ஒளிரட்டும்
ஒவ் வொருவரின்
வாழ்வும்!
மத்தாப்புத் தொழிற்சாலையில்
கருகிய மொட்டுகளுக்காக!
பலகாரக் கடைகளில்
பாகுகளோடு
பாகாய் இளகிய
பிஞ்சுகளுக்காக!
பருத்தித் துணிகளை
பட்டு இழைகளைத்
தறியில் நெய்யும்
படைப்பாளிகளுக்காக!
தையல் கடைகளில்
காஜா எடுக்கும் ஏழைக்
குழந்தைகளுக்காக!
ஆடை -
விற்பனைக் கடைகளில்
கால் கடுக்க நிற்கும்
உழைப்பாளிகளுக்காக!
மளிகைக் கடைகளில்
பலசரக்குப் போட
பம்பரமாய்ச் சுற்றும்
பணியாளர்களுக்காக!
கொண்டாட நினைத்தேன்
தீபாவளி!
என்
சேமிப்பைக் கரைத்து
அவர்களின் கணக்கை
உயர்த்தத் துணிந்தேன்!
அவர்களின் உழைப்பில்
ஒளிர்வது என் தீபவளியானால்
என் உழைப்பில் அவர்களும்
மகிழட்டும்!
எல்லோருக்கும்
இன்பம் மட்டுமே-இந்தத்
தீபாவளி கொடுக்கட்டும்
எழிலி