டிசம்பர் 26 - 2004
அதிகாலை வேளை
ஆபத்தாய் முடிந்தது!
உறக்கம் கலையுமுன்னே
இறப்பு நிகழ்ந்தது!
விடியவில்லை -
வேறுகால மாற்றமேதும்
தெரியவில்லை!
விரல் நீட்டும் தூரத்தில்
விதியின் விளையாட்டு முடிந்தது!
சூரியனுக்கு மட்டும்
சூன்யம் முன்பே தெரிந்தது
பாவத்திற்கு ஆளாகாமல்
மேகத்துக்குள் ஒழிந்தது!
நினைத்துப் பார்க்க
முடிய வில்லை
நெஞ்சம் படபடத்து
நின்றது!அந்த மணித்துளிகள்
பயத்தால் இன்றும் நிறைகிறது!
மதியால் மறந்தறியா
பெருங்கேடு நிகழ்ந்தது!
மனங்கள் பதைபதைக்க
மரணம் அரங்கேறியது!
ஆழ்கடலில் அலையை விட்டு
அள்ளிக் கொண்டு வந்தது
கடல் - நீரை மட்டும் கரையைத்
கடந்து வாரி இறைத்து வென்றது!
மனிதரெல்லாம் ஒளிந்து கொள்ள
சந்தர்ப்பம் இல்லை!
மரஞ்செடி கொடிகள் நகர்ந்து
கொள்ள நேரமும் தரவில்லை!
தன் பெருமை நிலை நாட்ட
எல்லை தாண்டி பாய்ந்தது
ஊர் முழுதும் ஈரமாக
தகதிமித் தாண்டவம் ஓய்ந்தது!
இன்று .......
மிஞ்சியிருக்கும் உப்பங்
கழிகளெல்லாம் கல்லறைகள்
விளைந்தது !
வேடிக்கைப் பார்க்கும்
கடல் அனல் மூச்சுக்
காற்றை வெறுமையாய்
வீசுகிறது!
இரவு பகல் ஓயாது
வருந்தி வருந்தி மாய்கிறது!
இப்பொழுதும் இரைச்சலுடன்
ஒப்பாரி வைக்கிறது - தவறான
தன் செயலுக்காய் மண்டியிட்டு
அழுகிறது!
ஏதோ ஓர் புதுமை இந்தத்
திசம்பரில் தொடங்கப் போகிறது!
தன் பாவத்திற்கு பரிஹாரம்
கடல் -
தேடிக் கொள்ள துடிக்கிறது!
சுனாமியாய்
உயிர் குடித்த கடல் ஒரு
ஒப்பந்தம் செய்கிறது
உவர் நீரைக் குடிநீராக்கி
உதவுவதாய்ச் சொல்கிறது !
ஒரு பொழுதும் மானுடத்தைத்
தீண்டுதலில்லை -எந்தச்
சூழலிலும்தன் எல்லை
தாண்டுவதில்லையென
சமுத்திரம் சபதம் செய்கிறது!
எல்லோருக்கும் நன்மை
நடக்குமென்ற நம்பிக்கையில்
இந்த டிசம்பரையும்
சேர்த்துக் கொள்வோம் -நம்
புது நாட்குறிப் பேட்டில்!
-
எழிலி