அட்டமத்துச் சனியனும் ஆட்டுவதாய் எள் எரிக்க!
பொட்டரையும் கூப்பிட்டு போவதற்காய் காத்திருக்க!
எட்டரை மணி பஸ்சும் எஞ்சின் பிழை நின்றுவிட!
சட்டரைச் சாத்திவிட்டு சாது ஐயர் மாறிவிட்டார்.!
சனி தோசம் என்று சொல்லி சம்பந்தி நாளுரைக்க !
பனிக்காலம் எனத் தெரிந்தும் பாதை குளிர் புரிந்திருந்தும்!
இனிக் காலம் தாமதிக்கா இன்றைக்கே எரித்திடென்று!
முனிக்கோலம் அவள் போட முடிக்கவென நான் நடந்தேன்.!
என்னைச் சனி பகவான் எப்படித்தான் ஆட்டுதென்று!
முன்னை வினைப்பயனை முனகியுமே நான் நடக்க!
பின்னை சனி தொடருதெனும் பிரமையினால் தடுக்கி விழ!
பொன்னைப்போல் பொதியும் பொடிப்பொடியாய் சிதறியதே.!
வாற புரட்டாதி வாங்கி வைத்து எள்ளுடனே!
போற வழி கட்டையிலே போனாலும் கவலையின்றி!
மாற சனி தோசம் மறக்காமல் எள் எரிக்க!
தேற வழி நீ தந்தால் தெய்வம் என்று நான் விழுவேன்.!
நானே சனியனைப்போல் நாலு பேரைச் சேரவிடா!
மானே தேனே என்று மறைந்திருந்து குத்துறவன்!
வீணே எள்ளதனை விலை கொடுத்து வாங்கிவந்து!
ஏனோ அவன் பெயரில் என் தலையில் கொட்டுவமே.!
கண்ணான மனைவியுடன் கண் குளிரக் குஞ்சுகளும்!
விண்ணான புண்ணியத்தால் வீற்றிருக்க பதியினிலே!
மண்ணான என் குணத்தால் நாளும் சனி தேடிவரின்!
உன் ஆணைக் கேட்கிறேன் உருப்படியாய் ஏது செய்ய?!
-- த.சு.மணியம்
த.சு.மணியம்