போதுமடா சாமி...2 - த.சு.மணியம்

Photo by Paweł Czerwiński on Unsplash

நாற்சார வீடுமங்கே நடுவாய் நிற்க!
நாலுபக்க வேலிகளும் முருங்கை காய்க்க!
காற்றோடு சலசலத்து தென்னை வாழை!
காலையிலே சாமி வைக்க மரத்தில் பூவும்!
தூற்றோடு துரவுகளும் சுரத்து முட்ட!
சுற்றிவந்து நீர் பருகும் கோழி, ஆடும்!
நேற்றோடு முடிந்திடுத்தே அவளின் வாழ்வில்!
நெஞ்சமின்று கலங்குகுதே நினைவை எண்ணி.!
பிள்ளைகளின் பின்னலினால் விமானம் ஏறி!
பிறந்தமண்ணைப் பிரிந்துவந்த அவளின் வாழ்வும்!
கொள்ளைபோயோ வருடமது இரண்டாய் நீள!
கொடுத்தஅந்த சோசல் பணம் எதுவோ ஆக!
பிள்ளைபெறு பார்க்கவந்து வருடம் இரண்டும்!
பெரும் பகுதி அவள் உழைப்போ சமையல்கட்டாய்!
வெள்ளையென நம்பி வந்தாள் கள்ளும் வெள்ளை!
வேதனையில் குமுறுகிறாள் மகனாய்ப் போச்சே.!
போகவிடு என்றவளும் பல நாட்கேட்க!
பொறுத்திரணை பேரனுக்கு ஆண்டு இரண்டும்!
தாகமுடன் களைப்படைந்த தாயின் சோகம்!
தனம்தேடும் தவிப்புடனே தனயன் ஏக்கம்!
வேகமுடன் முடிவெடுக்கும் திறனும் உள்ளாள்!
வேற்றிடத்தில் ஏதறிவாள் ஏதைச் செய்வாள்!
சோகமுடன் வாழ்வுமது கழிந்தே போக!
சொற்பதினம் பொறுத்திருக்காள் ஊர் போய்ச்சேர.!
கேடுகெட்ட மானுடனே கேளும் கொஞ்சம்!
கேள்வியது உன் வாழ்வோ தினமும் இங்கே!
பாடுபட்டு வழர்த்துவிட்ட பாசத்துக்கா!
பணம் தேட பக்குவமாய் இதனைக் கொண்டாய்!
கூடுகட்டி முட்டையிட்ட குற்றம் என்றால்-நீ!
கூண்டோடு இங்கிருக்க ஏதோ காதை!
நாடுவிட்டு நாடு வந்தும் உன்தன் மூளை!
நல்லவற்றை நினைக்குதில்லை ஏனோ தானோ.!
த.சு.மணியம்
த.சு.மணியம்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.