எல்லாமே முடிவதாய்
நான் உணர்ந்தேன்!
இந்த எழுபத்திரெண்டு
வரை!
என் தூக்கம், என் உணவு,
என் பாவனைகளில்
நான் தோற்றுப்போனதே
கிடையாது!
எல்லா மகிழ்ச்சிகளும்,
வேதனைகளும்
பழக்கப்பட்டவைகளே!
தற்போதைய நாட்களில்
என் பார்வைக் குறைவு,
பசியின்மை, ரத்தக் கட்டிகள்,
மாத்திரைகள் உடலுக்குள்
செய்யும் மாயஜாலம்,
யார் யாரோ வந்துபோகும்
ஆஸ்பத்திரி முதல்
மாடியின் கிழக்கில்
என் திரை மூடிய அறை,
விரைவாய்ப் பரவும்
வேதியல் வாசம்,
தெர்மாஸ் குடுவை
சுடுதண்ணீர், காபி,
உப்பில்லாதக் கூழ்,
இயற்கை உபாதைக்கு
மறைவாய்ப் பாலிதீன் பை!
என் தலைமுறைகளின்
உறக்கம்,
உணவு,
மகிழ்ச்சி,
சௌஹரியம்,
தற்காலிகமாய்-
என்னால் தடைப்பட...
நிச்சயமாய் நான் இரவல்
இரவுகளில் தவிக்கிறேன்!
என்பது மட்டுமே உண்மை -
மரணம் வரும்
வரையில்!
நான் உறங்குவதுமில்லை,
விழிப்பதுமில்லை
எழிலி