அக்கரைப் பச்சை - மாயாண்டி சந்திரசேகரன்

Photo by Artiom Vallat on Unsplash

சக்கரை வாழ்க்கையெண்ணி அக்கரைசெல்வர்
சக்கர வாழ்க்கை இதுவெனப் புரிந்து கொள்வர்
வறுமையை வெல்ல வாடிகனும் செல்வர்
வெறுமையை வெல்ல இதுவல்ல வழியென உணர்ந்து கொள்வர்

வறுமையின் கருமை வெந்து சாம்பலாகக் கூடும்
வாழ்வில் வெறுமையோ செந்தீயாய் தினம் எரியும்
சொத்தும் கிடைக்கும் பத்தும் கிடைக்கும்
சொகுசான வீடு கார் எனப் பல கிடைக்கும்
எல்லாம் கிடைத்தது போல ஊருக்குத் தெரியும்
உள்ளில் மெழுகாய் உருகுவது யாருக்குப் புரியும்?

சுகம் தொலைத்து நித்தம் முகம் தொலைத்து
அகம் நனைத்து சொந்தம் தினம் நினைத்து
வேதனையாய்க் கழியுது வாழ்க்கை இங்கு!

வேரை மறந்து ஊரை மறந்து
உற்றார் உறவினர் சுற்றம் மறந்து
பற்றில்லாமல் கிடைக்குது பல வெள்ளிப் பணம்
கொள்ளியாய் மாறி நித்தம் கொல்வது யார்க்கு புரியும்?

சொர்க்கத்திலும் சோகம் உண்டு
நரகத்திலும் சில இன்பம் உண்டு
தங்கத்திற்கும் சில குறைகள் உண்டு
தகரத்திற்கும் நல் குணங்கள் உண்டு

தலைமுறையை மாற்றிக் கொள்ள
தள்ளிச் செல்வதில் தப்பேதும் இல்லை
நடைமுறை இதுவெனப் புரிந்து கொண்டால் - நெஞ்சில்
அடைமழைக் காலமும் விடுமுறை எடுத்து கொள்ளும்.

அக்கறையாய் வாழ்வை அமைத்துக் கொண்டால்
எக்குறையும் சற்று எட்டியே நிற்கும்
இக்கரையோ அக்கரையோ
எக்கரையும் சக்கரையாய் இனிதே கரையும்
மாயாண்டி சந்திரசேகரன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.