தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

உதிக்கும் சூரியனே.....

க. ராஜேஷ்
பனியை உருக்க வரும் சூரியன்போல்
பகலெல்லாம் உழைத்து ஓய்வெடுடா
பனிமலையையே உருக்க நீ நினைத்தால்
பகலவனாய் வானில் நீ எரிந்திடடா!

சிறுக சிறுக வரும் வியர்வைத்துளி
உன் உழைப்பிற்குக் கிடைத்த பொன்துளிகள்
பெருகி பெருகி வரும் ஊனின் வலி
உன் உடலை செய்யும் உறுதியடா!

ஓடும் ஓட்டமும் ஓயாது வாழ்வு
முடியாப் பாதையின் தொடர்ச்சியடா,
வாழ்வில் கடினப் பாதைகள் பலவுண்டு
அதைக் கண்கள் மூடாமல் ஓடிடடா,
கடினப் பாதைகளில் ஓடிப் பழகிவிட்டால்
இனி எந்தப் பாதையிலும் ஓடிடலாம்!

சூழும் துன்ப இருளை நீ நீக்கிடவே
புது சூரியனாய் வானில் உதித்திடடா,
சிகர தூரம் அது மிக தூரமில்லை
உன் புன்சிரிப்பால் அதை நீ கடந்திடலாம்,
கடக்கும் முன்பு ஒரு எச்சரிக்கை
கடந்தப் பாதையை என்றும் மறக்காதே!

உலகம் பழிக்கலாம் உள்ளம் வலிக்காலம்
உன் இதய அறைகள் ஓய்வதுண்டா?
வேகம் குறையலாம் சிந்தைக் குழம்பலாம்
உன் பெருமுயற்சிக் குறைந்திடுமா?
வரும் கண்ணீரையே தாக மருந்தாக்கிடு
உன் முயற்சிக்கு புதுவேகம் கொடு!

இனி நாய்கள் மட்டுமே

சம்பூர் வதனரூபன்
கதவோரம் தாழ்வாரம்!
அடுப்படிச் சாம்பல் மேடு.. என!
சுருண்டு கிடந்த நாய்கள்!
ஒன்றாய்க் கூடி குமைந்து கிடந்தன!
ஒன்றைச் சினைப்படுத்த..!
தமக்குள் தாமே.. தம்மை முறைத்தும்!
தமக்குள்ளே தம்மையே கடித்தும்!
ஒன்றை ஒன்று விரட்டியும் முந்தியடித்தும்!
முதன்மைப்படவும் முதலில் ஏறவும்!
போராடுவது போலவும் போட்டியிடுவதாகவும்!
தமது உரிமையை விடாது தாமே காப்பதாகவும்!
அதற்காய்...!
முழுவதையும் இழந்தாயினும் புணர்வது!
எனவும் போல!
தம்மையே முறைத்தும் கடித்தும் விரட்டியும்!
குறிகள் விறைத்து குமையும்.!
ஒன்றையே புணர..!
சினைக்குள் சாத்தியம்!
நிமிர்ந்த வாலுடனோ சுருளும் விதமாகவோ!
குரைக்கக் கூடியதாகவோ!
உறுமிக் கடிக்கத் தக்கதாகவோ!
வேட்டைத் தனத்தோடோ வெகுளியாகவோ!
சில நாய்கள்.!
நாயாக மட்டுமே இருப்பது சாத்தியம்.!
இனியவை!
விரும்புவதும் ஏற்பதுவும்!
எவரும்!
பல்லிடுக்கிலிருந்து கிளறி துப்பும்!
எச்சில் இறைச்சித் துண்டாயிருக்கலாம்.!
ஏப்பங்களின் பின்னாக தூக்கிப் போடும்!
எலும்பு மீதமாக இருக்கலாம்.!
இந்த நாய்கள் காத்திருக்கும்.!
சொச்சமாகவேனும்.. எதை வீசினாலும்!
கவ்விக் கொள்ளும்.!
விருந்தெனச் சண்டையிட்டு!
அதையும் சகதியில் வீசும்.!
பின்!
வீறாப்போடு வெறுங்குடலைக் கழியும்.!
கடைசியில் எச்சிலூறி!
எவரேனும் கால்களை நக்கிக் கிடக்கும்.!
நாய்கள்.!
வேட்டைப் பற்களிருந்தாலும்!
விரல் நகம் நீண்டிருந்தாலும்!
அவ்வப்பொழுதுகளில் உறுமினாலும்!
எலும்புகள் தானென்றில்லை..எதுகிடைத்தாலும்!
நாக்கொழுகித் தின்னும்.!
தமக்குள் தாமே முந்தும்..கடிக்கும்..!
இவை!
நாய்கள்.. நாய்கள்.. நாய்கள்

நண்பனே

புவனா பாலா
ஆறறிவு நண்பனே நில்லு !
நீ எங்கே போகிறாய் சொல்லு ?!

இருட்டில் ஒளிந்த இயற்கை
அதன் அழகை காட்டி இருக்கு!

ஆதவன் அன்பை பருகிய மொட்டு
பூவாய் பிறந்திருக்கு

பார்வையாளர் யாருமின்றி
பாராட்டு ஏதும் தேவையின்றி
பறவை பாடியிருக்கு

உன் இனம் உன்னை பார்த்திருக்கு
மரங்களும் உன்னுடன் நடந்திருக்கு

இதை காணாது நீயும்
கை பேசியோடு கலந்து
எங்கே போகிறாய் சொல்லு ?

இப்படி மனிதனும் மறந்து
இயற்கையும் துறந்து
நித்தமும் உன் பயணம் தான்

எங்கே சொல்லு !

ஆறறிவு நண்பனே நில்லு !
நீ எங்கே போகிறாய் சொல்லு!

தாய்மை!

இரா.சி. சுந்தரமயில்
ஒக்கலில் இருத்தி!
காக்கா கதைசொல்லி!
காரியத்தை சாதித்தேன்!
வாய்ப்புகுவது தெரியாமல்!
வயிறு நிறைய உண்டுவிட்டு!
குழந்தை சொன்னது!
நரி நீ என்று!!
அப்போதும்!
அவள் மனம் மகிழ்ந்தது!
குழந்தை தானே என்று

ஓடு

செ.உதய குமார்
நாளை நன்றன்று
இன்றே நன்று
என இன்றே
ஓடு !

பொழுதுகள் ஓடலாம்
ஆனால்
பொழுதுபோக்கிற்காக
ஓடாதே !

கடந்தவை மறந்திடு !
நடப்பவை கற்றிடு !
என்றும் மனதை
தேற்றியே வைத்திடு !

நல்லவை செய்ய
நடையிலும் உனை
நாளைய உலகம்
திரையிடும் !
ஓடு..!

பொறுப்புகள்

செ.உதய குமார்
நிச்சயித்திடாத காலத்தைவிட
நிச்சயித்த காலத்தில் தான்
மிகவும் பயமாக உள்ளது
பொறுப்புகள்

நிறமாறும் மனிதர்கள்

செ.உதய குமார்
வானில் பெருமழை
ஒன்று கண்டேன் !
அன்று வானில்
வெண்ணிற மேகம்,
கருத்திருந்ததையும் கண்டேன் !
இயற்கை எழில் கொஞ்சும்
மேகமே நிறமாறும் போது
மனிதன் என்ன விதிவிலக்கா ?
என்றுணர்ந்தேன்.

முதுமைகண்ட மதுவாய் நானும் புதுமை கொண்ட பதுமையவளும்...

கௌதமன் நீல்ராஜ்
செறுவிளை குழல்சூடி மெல்லிடையில் உடைமறைத்து
குறுநகை நிழலாடி புல்தரையில் நடைபயில...

கருவிழி நெருஞ்சிபேல பார்த்துவரும் குறிஞ்சிப்பாட்டு
இருசெவி அருகில்வந்து சேர்ந்ததென்ன அறிவொளியே...!

வெண்சங்கு பெண்ணுருவே பண்பாடும் தொண்நடையே
விண்தொட்டு மண்சேரா வண்ணமிகை எண்ணுருவே...!

இலையுடுத்தும் மலைக்கள்ளன் குலைமண்ணை கலையாக்க
நிலைகொண்டேன் விலைகாண அலையாடும் சிலைவடிவே...!

புண்ணியபூமி கண்ணம்பூசிய திண்ணம்மிகை வண்டல்புழுதி
கண்மணிநீயும் கண்ணியம்மறந்து கண்டபொழுதே தண்டித்ததேனோ...?

வற்றியஓடை வடுவாக வெற்றிக்கனி சிலருக்கு
சிற்றுண்டி நெடுஞ்சாலை சிற்றின்பம் பலருக்கு...

வாளேந்தி வலம்வரும் வங்கநாட்டு தங்கமகளே
நாளேட்டின் பலமறிந்து எங்கள்குறை எங்குசொல்ல...?

உனக்கான நான்

மைவிழி
ஆரியனைப் போல் இதழ் சிரிக்க ,
மல்லிகை செண்டாய் பெண் இருக்க
பூத்தொடுத்து சென்றாய் ஒரு பார்வையில்......
சுடரிபோல் எரியும் இவள் ஸ்வாசக்காற்றில் மறந்தாய் இஞ்ஞாலத்தை !!!
விலகிட நேர்ந்தால் வெறுமையே இவன் வாழ்வில்
வெண்பனியும் காரிருளாய்- சுடரியும் தொடரான அம்புலியாய்
தோன்றுதடி உன் அருகில்!!!!
மாயாவினை செய்தாய் என்னிடத்தில் தொலைத்தேனே என்னை உன்னிடத்தில்
மனமற்ற மந்தாரையில் நறுமணம் அளித்தாய்
இளமையில் மனம்- துள்ள முதுமையில் குணம் அள்ள!!!
புரிதல் நம்மை காக்க்குமே: என்றென்றும் உனக்கானா "நான்"

தனிமையின் வலி

அந்தோணி ரெனிஸ்டன்
தனிமை என்னும் காட்டில்....
பயம் என்னும் இருளில்....
உறக்கமில்லா இரவுகள் கழிய....
எதையோ தேடுது விழிகள்....

வழிகளுண்டு வெளியே செல்ல....
இருந்தும் வலிகள் உள்ளே மெல்ல கொல்ல...
நடக்க மறுக்குது கால்கள்....

ஆயிரம் உண்டு வெளியே சொல்ல....
அத்தனையும் மனதிற்குள் போட்டு மெல்ல....
மௌனம் என்னும் மொழியில் காலம் செல்கிறது...

அலையடிக்கும் நெஞ்சம்....
தனிமையே வேண்டாம் எனக் கெஞ்சும்....
கடைசியில் வெறுமையே மிஞ்சும்.....

தூர தெரிகிறது ஒற்றை நிலவு....
அதையும் உறவாட மேகங்கள் உண்டு....
நட்சத்திரங்களின் கூட்டம் பார்த்து...
கிணற்றுத் தவளை மனமிதோ பிதற்றிக்கொள்கிறது....

காட்டு வெள்ளம் கரை புரண்டோட...
அதில் ஒரு ஓடம் சுழன்று செல்ல....
ஓடம் போல் மனமோ பரிதவிக்கிறது.....

சுற்றி எங்கிலும் பூந்தோட்டம் இருந்தும்....
கள்ளிச்செடி மேல் காதல் கொண்டு...
முட்களின் மேல் துயில் கொள்கிறது வண்ணத்திப்பூச்சி....

மழை காணாபயிர் போல மனம் இங்கு வாட......
இறக்கை இல்லாத பறவை போல வாழ்க்கை முடங்க....
காற்றுகூட கணக்கிறது...
கண்ணீர் வர மறுக்கிறது.....

குடம் குடமாய் தண்ணீர் ஊற்றியும்
பட்டமரம் தளிர்ப்பதில்லை...
கொம்புத் தேன் குடம் இருந்தும்
சர்க்கரை நோயாளிக்கு பயனில்லை.....

காலம் மெல்ல மாறலாம்...
கவலைகள் கடந்து போகலாம்....
வலிகளும் கூட ஆறலாம்...
ஆனால்,
நினைவுகள் என்றும் மாறாது... மாறாது.... மாறாது....