தொட்டிலில் வாழ்வைக் காணா தோளிலே தூங்கும் பிள்ளை!
வட்டிலில் பால் கொடுக்க வழியுமோ அறியா அன்னை!
கொட்டிலும் இவர்க்கு உண்டா பட்ட அம் மரமே சாட்சி!
தட்டியும் அவரும் கேட்க தமக்கென எவர்தாம் சொந்தம்.!
பாட்டியும் பல நாமத்தில் பானமோ பலதாய் ஓடும்!
பாட்டிக்கும் பிறந்த நாளாம் பதறுறாள் கேக்கும் வெட்ட!
கூட்டியே சொந்தம் சேர்ந்து குடும்பமாய் படமும் இங்கு!
காட்டும் இக் கோலம் கண்டு கலங்குகிறார் அகதி ஏற்றோர்.!
கிடுகுகள் கிழிந்த சேலை குளிக்கும் பெண் மானம் காக்கும்!
படுத்திட அவளோ எண்ணில் ஓலையோ சுவராய் மாறும் !
எடுத்தொரு அவளம் உண்ண எண்ணிடில் ஏது தேறும்!
இடுக்கணே பலவைக் கண்டும் இவள் ஒரு மானப் பெண்ணே.!
குளிக்கவே போனால் இங்கு குவியுது வாசப் போத்தல்!
மழித்துமே வெட்டிக்கூந்தல் வலம் வரும் ஆச்சி இங்கு!
பசிக்குமாய் உணவும் உண்ண பத்துமே ரகத்தில் கோப்பை!
ருசிக்குமாய் நாளும் உண்டு நெருக்குதே நோய்கள் இன்று.!
வெட்டியே விறகும் விற்று வேகிற வயிற்றைக் காக்க!
தட்டியே பொறுக்கி அள்ளும் அரிசியே அவர்க்குத் தஞ்சம்!
கட்டிய சேலை சேதம் கண்டிடின் அதனைத் தைக்க!
முட்டியில் சல்லி உண்டா வாங்கிட ஊசிதானும்.!
அன்னவள் நகைகள் மாற அதற்கென உடுப்பும் மாறும்!
யன்னலில் தொங்கும் அந்த துணிகளும் கிழமை மாறும் !
தன்னது அழகை மாற்ற தாயுமோ அவஸ்தை நாளும்!
என்னது வசதி சேர்ந்தும் இவள் மகள் இரவில் றோட்டில்.!
-த.சு.மணியம்

த.சு.மணியம்