01.!
கவிஞன் !
---------------!
மொழியால்!
முல்லைச் சரம் தொடுப்பான்!
இருளை!
வரிகளால் கிழிப்பான்!
மாயத்திரை அகற்றி!
ஞான தரிசனம் பெறுவான்!
தமிழை மழையெனப் பொழிவான்!
எழுதுகோலால் ஓவியம் வரைவான்!
கற்பனையில் சிறகடித்துப் பறப்பான்!
இறுமாப்புடன் வானை வம்புக்கிழுப்பான்!
கனவில் கூட கவியாகவே!
நடமாடுவான்!
வாழ்க்கை நதியில் எதிர் நீச்சலடிப்பான்!
இயற்கையின் பேரழகை கண்டு வியப்பான்!
தமிழுக்கு மகுடம் சூட்டி!
களிநடனம் புரிவான்!
இலக்கியத்தில் ஊறித் திளைப்பான்!
பாரதி போலவே நடப்பான்!
இனத்துக்கு இழுக்கு நேர்ந்தால்!
விஸ்வரூபம் எடுப்பான்!
காவியங்கள் பல படைப்பான்!
காதலில் சிக்கித் தொலைப்பான்!
பித்தனாய் சுற்றித் திரிவான்!
எழுத்தில் சித்தராய் தவம் புரிவான்!
என்றும் விலை போக மாட்டான்!
தமிழின் மானத்துக்கு தீங்கு நேர!
விடமாட்டான்!
தீக்கனலாய் என்றும் தகிப்பான்!
கவிச்சுடராய் ஒளிவெள்ளம் தருவான்!
தாயை தெய்வமாய் மதிப்பான்!
பெண் உரிமைக்கு குரல் கொடுப்பான்!
அவன் வாழும் காலங்களில்!
நலம் விசாரிக்காதவர்கள்!
இறந்த பின் சிலை வைப்பார்கள். !
02.!
மழைத்தவம் !
------------------!
எங்கே சென்றாய் மழையே!
இங்கே எங்களை தவிக்கவிட்டுவிட்டு!
எங்கே சென்றாய் மழையே!
காற்றே கருணை கொள்!
கார்மேகத்தைக் கடத்தி வந்து!
இந்த ஊருக்கு மேலே நிறுத்திவிடு!
வருண பகவானே!
மரங்களெல்லாம் இலையுதிர்த்து!
நிற்பதைப் பார்!
தளிர்க்கச் செய்ய!
தாராளமாய் தண்ணீர் பாய்ச்சு!
உன்னை வரவழைக்க!
கழுதைக்கு கல்யாணம்!
உன்னை உருக வைக்க!
இசை மேதைகளின்!
இன்னிசை கானம்!
மழை மகளே புவியரசன்!
உன் மீது மையல் கொண்டு!
தவிப்பதைப் பார்!
முத்தமிட்டு சங்கதி பேச!
உன்னை அழைப்பதைப் பார்!
ஆனந்த வெள்ளத்தில்!
நீ மிதக்கும் வேளையில்!
அருவியாய் நிலத்தின் மீது!
நீரை ஊற்று!
மழை தேவதையே!
உன் சிறகிரண்டையும் ஒடித்து விட்டனரா!
உன்னைத் தனிமைச் சிறையில்!
அடைத்துவிட்டனரா!
பயிர் செழிக்க உயிர் தழைக்க!
மனது வை மழையே!
விண்ணோடு எங்களால்!
சண்டையிட முடியாது!
வீண் பேச்சு கதைக்குதவாது!
வானம்பாடி கானம் பாடி!
வசந்தத்தை அழைப்பது போல்!
நாமெல்லாரும் அழைத்திடலாம்!
காற்றில் மண்வாசம் வருது பாருங்கள்!
கிழக்கு திசை கறுக்கத் தொடங்குது பாருங்கள்!
மழைதேவியே!
வெயில் அரக்கனை சம்ஹாரம்!
செய்து கொண்டிருக்கின்றாயா!
உயிர்களுக்கு வரமருள!
துணிந்து விட்டாயா!
உனது வருகைக்கு இடியோசை!
கட்டியம் கூறுகிறதே!
மழைத்தாயின் மனதில்!
ஈரம் இருக்கிறது!
சற்று அண்ணாந்து!
வானைப் பாருங்கள்!
மின்னல் கண்ணைப் பறிக்கின்றது

ப.மதியழகன்