புதைந்திருக்கும் கனவுகள்.!
மொறேவேவா - பன்குளக் காடுகளில்!
முப்பதாண்டுகளின் முன் - அப்பாக்கள்!
முள் கிழிக்காத கனவுகளின் சொந்தக்காரர்கள்.!
கரடி துரத்தி இங்குதான்!
காடு பிரித்தார்கள் - கனவு நுரைக்க!
கைபிடித்த மனைவிமாருடன்.!
வேர் கிளப்பி ஏர் புதைத்த போதும்!
வியர்வைத்துளி கிணற்றில் நீர் நிறைத்த போதும்!
தங்கள் கனவுகளுக்கு வண்ணம் பூசிக் கொண்டார்கள்!
இப்படித்தான் இருந்தன ..!
அம்மாக்களுக்கு பிள்ளைகளாய் நாமும்!
அப்பாக்களுக்கு கனவுகளாய் அவையும்.....!
அதிகாரத்தின் கரங்கள் - குருதி வழிய!
சூரியனை கைது செய்திருந்த பகலொன்றில்!
அவர்கள் விரல் புதைந்த சேற்றில் இருந்து!
நிலம் பிரிந்தார்கள்.!
பிற்பாடு!
நிலமிழந்த மனிதர்கள்!
கனவு கிழிந்த கண்களோடு, கடவுச்சீட்டுக்காய் புன்னகைத்தார்கள்.!
நித்தியம் நோக்கிய பயணங்களில்!
மத்திய கிழக்குக்கு பெயர்ந்தார்கள்.!
பண்ணையாளன் தன்மானம்!
முசல்மான்களிடம் அடகு வைக்கப்படுகையில்!
அவர்கள் முடியிழக்க ஆரம்பித்தார்கள்.!
முறைக்கு முறை கடவுசீட்டுகளை புதுப்பித்துக்கொண்டார்கள்!
மீண்டும் காடாகியது அவர்கள் கிணற்றடி.!
இப்படித்தான் உதிர்ந்தது அவர்கள் கனவு!
மரணம் - தன் படுக்கையோரத்தில் அனுமதிக்கும்!
உரையாடல்கள் வார்த்தைகளால் மட்டும் ஆவதில்லை!
புலன்களை வாசிக்கும் அப்பொழுதுகளுக்கு இறப்பில்லை!
நினைவின் சுழலில் - கனவின் துகளை மறைக்க!
முயன்று தோற்ற மனிதன்,!
பண்ணையாளனாய் இருந்திருக்க வேண்டியது.. என்ற!
பேச்சோடு மூச்சை விட்டான்.!
கனவுகள் அழிக்கப்பட்ட நிலங்கள்!
இப்போது திரும்பி வருகின்றன...,!
அப்பாக்களின் பெயரைச் சரியாய் சொன்னபடி!
நிலம் குறித்தான அம்மாக்களின்!
தொலைபேச்சில் மீள்குடியேறுகிறது - அப்பாக்களின் புன்னகை!
நாங்கள் பெறுமதி குறித்தான சிந்தனைகளுடனும்,!
ஃபர்ம் வில்லெ வில் ஃபான் களாக இருக்கும் அவர்கள் பேரகுழந்தைகளுடனும்,!
மீட்சியற்ற தருணங்களில் பிரக்ஞையற்று இருக்கிறோம் -!
அவ்வபோது இதுபோல எதிர்காலமிழந்த கவிதைகளை எழுதிக்கொண்டு
துர்க்கா தீபன்