மகாசக்தி - வேதா. இலங்காதிலகம்

Photo by engin akyurt on Unsplash

கார் முகில் வானில் நிலா வெள்ளி தீபம்.!
காசினி வாழ்வில் காதல் பேரொளி தீபம்.!
மனிதனை மாற்றும் மனிதனை அழிக்கும்!
மனிதனைக் காக்கும் மகாசக்தி காதல். !
நீரில் உலாவும் மீனுக்கு நீர் சாசுவதம்.!
பாரில் உலவும் மனிதனுக்குக் காதல் சாசுவதம்.!
மானுட வாழ்வுக் கடலில் இயங்கும்!
மாதுரியம் பொங்கும் இன்பக் காதலோடம். !
மென்மைப் பட்டாம் நுண்ணிழைக் காதல்!
வெண்மை யழகு மலருக் கொப்பாகும்.!
உண்மை, மரியாதை, மதிப்பில் வாழும்.!
பொய், அவமரியாதை, அவமதிப்பில் அழிந்திடும். !
காதலின்றேல் உந்துசக்தி, சாதனைகள் குறையலாம்.!
ஆதலால் வேதனைகள் அலைக்கழித்து ஆட்டலாம்.!
இயல்பு நிலை இயக்கம் இசைகேடாகலாம்.!
இந்திரியங்களும் இறுகு நிலையையடையலாம். !
ஆதாம் ஏவாளோடு இணையம்வரை புரளும்!
அழியாத ஆதர்ச அற்புதக் காதல்!
பழியின்றி பாசமாய் மனமன்றில் ஆடினால்!
வழிகாட்டும் உயர்விற்கு வரமாயும் ஆகலாம். !
12-09-2009
வேதா. இலங்காதிலகம்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.