தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

அகதிப் பட்சி !

எம்.ரிஷான் ஷெரீப்
அப்பாரிய மலைகளைத் தாண்டிய வனாந்தரத்தின்!
பெரு விருட்சமொன்றின் பரவிய கிளைகளில்!
குச்சுக்களால் வேயப்பட்டு!
எமக்கென்றொரு அழகிய கூடிருந்தது!
இணைப்பறவைகள் சேர்த்துக் கட்டிய வீட்டில்!
அழகாய்ப் பிறந்து கீச்சிட்டேனாம் !
இரை திரட்டி வந்த அன்னைப் பட்சி!
தொண்டைக்குள் வைத்தழுத்திய உணவு காயும் முன்!
வேட்டைப் பறவையொன்றின்!
வஞ்சகம் சூழ்ந்த விழிகளிலே விழுந்திட்டேன் !
இறகுகள் இருக்கவில்லை!
வில்லங்கங்கள் தெரியவில்லை!
விசித்திர வாழ்க்கையிதன்!
மறைவிடுக்குகள் அறியவில்லை!
அன்னை அருகிலாப் பொழுதொன்றில்!
சாத்தானியப் பட்சி காவிப்பறந்திற்று என்னை !
கூரிய சொண்டுக்குள் என்!
தோள் கவ்விப் பறக்கும் கணம்!
மேகங்கள் மோதியோ!
தாயின் கண்ணீர்ப் பிரார்த்தனையோ!
எப்படியோ தவறிட்டேன்!
கீழிருந்த இலைச் சருகுக்குள்!
வீழ்ந்து பின் ஒளிந்திட்டேன் !
அடை காத்தவளும் வரவில்லை - பின்னர்!
காவிச் சென்றவனும் வரவில்லை!
எப்படி வளர்ந்தேனென்று!
எனக்கும் தெரியவில்லை!
இறகுகள் பிறந்தன!
தத்தித் தத்திப் பறக்கக் கற்றேன் !
இன்று புராதன நினைவுகளைத் திரட்டியெடுத்து!
வலிமையான குச்சிகள் கொண்டு!
எனக்கொரு வீடு கட்டுகிறேன்!
விஷப் பறவைகள் காவிப்பறக்க இயலா!
உயரத்தில் உருவத்தில்!
விசித்திரமான கூடொன்று கட்டுகிறேன்!
கூரிய சொண்டுகளால் தோள் கவ்வும் வலி!
என் குஞ்சுகளுக்கு வேண்டாம் !

அனிமல் பிளானெட்.. காரண 'காரியம்'

ஜெ.நம்பிராஜன்
01.!
அனிமல் பிளானெட்!
------------------------!
தொலைக்காட்சிகளில் இப்போதெல்லாம்!
மனிதர்களைப் பார்க்க முடிவதில்லை!
மான்களும் மயில்களும் மட்டுமே!
!
கணவன் வேறொருவரின் மனைவியுடன்!
நடனமாட!
மனைவி வேறொருத்தியின் கணவனுடன்!
சரசமாட!
மெய்மறந்த நேயர்கள் சொல்கிறார்கள்!
கெமிஸ்ட்ரி நல்லாயிருக்கு!
முப்பது வயது மங்கையுடன்!
முகத்தில் மீசை முளைக்காத சிறுவன்!
விரச நடனமாட!
அவிழ்ந்து விழும் வகையில்!
ஆடை அணிந்த!
நடுவர் நடிகை சொல்கிறாள்!
மச்சான்...ஐ லவ் யூ டா!
02.!
காரண 'காரியம்'!
------------------!
!
பிழைப்பு!
காலத்தின் கட்டாயம்!
வேறு வழியில்லை!
நான் மட்டுமா...!
உலக நியதி!
ஏதாவதொரு காரணம்!
வைத்திருக்கவே செய்கிறார்கள்!
தங்களை நியாயப்படுத்த!
எல்லாத் துரோகிகளும்!
-ஜெ.நம்பிராஜன்!
-ஜெ.நம்பிராஜன்

நடக்கிறது ஒரு பயணம்

கலைமகன் பைரூஸ்
நாளொன்று புலர்கிறது!
நாளைய விடிக்காக....!
நிறைந்த மனதோடு!
நடக்கிறது ஒரு பயணம்!!
ஆயின்... !
தட்டிப் பறிப்பதற்காய்!
அங்கொரு காகம்!
அண்ணாந்து பார்க்கிறது! !
அழுக்குண்ணிச் சிந்தனையோடு!
பிணந்தின்னும் கழுகுகள்!
நாற்சந்திகளிலும்!
புயல்வீச்சோடு பறக்கிறது! !
கடித்துக்குதறும்!
ஓநாய்கள்!
அலைந்து திரிகின்றன!
பிணமாக்கி மகிழ்ந்திட!!
ஆயின்...!
நடக்கிறது ஒரு பயணம்! !
தட்டுத் தடுமாறியும்!
தடைகள் தாண்டியும்!
முச்சந்தி முட்களைக் கடந்தும்!
தன் பிம்பத்தை!
காணும் இடமெலாம்!
நிழலாய்க் கண்டும்!
களிப்புற்று மகிழ்கிறது உள்ளம்! !
கறுப்பஞ்சாறாய் சுவைத்து!
கருவேப்பிலையாய் ஒதுக்கும்!
கேடுகெட்ட செயல்கண்டு!
பிறந்த்தேனோ!
இத்தரையில் என!
அடிமனது வினாதொடுக்க!
நடக்கிறது ஒரு பயணம்! !
அங்கு!
மேடைகள் போட்டு!
மத்தளம் கொட்டி!
‘சமுதாயம்’ உரக்கப்பேசுகிறது!!
அரவணைக்கவும்!
ஆரத் தழுவவும் அழைக்கிறது!!
அரங்கம்!
பேரொலிக்கு அதிர்கிறது!
இதைக் காணக்கொடுத்தன!
விழிகள் என!
நடக்கிறது ஒரு பயணம்! !
நடுவழியே!
நேத்திரங்கள்!
குத்திநிற்கின்றன!!
காசற்ற பிச்சைப்பாத்திரம்!
வஸ்திரமற்ற உடம்பு!
இவற்றோடு!
பிணமொன்று!
மணம்வீச!
காகமும் கழுகும்!
ஓநாயும்!
பெருமனதுடன் அங்கே!!
பேரிரைச்சல் தாங்கவியலாது!
மீண்டும்!
நடக்கிறது ஒரு பயணம்! !
இடைநடுவே!
சந்தனப்பாடை சுற்றி!
பெருங்கூட்டம் ஓலமிட!
மானுடனின் நிலைசொல்லி!
நடக்கிறது ஒரு பயணம்!
தடுக்கிறது அப்பயணம்!!
மேலும் வழிசெல்லாது!
தடுக்கிறது அப்பயணம்

அப்பாவிற்கு தோழியாய்

சிலம்பூர் யுகா துபாய்
அன்புள்ள அப்பாவிற்கு!
என்னுள்!
காதல்புகுந்துவிட்டதெனக்கூறி!
கவலையுற்றதாக!
அம்மாகூறினார்.!
தண்டிப்பதும்,!
கண்டிப்பதுமே!
பாசமென்று!
தப்பாக நினைத்திருக்கும்!
தந்தையே!!
மனம்திறந்து எழுதுகிறேன்!
மடலை-ஒரு!
தோழனைப்போல்!
தொடர்ந்து வாசிக்கவும்.!
உண்மையென்பதை-முதலில்!
ஒப்புக்கொள்கிறேன்.!
கந்தகத்தோடு!
விளையாடப்போவதாய்!
கவலையுறவேண்டாம்!!
காதலென்ன!
போர்க்குணமா!
புறக்கணிப்பதற்கு?!
பூக்களம்தானே!!
புல்லாங்குழலுக்குள்!
புகுந்த காற்றாய்!
காதல் என்னை!
புதுப்பித்துள்ளது.!
உங்களை பார்ப்பதையே!
தவிர்த்துவந்த எனக்கு!
இப்போதெல்லாம்!
உங்கள்!
தோள்மீது துயிலவேண்டுமென்று!
தோன்றுகிறது.!
பூ வேண்டி மட்டுமே!
ரோஜாச்செடியிடம்!
சென்றுவந்த நான்!
இப்போதெல்லாம்!
உடைந்த சட்டியில்!
செடி உட்கார்ந்திருக்கும்!
அழகையும்!
ரசிக்கிறேன்.!
அன்றாட!
சுயத்தேவைகளை!
ஆற்றவே!
சோம்பேரிய நான்!
சில சிகரம்தொடும்!
சிரத்தையோடு இன்று!
உடையில்!
நடையில்!
செயலில்!
தனித்துவத்தை-எனக்கு!
தயார்படுத்தித்தந்தது!
காதல்.!
கவிதை வாசிக்க!
காற்றை ருசிக்க!
ஓவியம் ரசிக்க!
வானத்தில் வசிக்க!
சிறகின்றி பறக்க!
சரிந்துகிடக்கும்!
சமூகத்தை சரிசெய்ய!
கற்றுகொடுத்தது!
காதல்.!
அம்மா உங்களை!
அறிமுகம் செய்திருந்தாலும்,!
காதல்தான்!
உங்களின்!
உள்ளுர அர்த்தத்தை!
உணர்த்தியது.!
என்னுள்!
காதல் நுழைந்து!
எல்லோரையும்!
எல்லாவற்றையும்!
நேசிக்க வைத்தது.!
காதல்!
வாழ்க்கைக்கான!
சூத்திரமென்றே!
எனக்குத்தோன்றுகிறது.!
பணத்தோடு!
பகை வந்துவிடக்கூடாதென்று!
சந்தோஷத்தோடு!
சண்டையிட்டுக்கொண்டிருக்கும்!
உங்களுக்கு!
ஒரே ஒரு வேண்டுகோள்.!
மனதுக்குள்!
காதலை அனுமதியுங்கள்!
அம்மா அப்போது!
தேவதையாகத்தெரிவார்!
நான்!
தோழியாகத்தெரிவேன்!!
ஒரு மகளாய்!
எழுதுவது மிகைதான்,!
தோழியாய் கூருகிறேன்!
காதல்!
தேவை உங்களுக்கு

அந்த நாள் வரை

விஷ்ணு
மார்கழி பனியில்!
அதிகாலை பூக்கள் ,...!
சித்திரையில் பௌர்ணமி நிலவு...!
மரத்தில் மாங்கனியோடு!
அணீலின் கொஞ்சல் ...!
கூட்டமாக பறக்கும்!
தேசாடன பறவைகள்...!
கரையோடு காதல்தீரா!
அலையோசை...!
வான்மகளின்!
முகம் சிவந்த வெட்கம்,...!
சந்திரனை கண்ட!
அல்லியின் சிரிப்பு,....!
என அத்தனை!
அழகையும்.... அபகரித்த!
உனைக்கண்ட...!
அந்த நாள் வரை ,...!
காதலித்திருந்தேன் !!!...!
அன்பே !!!...!
உனைவிட்டு அவைகளை !!!...*!
-- விஷ்ணு

மனமுதிர் பருவம்

இப்னு ஹம்துன்
காற்றுடன் பொருதும் வேகம்!
காகிதம் போல் மனமாகும்!
வேற்றுமை விளங்கா மோகம்!
வேறென்ன, வளர்சிதை மாற்றம்.!
காட்டாறு போலும் பிரவாகம்!
கவலையெலாம் மூழ்கிப்போகும்!
வீட்டாரும் வியக்க நடையாகும்!
விளைவறியா வாலிப விவசாயம்!
கேட்பதெல்லாம் காதில் மோதும்!
காதல் ஒன்றே இதயம் சேரும்!
நாட்பகலாய் நாகரீகம் நாடும்!
நல்லவையோ நகைப்புக்காகும்.!
எதிர்பால் ஈர்ப்பு இருக்கும்!
ஏதேதோ கவிதை சுரக்கும்!
எதிர்மறை எண்ணம் வாய்க்கும்!
இராக்கனவு வெட்கம் பூக்கும்.!
அழகின் அழகாய் தன்னைப் பார்க்கும்!
ஆயிரமாயிரம் நேரம் போக்கும்!
வழமைஅழகை வெளியில் தேடும்!
உள்ள அழகை உணராப் பருவம்.!
!
போற்றிடும் இலக்கை நோக்கும்!
பொறுமையால் வெற்றி சேர்க்கும்!
ஆற்றலுயர் இளையர் கூட்டம்!
அவனியிலே ஒளியைக் கூட்டும்.!
- இப்னு ஹம்துன்!
(ஜுன் 20, 2006ல் எழுதியது)

மீளவும் மரங்களில் தொங்கி விளையாடலாம்

துவாரகன்
மீளவும் மரங்களில் தொங்கி விளையாடலாம்!
-துவாரகன்-!
எப்போதோ முடிந்திருக்க வேண்டியது!
இன்னமும் தொடர்கிறது.!
ஓடிய சைக்கிளில் இருந்து !
இறங்கி நடந்து !
ஓடவேண்டியிருக்கிறது.!
போட்ட தொப்பி !
கழற்றி போடவேண்டியிருக்கிறது.!
எல்லாம் சரிபார்த்து மூடப்பட்ட !
கைப்பை !
மீளவும் திறந்து திறந்து!
மூடவேண்டியிருக்கிறது.!
என் அடையாளங்கள் அனைத்தும் !
சரியாகவே உள்ளன.!
என்றாலும் !
எடுக்கவும் பார்க்கவும் வைக்கவும் வேண்டியிருக்;கிறது.!
என்ன இது?!
மீளவும் மீளவும் !
ஆரியமாலா ஆரியமாலா பாட்டுப்போல் !
கீறிக்கொண்டேயிருக்கிறது.!
குரங்கு மனிதனாகி !
மனிதன் குரங்குகளாகும் காலங்கள் எங்களதோ?!
இப்படியே போனால் !
மரங்களில் தொங்கி விளையாடவேண்டியதுதான்!
மீளவும் மீளவும் குரங்குகள்போல்!!
171020070715

ஒருவன்....செருப்பு

சூர்யா கண்ணன்
1.ஒருவன்!
மதம்?!
மொழி?!
ஜாதி?!
கட்சி?!
சங்கம்?!
ம்...?!
கமல்? ரஜினி?!
லக்ஸ்? கோல்கேட்?!
ஓல்டு மங்க்? கணேஷ் பீடி?!
அட! எதுவுமில்லையா?!
தனிப்பட்டவனா?!
மன்னிக்கவும்!
அப்படியிருக்க முடியாது!
வேண்டுமானால்!
இப்படி வைத்துக்கொள்வோம்!
நீ தனிப்பட்டவர்களில் ஒருவன்!!
!
2.செருப்பு!
நீரும் சகதியுமாய்!
சொத சொதவென..,!
இரண்டடி முன்வைத்தால்!
ஓரடி பின்னிழுக்கும்!
மழைக் காலத்தில்!
இந்த செருப்பு!!
!
- சூர்யா கண்ணன்!
குன்னூர்

எனக்கானவளே

நீதீ
எனக்காக காத்திருக்கிறாய்!
அந்தி சாயும் நேரத்தில்!
தொய்ந்த முகமாய்!
கதவோரம் காய்ந்து நின்று!
நள்ளிரவு வரை!
தூங்க விடுவதில்லை!
நண்டூற நரிஊற!
என்னவோ கதைத்து!
எல்லாம் தெரிந்தவளாய் விளையாடுகிறாய்!
ஈடு கொடுக்க முடியாததால்!
உன்னைப் போல் உருமாற்ற!
என்னையும் முயற்சிக்கிறாய்!
என் மார்பில் தலைவைத்து!
எப்பொழு தூங்குவாயோ!
களைத்துப் போன உன்னை!
கலைந்தழுதிடாமல் சரிசெய்ய!
துயில் கொள்ளும் உன்னழகு!
துன்புறுத்தவே செய்கிறது!
அதிகாலை அவசரத்தில்!
உன்னை கவனிக்காமல்!
என்னென்னவோ செய்துவிட்டு!
அலுவலகம் போகும்போது!
விழித்த உன்முகம் பார்க்க!
தவமிருக்கிறேன்!
செல்லச் சிணுங்களாய்!
இருள் விலக்கி இமைபிரித்து!
வெள்ளை சூரியன்!
உன் கண்னை கூச!
கலங்கிய விழியுடன்!
விடைகொடுக்கிறாய்!
கையில் முத்தமிட்டு!
காற்று வழி தூது அனுப்பி!
எப்ப வருவ!
சாயங்காலம் சாக்லெட் கொண்டா!
டாட்டா ப்பா....!
என நீ!
சொல்லும் தருணத்தில்தான்!
என் முழு நாளும்!
முழுமையடைகிறது.!

சமாதானம்

கலியுகன்
நாளை நிச்சயமாய்!
மலர்ந்துவிடும் ஓர் விடியல்!
குவிந்துகிடக்கும் பிணங்களின்!
வாடைக்கு மத்தியில்!
சமாதானத்தின் யாசிப்பிற்கோ!
யாரும் இருக்கமாட்டார்கள்!
பிணந்தின்னி கழுகுகளும்!
காகங்களும் தான் !
மிஞசிப்போயிருக்கும்!
கொன்றவர்கள் வென்றவர்கள்!
தெருவில் கூவி ஆர்ப்பரிக்கமாட்டார்கள்!
மரணங்கள் மனங்களை!
சலிப்புறச் செய்திருக்கும் - அதனால்!
அவர்கள் புனிதப்படுத்தப்படக்கூடும்!
துப்பாக்கிகளோ துருப்பிடித்துப்போகும்!
பீரங்கி குழாய்களுக்குள்!
குருவிகள் குதூகலிக்கும்!
சமாதானத்தின் தேடலில்!
புதுயுகம் மலர்ந்ததாய்!
எங்கும் அமைதி புரழும்!
அவர்கள் ஆழ்வதற்கு!
ஆழப்படுபவராய் எவரும்!
இருக்கப்போவதில்லை!
நாளை மலரும் !
ஓர் விடியல் எமக்காய்!
பிணங்களின் வாடைக்கு நடுவே!
-கலியுகன்