ஈவு இறக்கமற்று என்னை பறித்துச்
சூடிக் கொண்டவளே!
இந்நேரம்
என் காம்பின் கண்ணீரைப்
பக்கத்து பூக்கள் துடைத்திருக்கும்.
அழுது கொண்டிருக்கும்
என்னை தாங்கிய காம்புகளுக்கு
ஆறுதல் சொல்லியிருக்கும்
அரும்புகள்...
வாசிக்க வந்த கவிதையோடு
நான் காணாத ஏக்கத்தில்
கசந்து போய் திரும்பியிருக்கும்
வண்டுகள்...
தலைகோத வந்து
நான் இல்லாத இடத்தை தடவிப்பார்த்து
தவித்திருக்கும் தென்றல்.
வெடுக்கென்று பறித்த
உன் விரல்களுக்கு தெரியாது
என் வலி!
வலித்துக் கொண்டே
உன்னை அலங்கரிக்கிறது
என் மரணம்
கவிதை வீதி சௌந்தர்