…….!
--------------------------------------------!
பூவையிவளின் பூந்தளிர்க் காலம்!
கோவையில் முன்னைய பொன்னான காலம்.!
அகரம் முதல் வெண்பா பாடி!
அறிவு முளைவிட திருக்குறள் பாடிய!
நாவலர் கல்வியகத்தில் பாதம் பதித்தோம்.!
காவலர் இல்லையங்கு கட்டிட ஊழியர்கள்!
ஆவலான விழியில் புதுக் கட்டிடங்கள் பதிப்பு.!
நாவலர் சிலையங்கு புதிதாய் உதிப்பு.!
அந்தப் பாடசாலை, அருகு அழகு வயல்கள்!
பொந்து மாதிரி எனக்குப் பயமூட்டிய மதகு!
எந்தக் காட்சியும் அன்று போல இல்லை.!
குந்தாக, உச்சி வகிடாக நின்ற வரப்பு!
உடைந்து சொத்தியாக தன் சோபை இழப்பு.!
குத்துக் கல்லாய் ஒரு அபாய அறிவிப்பு,!
நித்தியமாய் நடுவயல் பற்றையுள் பிறப்பு.!
’’கண்ணி வெடிகள் கவனம்’’பலகைப் பாதுகாப்பு.!
எதிர்காலக் கனவில்; ஆசிரியை நடை நடந்த!
எழில் கொஞ்சும் இயற்கையில் நான் எனை மறந்த!
இசைவுக் காட்சி இன்றில்லையென்று அந்த!
இணையற்ற ஏமாற்றம் புகை மூட்டமானது.!
இதயத்துள் நுழைந்து இம்சைப்படுத்தியது,!
இரசாயன மாற்றங்களை உடலுக்குள் ஏற்றியது.!
வேண்டாத ஏமாற்ற வேதாளம் என்னுள்!
சீவனோபாயம் பண்ண சீண்டிப் பார்த்தது.!
நேற்றைய அழகுப் புதையல் காட்சிகள், !
கன்று மனதின் கரும்பான காட்சிகள்!
குன்றென மனதில் அமைத்த ஆட்சி,!
நன்றெனவே வாழட்டும் நலியாத மாட்சி.!
அன்றைய காட்சி அப்படியே அப்படியே!
செண்டாக மனதில் சுகந்தம் வீசட்டும்.!
இன்று கண்டவை இத்தோடு போகட்டும்.!
இனி ஒரு ஏமாற்றம் எனக்கு வேண்டாம். !
-வேதா. இலங்காதிலகம்.!
ஓகுஸ், டென்மார்க்.!
31-07-08.!
(2003ல் யாழ்ப்பாணம், கோப்பாய் சென்று வந்த பின்பு எழுதியது.)
வேதா. இலங்காதிலகம்