பிணவறையில் உறங்குகின்றன
தெய்வங்கள்
பூசைகளை ஏற்றுக் கொண்டு
நாட்களை ஓட்டி இருக்கலாம்
பிரார்த்தனைகளை செவிமடுக்காமல்
பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கலாம்
பக்தர்களின் பாலாபிஷேகத்தில்
உள்ளம் குளிர்ந்திருக்கலாம்
அடிமுடியைத் தேடியபடியே
சென்றிருந்தாலும் பிரச்சனையில்லை
அதிகாரமற்ற அலங்காரப் பதவியில்
வீதியுலா சென்றிருக்கலாம்
பாதாள அறை பொக்கிஷங்கள்
பறிபோய்விட்டதை எண்ணி
மனம் கலங்கியிருக்கலாம்
வரம் வாங்கி திரும்புபவர்களின்
வாகனங்கள் எப்படி
விபத்தில் சிக்குகின்றன
என்ற கேள்வி உதிக்காமல்
இருந்திருக்கலாம்
அவதாரங்கள் பக்கமே
தர்மம் இருந்ததாக
புத்தகங்களில் படித்திருக்கலாம்
விதி என்ற பெயரில்
மக்களின் வாழ்க்கையில்
விளையாடாமல் இருந்திருக்கலாம்
தான்தோன்றித் தனமாக
செயல்படாமல் இருந்திருந்தால்
சரண கோஷம் எழுப்ப
ஆட்கள் கிடைத்திருப்பார்கள்
மரணத்தை வைத்து
பூச்சாண்டி காட்டாமல்
இருந்திருந்தால்
எல்லா கடவுளர்களும்
தற்கொலை செய்து கொள்ள
வேண்டியிருந்திருக்காது
மரணத்தை ஒருவன்
வென்றால் கூட
கடவுளின் நிலை
கேள்விக்குறிதான்

ப.மதியழகன்