்னை-ஐ.நா!
உரைத்தபின்னும் உணராது இருத்தல் என்னை!
பாரறிய பாரதமே பொங்கி எழுவாய்-இன்னும்!
பக்சேவுக்குத் துணையானால் ஒருநாள் அழுவாய்!
சீரழிந்து தமிழினமே அழிந்தே போக-இந்த!
செயலாலே தமிழ்நாடே சுடுகா டாக!
வேரருந்து போய்விடுமே ஏக இந்தியா-உடன்!
விளங்கியிதை செயல்படுமா வடவர் இந்தியா!
தனிநாடய் நாமிருந்தால் ஈழம் அழிய-பொங்கி!
தடுத்திருப்போம் ஐயகோ ஏற்றோம் பழியே!
இனிமேலும் இதுதொடரின் பாரத நாடே-தமிழ்!
இனப்பற்றே வெறியாக விளையும் கேடே!
கனிமேலும் கனியவிடின் அழுகிப் போகும்-எதிர்!
காலத்தில் கதையல்ல உண்மை ஆகும்!
பனிபோகும் கதிரவனின் வரவும் கண்டே-உலகு!
பக்சேவை ஏற்றிவிடும் குற்றக் கூண்டே!
ஒசாமா பின்லேடன் ஒழிந்தான் என்றே-மகிழும்!
ஒபாமா உமக்கும்நான் சொல்வேன் ஒன்றே!
ஒசாமா சாகவில்லை இலங்கை மண்ணில-அவன்!
உலவுகின்றான் பக்சேவாய் காணக் கண்ணில்!
கூசாமல் எம்மவரை கொன்றே விட்டான்-பெரும்!
கொலைக் களமாய் ஈழத்தை ஆக்கிவிட்டான்!
பேசாமல் போர்குற்ற வாளி யென்றே-நீர்!
பிடித்துள்ளே போட்டாலே தொழுவோம் நன்றே!
கண்ணாடி வேண்டுமா கைப்புண்ணைப் பார்க்க-ஐ.நா!
காட்டிய அறிக்கையை ஆய்வுடன் நோக்க!
மண்ணோடு மண்ணாக அவன்மக்க வேண்டும்-தமிழ்!
மக்களவர் ஒன்றாக அணிதிரள ஈண்டும்!
எண்ணாமல் இரங்காமல் அரக்கனவன் கொலைகள்-நாளும்!
ஈழத்தில் கொன்றது எத்தனை தலைகள்!
உண்ணாமல் உறங்காமல் இருக்கின்றார் இன்னும்-உயிர்!
உடலோடு நடைப்பிணமே தெளிவாக எண்ணும்!
02.!
அரைக்கணமும் நில்லாது விரைந்தே வாரும்!
--------------------------------------------------- !
நானில்லை நீயெனக் கில்லை என்றால்-மேலும்!
நலிந்துவிடும் நம்வாழ்வே பிரிந்துச் சென்றால்!
வீணில்லை என்வார்த்தை நம்பு என்றீர்-என்!
வேதனையை குறைத்தேதான் நீரும் சென்றீர்!
ஏனில்லை சென்றபின்னர் அத்தான் நெஞ்சில்-அந்த!
எண்ணம்தான் தினம்வாட்ட அறியேன் துஞ்சல்!
தேனில்லை என்றுமலர் பலவே நாளும்-தேடித்!
திரிகின்ற வண்டெனவே ஆனீர் போலும் !
தாக்கவரும் புலிகூட பெண்ணைக் கண்டே-சற்று!
தயங்குமெனச் சொல்லுகின்ற கதைகள் உண்டே!
காக்கவொரு ஆளில்லை பெண்ணை என்றால் – அவர்!
கற்பென்ன கடைச்சரக்கா தெருவில் சென்றால்!
நோக்குகின்ற தன்மையெல்லாம் பழுதே அத்தான்-அதை!
நோக்கிபல நாள்முழுதும் அழுதேன் அத்தான்!
ஆக்கிவைத்த சோறாக இந்த ஊரே-என்னை!
அள்ளிஉண்ண பார்க்கிறது வருவீர் நீரே

உணர்வுகள்

துரை. மணிகண்டன்
நான் வாலிப வயதைக் கடந்த!
நடை பிணம்!
என் சந்தோசங்களைக்!
கொஞ்சம் கொஞ்சமாக இளமைக்காலம் தின்றுவிட்டன!
இரவு உரக்கத்தில் எத்தனைத் தேவதைகள்!
தவனை முறைகளில் வந்து சென்றனர்!
எவரும் என் நிஜ வாழ்க்கைக்கு!
அஸ்த்திவாரம் போடவில்லையே!
சில இரவுகள் என்னைச் சூரியனாய் சுட்டதுண்டு!
பல இறவுகளில் நானும் ஒரு நந்தனாகவே இருந்துள்ளேன்!
குளிருக்குப் பயந்து போர்வையை மூடினேன்!
பலமுறை என் விந்துகளால் போர்வை நனைந்ததுதான் மிச்சம்.....!
-துரை. மணிகண்டன்

மதம் பிடித்தவன்

இமாம்.கவுஸ் மொய்தீன்
மதம் பிடித்தவன் அவன்!
அவனுக்கு...!
மனிதன் பிடிக்காது!
மனிதம் பிடிக்காது!
மனிதநேயம் பிடிக்காது.!
மதம் பிடித்தவன் அவன் !
அவனுக்கு...!
கொள்கை தெரியாது!
கோட்பாடு தெரியாது!
தத்துவம் தெரியாது.!
மதம் பிடித்தவன் அவன்!
அவனுக்கு...!
சமுதாயம் புரியாது!
சமத்துவம் புரியாது!
சமநீதி புரியாது.!
மதம் பிடித்தவன் அவன்!
அவனுக்கு...!
உயிரின் அருமை அறியான்!
உதிரப் பாசம் அறியான்!
உறவுகளின் அருமை அறியான்.!
மதம் பிடித்தபன் அவன்!
அவனுக்கு...!
சதி செய்யத் தெரியும்!
குண்டு வைக்கத் தெரியும்!
கொலை செய்யத் தெரியும்.!
மதம் பிடித்தவன் அவன்!
அவனுக்கு...!
மதத்தைப் பிடிக்கும்!
மடமை பிடிக்கும்!
ஜடங்கள் பிடிக்கும்.!
மதம் பிடித்தவன் அவன்!
அவனுக்கு...!
தானி... ஓட்டுனரின் இயக்கத்தால் மட்டுமே !
இயங்குதற் போல் !
இவனும் .!
மிருகங்களில்... !
மனிதநேயம் கொண்டவை பற்பல!
கொடியவையும் நஞ்சு கொண்டவையும்கூட!
தத்தம் இரைக்காகவும் பாதுகாப்புக்காகவும் மட்டுமே!
மற்றவற்றைத் தாக்கும் கொல்லும்.!
மதம் பிடித்தவன் அவன்!
அவனை...!
மனித உருவில் மிருகம்....!
...த்தூஉஉஉ..!
மிருகங்களை இழிவு படுத்தல் வேண்டாம்.!
!
-இமாம்.கவுஸ் மொய்தீன்

வேலி வேண்டாமா?

நவஜோதி ஜோகரட்னம்
குளிரும் வெய்யிலும் மாறி வரும் காலமாதலால்!
ஓவ்வொரு இரவிலும் பரப்பிக் கிடக்கும் உடல்களின் மேல்!
காற்று மழை இடி புயல் தென்றலும் போல!
மாறி மாறி காற்று அடித்து வீசுகிறது!!
பாஷை தெரியாத ஊருக்கு புது!
மனைவியாய் மிரளுகிற வாழ்வில்!
அன்பான வார்த்தைகள் அம்பாக மாறி!
சுழலும் பெரும் புதிர் குத்திக் கிழிக்கையில்!
இதயம் கலந்து இருவர் பேசும் மொழிகள்!
உறவுகளுக்கு எப்படித் தெரிகிறது? என்று!
கண்ணீரால் முட்டிக் கொள்ளும் பெண்களுக்கு!
வேலி வேண்டாமா? !
மாலை மயக்கத்தில்!
வானும் கடலும் வளைந்து தழுவி!
முத்தமிட்டு முகிழ்ந்த காட்சிகளும்!
மழைக்காலத்தில் நனையாமல் இருந்த அன்றைய!
சுதந்திரமான சிறு வயதுப் பொழுதுகளும்!
அபூர்வமாகத்தான் இருக்கிறது... இன்னும்!
கட்டுப்பாடு என்னும் வேலிக்குள்!
இதயத்தை தோண்டி எடுத்துவிட்டு!
இலக்கு நோக்கி பறக்க முடியாமல்!
இறக்கைகள் பறிக்கப்பட்டு!
சுக்கு நூறாய் உடைந்து!
இன்னது இன்னது என்று எழுதிய!
செயற்கை இருப்பின் சொகுசுச் சிறைக்குள் இருந்து விடுபட!
வேலி வேண்டாமா?!
அடிமைகளாகவும் அருவருப்பாகவும்!
கறுப்பின மக்கள் இன்றும் நோக்குகையில்!
வெள்ளை நிறத்தில் ஒரு மோகம் எமக்கு!
தோலின் நிறம் மனிதனை ஆட்டிப்படைக்கையில்!
அக அழகை துரத்திவிட்டு!
வெள்ளைச் சிரிப்பில் வரும்!
விலங்கின் கோரப்பற்கள் போன்ற புறத்தோற்றத்தை!
குவளை மலர்கள் என கொறிக்கின்ற ஆசைகளையும்!
கீறல் விழுந்த காயங்களையும்!
வரைந்து பார்க்க வேலி வேண்டாமா?!
நிறைய அலங்காரங்களை கொண்ட!
நேர்த்தியான வீடு!
அனைத்தையும் செய்ய முடிகின்ற பெண்ணின்!
சாதனைகள் அலட்சியமாகி!
ஆணின் கையில் சிக்கியுள்ளது!
அர்த்தமற்ற கதைகளால் எதிரிபோல் குடும்பம்!
நிலையற்ற கோடுகளால் குலையாத ஆடை!
செயற்கைப் புன்னகையோடு அமைதிச் சின்னம்!
கருத்துக்கள் கதறியபடி இரு துருவங்களின்!
எதிர்நிலைச் செயல்கள்....!
வீட்டை அடக்கிவிட்டு!
தற் புகழ்தேடும் சமூகசேவை!
தூசி படிந்த ஆன்மாக்களுக்குள்!
வீட்டிற்குள் பதுங்கிக் கிடக்கும் அபசௌகரியங்களால்!
அதிர்ச்சியில் புல்லரிக்குது தேகம்!
பிம்பங்களின் மோசமான அந்தரங்கத்தை வகைப்படுத்த!
வேலி வேண்டாமா?!
தற்புகழ்ச்சி தன்னாதிக்கம்!
தன்னகங்காரம் தன்னையே சுட்டெரிக்கும்....?!
தேடியதெல்லாம் விட்டுவிட்டு பறந்து!
விரிந்து கிடக்கின்ற உலகில்!
நிழல் பரம்பிக் கிடக்கின்றோம்!
நாடற்று - நாதியற்று என்று வளையும் வாழ்க்கையில்!
உணர்ச்சிகள் ஆர்ப்பரித்து உயர்ந்த இதயத் துடிப்பில்!
ஆடைகளை மாற்றி அடையாளம் தேடுகின்றோம்!
ஆங்கிலேயர் ஆவதற்கு ஆங்கிலமும் பேசுகின்றோம்!
ஆனால்!
அரைகுறை வலிகள் முகங்களில்; சிக்கி!
பறக்கின்ற குருவிகளின் வெறுமையின் கதைகளை!
நீலம் பச்சை சிவப்பு என செந்தணலாக்கி!
மூச்சுத் திணறும் மொழிகளை!
வட்டமிட்டு மொழிபெயர்க்க -இல்லை!
இணைமொழியாக்கிட தமிழ்மொழி பயில - ஒரு வேலி வேண்டாமா?!
இறுக்கமாய் விரல் சேர்த்து நெருக்கமாக அருகில்!
தோள்கள் செரிகிப்போகவும்!
இதழ்களின் சுவையில் முத்தங்கள் சொரிந்து தெருவினில் உலவவும்!
இளமை உணர்வுகள் துடித்தெழுந்து அழகிய சிரிப்பாய் ஒலிக்கவும்!
காதல் - உறவு - நட்பு - நேசம்- மனிதம் - இதயம் !
சில மாதங்கள் - சில வருடங்கள் வருடிவிட்டு - உடைந்து போகவும்!
திருமணப் பேச்சுக்களில் லயித்து!
அயோக்கியத் துணைகளால் எல்லாமே பிரிந்து போவதும்!
குடும்பவாழ்வை அவதிப்படுத்தி முடித்துக்கொள்வதும்!
ஜீவித வெடிப்புகள்; பெருந்துயரில் கரைந்து!
பெற்றோர்கள் சுயத்தையே இழந்திருப்பதும்;!
நாகரீக உலகில் சுதந்திரம் என்றாலும் - எமது!
கலாச்சாரத் தாக்கத்தின் கனவுகள் தொடர வேலி வேண்டாமா?!
அலங்காரம் என்று அலங்கோலமாகின்றோம்!
போதையை ஊட்டி போதனை செய்கிறோம்!
போட்டிகள் போட்டு பெண்ணடிமை செய்கிறோம்!
மனதைக் கொன்று மனிதத்தை வளர்க்கிறோம்!
உறவுகளை அழித்து உரிமைகள் கொண்டாடுறோம்!
சகோதரத்துவம் பேசி சாதியம் வளர்க்கிறோம்!
புகழ்மாலை தேடி உத்தமராய் உலாவுகிறோம் - அத்தனையும்!
போலித்தன்மையாகி பொழுதுகள் கழிகையில் - எமக்கொரு!
வேலி வேண்டாமா?!
இருபத்தியோராம் நூற்றாண்டின்!
இளைய வாரிசே!!
இன்னும் சில வார்த்தைகள்!
சிந்தனையை விரிவாக்கி சிறகுகளை அகல விரி!!
புரிந்துணர்வின் அடித்தளமாய்!
ஆணும் பெண்ணும் சமம் என்றும்!
உலகின் இயக்கம் அதுவென்றும் புரிந்து சொல்!!
விழிப்பாய் வேகமாய் விரைந்து செல்!
வருங்காலம் உன்னிடத்தில் உள்ளது

மறுபக்கம் - பாலியல்

மன்னார் அமுதன்
மதுவோடும் மாதோடும்!
சூதாடும் மன்மதனின்!
கதையெங்கும் காமம் தெறிக்கும்!
பகலென்ன இரவென்ன!
படுக்கைக்கு போய் விட்டால்!
விரல் பத்தும் தேகம் கிழிக்கும்!
நாடோடி போலாகி!
தேடோடிப் பெண் சுகத்தை!
எழுத்திலே கருக விடுவான்!
கோடிட்டுக் கோடிட்டுக்!
கோமானே அவனென்று!
போற்றியவன் படித்துக் கெடுவான்!
பாலியலின் பலபக்கம்!
அறிந்தவனாய்ப் பகட்டுபவன்!
நாளொன்றில் மணமுடிப்பான்!
ஊசியிலே நுழையாத!
நூலொன்றைக் காவியவன்!
இல்லறத்தில் விரதமென்பான்!
போருக்கு ஆகாத!
வாளொன்றை அழகிடையில்!
அணிதற்கு அவள் மறுப்பாள்!
உலகினிலே பரத்தைகளை!
உறவினிலே வென்றவனை!
உற்றதுணை தோற்கடிப்பாள்