அணைக்கும் உரிமையை
உனக்கே தந்து விட்டேன்- இன்று
அடிக்கும் உரிமையை மட்டும்
எடுத்துக்கொண்டாய் முதன் முறையாய்.
கொஞ்சலும் செல்லக் கில்லலும் மட்டுமே
அறிந்த என் கன்னங்கள்
பெரிய பொக்கிஷங்கள் தான்- உன்
ரேகைகள் பதிந்தது அங்கு மட்டும்தானே...
என் தோள் பற்றி உலுக்கி
நீ திட்டிய நேரத்தில் தான்
உன் மூச்சுக் காற்றின்
அருகாமையை உணர்ந்தேன் நான்.
என் உயிர்வரை சென்று
வேர் அறுக்கும் வலிகொண்டவை
என்னை வெறுத்து ஒதுக்கும்
உன் மௌன மொழிகள்..
சுடவில்லை உன் தீச்சொற்கள்,
அந்தத் தருணத்திலேனும்
என் முகம் பார்த்த
உன் விழிகளை ரசித்தேன்..
காதல் பித்துதான் எனக்கு
மணமான நாள் முதலாய்,
நீயல்லாத விஷயம் பற்றி
யோசிப்பதே இல்லை நான்.
பார்த்துப் பார்த்து அலங்கரித்தேன்,
வீடும் மின்னியது கண்ணாடியாய்...
என்னைப் போல் அதுவும்
உன் பார்வையை எட்டவில்லை.
பலவித பதார்த்தங்கள்
உனக்காய்ப் படைத்தேன்...
என் பேச்சு போல் அவையும்
உனக்கு ருசிக்கவில்லை.
என் காதல் சொல்ல
எனக்குத் துணிவும் இல்லை,
அதை உணரும் பிரியம்
உன் உள்ளத்திலும் இல்லை.
பயமறியா இளங்கன்றாய்ச்
சுற்றித் திரிந்த என்னை
உன் வேளிக்குள் அடைத்தாய்,
அசைவின்றி முடக்கினாய்..
தாய் தேடும் குழந்தையாய்
உன் அன்பிற்கு ஏங்குகிறேன்;
நீர் தேடும் வேராய்
உன் காதல் வேண்டுகிறேன்.
சுற்றமும் நட்பும் இல்லாத
தனிமை என்னைக் கொல்கிறது,
என்னை வெறுக்கும் உயிரானாலும்
என்னருகில் நீ வேண்டும்..
உன் அன்பைப் பெற்றுவிட எண்ணி
என்னையே தொலைத்துவிட்டேன்-அர்த்தநாரியாய்
உன் மனதோடு கலக்க நினைத்து
என் உயிரில் பாதியை இழந்துவிட்டேன்..
ஓர் உயிராய் என்னை
என்றேனும் உணர்வாய் என்றே
உயிர் பிடித்து வைத்திருக்கிறேன்...
உனக்காய்க் காத்திருக்கிறேன்.
சிரிக்க மறந்தேன்; எதையும்
ரசிக்க மறந்தேன் - உன்னால்
வாழவும் மறந்து கொண்டிருக்கிறேன்,
இருந்தும் உன்னைக் காதலிக்கிறேன்..
இறந்தும் உன்னைக் காதலிப்பேன்
இனியா