பூலோக பிரம்மாக்கள்
நாங்கள்!
மழைத் தூறலில்
தலை முழுக்கு!
தினம்
வேண்டுதல்கள்
இல்லாதபோதும்
மண்சோறு!
நேர்த்திக் கடன்
இல்லாத போதும்
உண்ணா நோன்பு!
இயந்திரங்களினோடு
இருப்பு!
போக்குவரத்து
வாகனங்களின்
சப்தத் தாலாட்டு!
சல்லிக் கற்குவியல்களில்
உறக்கம்!ஒவ்வொரு
விடியலிலும்
தூசுப் படலங்களின்
வாசம் சுவாசம்!
தொலைவிலிருக்கும்
உறவுகளின்
நினைவாய்
கைப் பேசியின்
அழைப்பு!
நாகரிக
நாடோடிகளாய்
நாள்தோறும்!
இரவு பகலாகவும்-
பகல் இரவாகவும்-
எங்கள் தேசத்திலேயே
அந்நிய
வாசம்!
எங்களைப் போலே
இன்னும்...
சில நேரம் ஏனோ
தோற்றுப் போனதாய்
வெறுஞ் சலிப்பு !
இடம் மாறிப் போனாலும்
எங்களை நினைவூட்டும்
எங்களின் உழைப்பைப்
போலே
உயர்ந்து நிற்கும்
பாலங்கள்!
அறிவியல்
தொழில் நுட்ப
அற்புதங்கள்!
அகல ஆழமாய்
அணைக் கட்டுகள்!
ஓயாமல் ஓடும்
ரெயில்
தண்டவாளங்கள்!
தொடுவானம் தொட்ட
கட்டடங்கள்!
இவைகளின்
ஏதோ ஓர் உருவில்
ஜெயித்தது நாங்களும் தான்!
எங்கள் உழைப்பை
ஜீரணித்து இன்னும்
பலம் பெருகுகிறது
உலகம்!
உழைப்பில்
காய்த்துப் போன
உள்ளங் கையில்
ஆயுள் ரேகைக்குப்
பதிலாய் அட்ச ரேகை
தீர்க்க ரேகை! ஒசோனைக்
காக்க விரையும்
முயற்சி !
இனி
புத்துலகம் பதிவோம்!
வல்லரசு ஏட்டில்
எழிலி