தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

இரு உலகங்கள்

த.சு.மணியம்
தொட்டிலில் வாழ்வைக் காணா தோளிலே தூங்கும் பிள்ளை!
வட்டிலில் பால் கொடுக்க வழியுமோ அறியா அன்னை!
கொட்டிலும் இவர்க்கு உண்டா பட்ட அம் மரமே சாட்சி!
தட்டியும் அவரும் கேட்க தமக்கென எவர்தாம் சொந்தம்.!
பாட்டியும் பல நாமத்தில் பானமோ பலதாய் ஓடும்!
பாட்டிக்கும் பிறந்த நாளாம் பதறுறாள் கேக்கும் வெட்ட!
கூட்டியே சொந்தம் சேர்ந்து குடும்பமாய் படமும் இங்கு!
காட்டும் இக் கோலம் கண்டு கலங்குகிறார் அகதி ஏற்றோர்.!
கிடுகுகள் கிழிந்த சேலை குளிக்கும் பெண் மானம் காக்கும்!
படுத்திட அவளோ எண்ணில் ஓலையோ சுவராய் மாறும் !
எடுத்தொரு அவளம் உண்ண எண்ணிடில் ஏது தேறும்!
இடுக்கணே பலவைக் கண்டும் இவள் ஒரு மானப் பெண்ணே.!
குளிக்கவே போனால் இங்கு குவியுது வாசப் போத்தல்!
மழித்துமே வெட்டிக்கூந்தல் வலம் வரும் ஆச்சி இங்கு!
பசிக்குமாய் உணவும் உண்ண பத்துமே ரகத்தில் கோப்பை!
ருசிக்குமாய் நாளும் உண்டு நெருக்குதே நோய்கள் இன்று.!
வெட்டியே விறகும் விற்று வேகிற வயிற்றைக் காக்க!
தட்டியே பொறுக்கி அள்ளும் அரிசியே அவர்க்குத் தஞ்சம்!
கட்டிய சேலை சேதம் கண்டிடின் அதனைத் தைக்க!
முட்டியில் சல்லி உண்டா வாங்கிட ஊசிதானும்.!
அன்னவள் நகைகள் மாற அதற்கென உடுப்பும் மாறும்!
யன்னலில் தொங்கும் அந்த துணிகளும் கிழமை மாறும் !
தன்னது அழகை மாற்ற தாயுமோ அவஸ்தை நாளும்!
என்னது வசதி சேர்ந்தும் இவள் மகள் இரவில் றோட்டில்.!
-த.சு.மணியம்

முதிர்கன்னி

யசோதா காந்த்
ஏழை வீட்டு மூத்த பெண்ணாய்!
அழகே இல்லாத துர்பாக்கியவதியாய் நானும்!
அழகாய் நான்கு தங்கைகளும் ..!
என்னை பெண்பார்க்க வந்தவர்களுக்கோ!
தங்கைகளை மணமுடிக்க ஆசை!
உள்ளுக்குள் அழுதும் ..புறம் சிரித்தும்!
சம்மதம் சொன்னேன் தங்கைகள் வாழ்விற்கு!
என் வயது தோழிகளுக்கோ ....!
பள்ளியிலும் இடுப்பிலும் வயிற்றிலும் குழந்தைகள்!
இரண்டாம் மூன்றாம் தாரமாய் கூட!
என்னை மணமுடிக்க வருவாரில்லையே!
யாரை குத்தம்சொல்லுவது!
என்னை பெத்த தாய் தந்தையினயோ!
அழகாய் என்னை படைக்க மறந்த இறைவனையோ!
ஆசைகளையும் ஏக்கங்களையும்!
எனக்குள் புதைத்து!
இரவெல்லாம் கண்ணீரால் என் தலையணையை நனைத்து!
மௌனமாய் அழுகிறேனே!
முதிர் கன்னி நான்

நவீனள்

ராம்ப்ரசாத், சென்னை
தன்னில் தொலைந்த!
ஆணைப் பற்றி!
அவள் அறிந்தே இருக்கிறாள்...!
தொலையாத பெண்ணின்!
குறிப்புக்களை அவள்!
வாசித்தபடியே இருக்கிறாள்...!
வார்த்தைக‌ளின் பின்வாசல்களை!
அடைத்தே இருக்கிறாள்...!
தொலையாததைக் கொண்டு!
தொலைந்ததைத் தேட‌!
அவள் என்றுமே!
முயன்றதில்லை...!
ஈர்ப்பு விசை விதிகளை!
அவள் ச‌ரிபார்த்த‌தில்லை...!
ஊராரின் முன் ந‌ட‌க்கையில்!
செவிக‌ளை அடைக்க‌!
அவள் என்றுமே ம‌ற‌ப்ப‌தில்லை..!

எங்களின் தேசம்

நிர்வாணி
1.!
எனக்கென்றவொரு பாதையில் சென்றுகொண்டிருந்தேன்!
அதே வழியில் என் தம்பியும்!
அவனைத்தொடர்ந்து அவனது நண்பர்களும்!
பாதையில் ஏதோ தடக்கி விழுந்துவிட்டேன்!
உதவிக்காக கரமேதும் வரவில்லை!
என்ன மனிதர்களென்று வெறுத்துக்கொண்டு!
தலை து£க்கிய என் தலைக்குப்பின்னால்!
அத்தனை தலைகளும் இரத்த வெள்ளத்தில்!
என் தம்பி உட்பட.!
!
2.!
எங்களின் தேசத்தில் உழுது பயி£¤ட்டு!
பச்சையைப் பார்த்து பசியாறியவர்கள்!
நாங்கள்!
இன்று எம் தேசத்தில்!
குண்டுகள் வீழ்ந்து பலியாவதும்!
நாங்கள்!
ஒரு நீண்ட பயணத்தில்!
மீண்டும் எம் தேசத்தில்!
வாழ்க்கையை வளமாய்!
வாழ்ந்துகொள்வோம்

மீன்குஞ்சுகள்

துவாரகன்
கண்ணாடித் தொட்டியில் இருந்த!
மீன்குஞ்சுகள்!
ஒருநாள் துள்ளி விழுந்தன!
மாடுகள் தின்னும்!
வைக்கோல் கற்றைக்குள்!
ஒளிந்து விளையாடின!
வேப்பங் குச்சிகளைப்!
பொறுக்கியெடுத்து!
கரும்பெனச் சப்பித் துப்பின!
வயலில் சூடடித்து நீக்கிய!
‘பதர்’ எல்லாம்!
பாற்கஞ்சிக்கென!
தலையிற் சுமந்து!
நிலத்தில் நீந்தி வந்தன!
வீதியிற் போனவர்க்கு!
கொல்லைப்புறச் சாமானெல்லாம்!
விற்றுப் பிழைத்தன!
திருவிழா மேடையில் ஏறி!
ஆழ்கடல் பற்றியும்!
அதன் அற்புதங்கள் பற்றியும்!
நட்சத்திரமீன்களின் அழகு பற்றியும்!
அளந்து கொட்டின!
இப்படித்தான்!
வைக்கோலைச் சப்பித் தின்னும்!
மனிதமாடுகள்போல் கதையடிக்கின்றன!
தொட்டியில் இருந்து துள்ளிவிழுந்த!
மீன்குஞ்சுகள்.!
04/2011

வெள்ளிக்கூடல்

இ.இசாக்
மத்தியானப் பொழுதில் !
நிறுவனத்தின் ஊர்திகளில் !
திணிக்கப்படுகிறதெங்கள் !
எதிர்பார்ப்பு !
சாலையின் அசுரநகர்வில் !
வேகமாக பயணிக்கிறதெங்கள் !
ஆர்வம் !
நெரிசலுக்கிடையேயான நிறுத்தமொன்றில் !
திபுதிபுவென வெளியேறுகிறதெங்கள் !
உற்சாகம் !
காற்று திணரும் !
மனிதக்காடுகளில் !
நுழைந்து !
நகர்ந்து !
முட்டிமோதி வெளியேறுகையில் !
இல்லாமலாகிறதெங்கள் !
ஏக்கம் !
மின்கம்பம் !
கண்விழிக்கும் பொழுதில் !
நிறுவன ஊர்திகள் !
மீண்டும் அள்ளிச்செல்கிறன !
எங்கள் கூடுகளை

துயர்ப் பயணக்குறிப்புகள்

சித்தாந்தன்
நகரத்திற்கு வந்தவனின் இரண்டு!
கவிதைகள்!
!
துயர்ப் பயணக்குறிப்புகள் 1!
---------------------------------!
நான் யுகங்களின் முடிவிலிருந்து!
திரும்பி வந்திருக்கிறேன்!
எறும்பூரும் பாதைகளும்!
வனாந்திரங்களின் ஒலிகளுமற்றதில்லை!
எனது வழித்தடங்கள்!
இறுகிய முகங்களின் சர்வகாலத்தினதும்!
புகைமண்டிய புன்னகைகளை!
எனக்காக விட்டுச்சென்ற!
எல்லோரையும் நானறிவேன்!
இடியதிர்வின் மின்னல் ஒளியில்!
பாதியான என் பாலிய பிராயத்தை!
காடுகளின் இலையுறுமல்களுக்கிடையில்!
தவற விட்டுவிட்டேன்!
குறிகளும் முகங்களுமில்லாத!
ஆயிரமாயிரம் மனிதர்களுக்கிடையில்!
நான் திரும்பி வருவேனென!
யாரும் நினைத்திருக்க முடியாது!
நான் வந்தேன்!
மௌனகாலத்தில் மிதந்த கடல்!
முதல் முறை அலையெழுப்பிற்று!
வானத்திற்கு அப்பாலான வெளியிலும்!
நான் அதைக்கேட்டேன்!
கிரகங்களின் ஒளிமுகங்களிலும்!
எனது புன்னகை ஒட்டிக்கிடந்தது!
தூக்கு மேடைகளும் கயிறுகளும்!
நிறைந்த பொழுதுகளில்!
ஒரு அந்நியனின் பார்வையழிந்து!
இன்னொரு அந்நியன்!
தெருக்களில் உலாவந்த நாட்களில்!
நான் தெருக்களில் வதைபட்டேன்!
உங்களில் எவருமே தெருவுக்கு வரவில்லை!
இன்று நான் வந்தேன்!
பிரபஞ்சத்தின் கடைசியிரண்டு!
கண்ணீர்த்துளிகளும் காய்ந்துபோன பிறகு!
நான் வந்தேன்!
தெருவில் சயணித்த மனிதர்களின்!
ஆழ்ந்த உறக்கத்தின் அலறல்களில்!
நான் கழுத்தைத் திருகியெறிந்த!
கனவுகளுடன் வந்தேன்!
ஆனால்!
இன்னும் நீங்கள் தெருக்களுக்கு வரவில்லை!
இலைச்சஞ்சாரம்!
காற்றில் இல்லாமலே போய்விட்டது!
நானே தெருக்களில் அலைகிறேன்!
நான் மட்டும் ஒருவனாக!
தனி ஒருவனாக!
துயர்ப் பயணக்குறிப்புகள் 2!
-------------------------------------!
நண்பனே!
சர்வசாதாரணமாக வார்த்தைகளை!
உதிர்க்கப்பழகிவிட்டாய்!
மொழி தெரியாத ஒரு நகரத்தில்!
நான் ஒரு பித்தனாய்த் திரிந்தேன்!
வாகனங்களின் நெரிசலுள்ளும்!
மனித இடிபாடுகளிலுள்ளும்!
வெறும் அலங்கார ஒளிர்வுகளிலுள்ளும்!
எனது குரலை மறைத்தபடி திரிந்தேன்!
உனது வார்த்தைகளை!
இயல்பானதென நீ வாதாடுகிறாய்!
நான் வார்த்தைகளை காற்றிலே விட்டெறியாமல்!
மிக அவதானமாக உன்னைப் பார்த்தேன்!
எந்த இயல்பும் நிரந்தரமானதில்லை!
இயல்பில்லாமலும் போய்விடும்!
நீ அவதானமாக இருக்க வேண்டும்!
உன் இயல்புகளை!
இந்த நகரம் பிடுங்கி எடுத்துவிடும்!
இந்த வீதிகளில் இயல்பில்லை!
கணங்கள் தோறும் இதன் இயல்புகள்!
உடைந்து நொருங்குகின்றன!
இதனையும்!
நீ இயல்பெனக்கருதலாம்!
அது நல்லது!
ஒரு சிறிய இடைவெளி கொடு!
நான் வெளியேறி விடுகிறேன்!
தேநீர்க் கடைகளையும்!
புத்தகக் கடைகளையும்!
நினைவில் வைத்துக்கொள்கிறேன்!
என்னைப்போலவே!
இன்னும் சில மனிதர்களும்!
இங்கு அலைவுறலாம்!
பஸ் இலக்கங்களை மறந்துபோய்!
அவர்களுக்குத் தெரிந்த!
தொலைபேசி இலக்கஙகளைத் தவறவிட்டு!
அலையலாம்!
இங்கு வாழப்பழகிவிட்ட!
வாழ நிர்ப்பந்திக்கப்பட்ட!
எல்லா மனிதர்களுக்கும்!
எனது அனுதாபங்கள்!
நண்பனே!
எந்த இயல்பும் நிரந்தரமில்லை!
இயல்பில்லாமலும் போய்விடும்!
!
-சித்தாந்தன்

சின்ன செம்பருத்தி

சிதம்பரம் நித்யபாரதி
சின்ன செம்பருத்தியின்!
ஐங்கர அழைப்பு!
கையில் எடுத்தவுடன்!
குஞ்ச நாக்கைத் துருத்தும்!
ஜிமிக்கியில் பேத்தி நினைவுடன்!
என் குழந்தை பருவமும் ஆடும்!!
குடலை நிறைய நிறைய!
கொல்லையில் பறித்து!
சிறு செறுமலுடன்!
அடுப்பங்கரை அருகே வைத்து!
விரைந்திடும் தாத்தா.!
வளைந்த முதுகினில்!
மோதிக் கீழ் விழும்!
பாட்டியின் முணுமுணுப்பு!
கனத்த சூழல் தலைமுறை கடந்து!
கையில் கனக்கும்!!
--சிதம்பரம் நித்யபாரதி

விதி... நீ... சுவை... பிரிவு

தென்றல்.இரா.சம்பத்
1. விதி!
விதியால்......!
என்று சொல்வதைத் தவிர!
வேறு என்ன சொல்லி!
எழுதிடமுடியும்!
உன் பிரிவை..!
இந்த காகிதங்களில்.!
2. நீ!
நின்று பார்க்கையில்!
நடந்து போகையில்!
படுத்துக் கிடக்கையில்!
படித்துச் சுவைக்கையில்!
சுகப்படும் வேளையில்!
சோகப்படும் நாழியில்!
நீ வேண்டும் என்னருகில்....!
வேறெப்படிச் சொல்ல!
என் காதலை உன்னிடம்.!
3. சுவை!
உன் இதழ்களை!
சுவைத்த போதுதான்!
எச்சிலுக்கும்!
சுவையிருப்பதை உணர்ந்துகொண்டேன்.!
4. பிரிவு!
தவிர்க்கவே முடியாத!
நம் பிரிவில்!
நீ விட்டு வைத்துப்போன!
உன் நாற்காலியிலும்!
மேசையிலுமே!
மாறி மாறி அமர்ந்து-நான்!
அமைதியாகிறேன்!!
வேறுயாரும் அமராதபடி....!
- தென்றல்.இரா.சம்பத்

மரணம்.. ஓய்வில்லாவேலை..வீடு

மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்
மரணம்.. ஓய்வில்லா வேலைக்காரன்.. வீடு !
01.!
மரணம் !
--------------!
ஜீவித வாசலின் !
கதவடைப்பு.!
சுவாச தொழிற்சாலையின் !
மூடு விழா.!
வயதெல்லை இன்றி !
யாவருக்கும் கிடைக்கும்!
சமவுரிமை .!
வாழ்க்கைத் !
திரைப்படத்தின் !
வணக்கம்.!
இலஞ்சம் கொடுத்து !
தப்பிக்க இயலா !
உறுதியான தண்டனை !
பின் போட முடியா !
கட்டாய பரீட்சை .!
துப்பாக்கிகளும் !
குண்டுகளும் !
அறுவடை செய்யும் !
சமகால பயிர்.!
கடவுள் விளையாடும் !
கிரிக்கெட் விளையாட்டில் !
எடுக்கப்படும் !
உயிர் விக்கெட். !
நீதிபதிகளுக்கும் !
வழக்கறிஞர்களும் !
வாதாடி வெல்ல முடியாத !
முடிவான வழக்கு.!
வழித்துணைகளையும் !
வாழ்க்கைத் துணைகளையும் !
விழித்துணைகளையும் !
விட்டு விட்டு !
விதித்துணையோடு !
போகின்ற தனிப் பயணம் !
!
02.!
ஓய்வில்லா வேலைக்காரன்!
----------------------------------!
என் மௌனம் உடைக்காமல்!
செவிகளின் சவ்வுகள் கிழியும்!
சத்தங்களோடு!
நீங்கிக்கொண்டிருந்தன இரயில்கள் !
நீண்டநேரமாய் !
எனக்கான இரயில வாராத !
துக்கங்களுக்குள் முடங்கிக் கிடந்தது!
எனது பயணம் !
மின்சார இரயில்கள் !
மலிந்து விட்ட காலகட்டத்தில் !
புகை கக்கி நடந்து வந்த!
அநாகரீகம் பார்த்து!
பிரகாசமாகின !
எனது விழிச்சூரியன்கள்!
எதிரே அவசர அவசரமாய்!
துப்பட்டாவில்!
வியர்வை ஒத்தி !
ஓடோடி வந்தது நிலவு !
!
நிலவுக்காக காத்திருந்த !
நிமிஷங்களின் வேதனைகள்!
மறைத்து!
பனிபோல் குளிர்ந்த முகத்தோடு !
நிலவை வரவேற்று!
நாகரீகமாய் !
கைகுலுக்கிக் கொண்டு!
நடந்தபோதுதான்!
நடந்தது அது.!
குருதி குளித்த நிலவு !
உயிரை இரயிலேற்றி!
பிணமாய் கிடந்த வேளை!
காக்கிகளும் கரும்பச்சைகளும் !
கழுகளாய் வட்டமிட்டு!
சூத்திரதாரிக்கு வலைவிரிக்க!
எல்லோரின் கண்களிலும்!
மண்ணை தூவிவிட்டு!
அடுத்ததர்கான வலைவிரித்து !
சேவையில் மும்முரமாகியிருந்தான் எமன்.!
03.!
வீடு !
--------!
மழை பெய்யும்!
போதெல்லாம் !
ஒழுகும் கூரையின் கீழ்!
பாத்திர பண்டங்களை !
பரப்பி வைத்து!
முணுமுணுத்த போதும்!
அடை மழை !
அடிக்கும் போதெல்லாம்!
ஊடுரும் வெள்ளத்தால் !
பரண் மேல்!
வீட்டுச் சாமான்களை!
நனையாமல் !
பத்திர படுத்தி!
நாற்காலிகளிலும்!
கட்டில்களிலும் !
உட்கார்ந்தது உட்கார்ந்தது!
வெள்ளம் வடிய!
காத்திருந்த நாட்களிலும் !
காற்றடிக்கும்!
காலமெல்லாம்!
மடார் மடாரென்று !
சேர்த்தடிக்கும்!
கூரைத்தகடு !
மனசை கிழித்த !
வேளைகளிலும்!
திறந்து வைத்தாலும்!
மூடிக் கிடந்தாலும் !
காற்றுக்கு தடைபோடும்!
ஜன்னல்களை!
திட்டித்தீர்த்த!
கோடைக்காலங்களிலும் !
எந்தப்பக்கம் !
அடைத்தாலும்!
ஊடுருவி உள்வந்து!
உடல்நடுங்க செய்யும்!
குளிர்வாட்டும் மார்கழியில்!
தாழ்பாள் இல்லாமல்!
தள்ளாடும் கதவுக்கு!
அணையாக கல்வைத்து!
அழுதிருந்த நாட்களிலும் !
இந்தவீட்டில் !
குடியிருப்பதைவிட !
மாட்டுப்பட்டியில்!
இருக்கலாம் என்று !
அப்பாவை!
சினந்துகொண்ட நாட்களிலும் !
மின்சாரமிலாமல் !
குப்பி விளக்கில் !
கண்விழித்து படித்து !
முகம் கழுவும் வேளை!
மூக்கில் வரும் கரிபார்த்து!
கலங்கிய நாட்களிலும்!
அடுபெரிக்கும்போது!
ஈரவிறகின் புகை மண்டலம்!
வீட்டை விட்டு!
வெளியேற மறுத்து !
அடம்பிடித்து !
கண்ணீர் வரவழைத்த!
நாட்களிலும்!
எனக்குள் அப்போது!
நரகமான என்வீடு....,!
ஒரு கோர யுத்தத்தில் !
குண்டு வீழ்ந்து!
சிதைந்துபோனதன் பின்னர்!
குடியிருக்க வந்த!
வாடகை வீட்டில்....!
சுவரில் சிறு ஆணி அடிக்கவும்!
முற்றத்து பூச்செடியில்!
ஒரு பூப்பறிக்கவும்!
நுளம்புக்கு வேப்பம்!
புகை பிடிக்கவும் !
ஒரு நாள் தாமதித்தாலும்!
வாடகை பணத்திற்காய் !
கடி நாய் கவனமென்று !
வாயில் பலகையில்!
எழுதியிருப்பதை !
ஞாபகமூட்டும் வீட்டுக்காரனிடம்!
கடிபடாமால் தப்பிக்கும் !
வேளைகளில்!
சொர்க்கமாக தெரிகிறது இப்போது