இயற்கையும் இவளால் நாணும்! - கிரிகாசன்

Photo by FLY:D on Unsplash

மனவானி லொருநாளில் நிலவொன்று அழகோடு!
எனதாசை உளம்மீது வலம் வந்ததே!
கனவோடு மனம்சேர்ந்து களித்தேங்கும்நிலையாகி!
தினமேங்கும் இவள்கொண்ட எழில் கொஞ்சவே!
வளமான இளமேனி வளைந்தாடும்நிலைகண்டு!
குளமான தலைதன்னை குறைசொல்லுமே!
பழமான துண்ணாமல் பரிதாபம் கிளியொன்று!
இதழென்னும் கனிகண்டு இருந்தேங்குமே!
நுழைகின்ற மனதோடு நுகரின்ப மணம்கொள்ள!
விழைகின்ற காற்றோடி உனைநாடுமே!
வளைகின்ற இடைமீது வந்தாடி அதுஒன்றும்!
இலையென்ற நிலைகண்டு பயந்தோடுமே!
கனிவாழைஉடல்கண்டு கருமந்தி பழம்கொய்ய!
நுனி சோலைமரம்தாவி கிளைதூங்குமே!
தனிவாழை இதுவல்ல தடுமாறி இதுவென்ன!
கனிநூறு பலதென்று மனம்நாணுமே!
பொழுதோ ஓரிரவாகிப் பொன்னிலா வருகுதென்!
றிவள்வதன எழில் கண்டு இருள் கூட்டுமே!
களவே தம் தொழிலாக கைகொண்டசிலபேரும்!
இவள்கோவிற் சிலையென்று விலைசொல்வரே!
வளைகின்ற அடிவானில் விழுகின்ற கதிராலே!
களைகொண்டு செவ்வானம் கலை காணுமே!
இவள்நாண இருகன்னம் எழுகிற செவ்வண்ணம்!
எழில்காண மனம் கோணி முகில் சோர்ந்ததே!
குளநீரில் இவள்நீந்த கயல்மீனும்விழிகண்டு!
வலைபோட்டுப் பிடித்தாள்வஞ் சகி என்னுமே!
குழல்கூந்தல் அவிழ்ந்தாட குளிர்நீரில் முகில்வந்து!
விழுந்தானே எனமீனின் குஞ்சோடுமே!
கழல்பாத மணியோசை கால்துள்ளி சல்லென்ற!
விளையாடு மொலி கேட்டு தேர்வந்ததே!
அழகான திருமாலின் அயல் சேரும் திருமகளும்!
ஒளிதந்தாள் என ஏழை நிலம்வீழ்வனே!
ஒயிலான உடல் தூங்கும் மணிமாலைஅணியாவும்!
இவளாலே மெருகேறித் தரம் கண்டதே!
மயில்போலும் நடை கண்டு மழைமேகம்வருமென்று!
வயல்நின்ற எருதோ தன் வீடேகுமே!
தரைமீது இவள்செல்ல தனியே ஓர்பூந்தோட்டம்!
விரைந்தோடுதென வண்டு வெறி கொள்ளுதே!
அரவிந்தன் அடிவானில் வருகின்றஒருவேளை!
தெரிகின்ற ஒளிபோலும் இவள்கூடிலே !
கிரிகாசன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.