தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

திருமண வாழ்க்கை

ஈஸ்வரி
காலங்கள் கடந்தன
கணப்பொழுதினிலே!

ஆண்டுகள் கடந்தன
விதி வழியினிலே!

மணமான மலர்பாதையானது
இருமனம் சேர்ந்த
திருமண பயணம்!

உயிர் கலந்த உறவு இது
என்று உலகம் உணர
உதித்தது புதிய நிலா!

சோகங்களை புன்னகை
வென்றது!
சுமைகளை நம் இமைகள்
வென்றது!

போதாது இருவர்க்கும்
நூறாண்டுகள்!
வரமாக கேட்கிறேன்
இன்னும் நூறண்டுகள்!

நரை கூடிப்பழுத்தாலும்
உயிர் காதல் உதிராது!

வாழ்த்த வயதில்லை
கவிபாடுது சிறுநெஞ்சம்

நித்திரை

புகழேந்தி
சுத்திச் சுத்தி தேடி பாத்தேன்
எங்கேயும் கிடைக்கலையே
பல இரவுகள தொலைச்சு அலைஞ்சு பாத்தேன்
அப்போதும் காணலியே
இருளில் தொலைச்ச அத
அம்மா மடியில தலை வச்சு சாஞ்சதுமே
அதுவா வந்துடுச்சே

காதல்

சலோப்ரியன்
 
ஆதாம் எங்கேயோ
ஆறடிக்குள் புதைந்து விட்டான்
ஆனால்
அவன் விட்டுச் சென்ற காதலோ
பூமியெங்கும் பூத்துக் கிடக்கிறது!!!
 

நிகழ்வின் ரகசியம்

பா.தேவேந்திரபூபதி
காலமும் இடமும்
தீர்மானிக்கின்றன நிகழ்வை

இடம்
தமதான போது
காலம் இறக்கைகள் மூடி
வாயிற்படிகளில்
இரைதேடி அலையும்

காலம்
தாழ்பணிந்து கிடக்கையில்
அகிலமே போதாத இடமாய்
தோன்றக் கூடும்
இரண்டும் சேரும்
ஒரு பொழுதில்
இல்லாதிருப்போம் என்றைக்கும்

புதுமை

புதுவை பாமல்லன்
கண்கள் சொல்லும்
கதைகளும் அல்ல
புதுமை

காலத்தை வெல்லும்
கவிகளும் அல்ல
கார் முகில் பொழியும்
மழையும் அல்ல

கானகம் விடுக்கும்
பூக்களும் அல்ல
காதல் சொல்லும்
பாக்களும் அல்ல

காப்பியம் செல்லும்
சிலம்பும் அல்ல
கானா உலகைக்
காண்பதும் அல்ல

கானல் நீரின்
காட்சிகள் அல்ல
காரிருள் நீங்கும்
ஒளியும் அல்ல

கன்னித் தமிழை
அன்னிய மொழியின்றி
பேசுவதே புதுமை

வேட்கை முந்துறுத்தல்

கி. கண்ணன்
நெருப்பு நெய்யிட்டு  மூடுதலால்
அணையா தென்றுணர்க
அதுப்போல்-
நின்மீது யான்கொண்ட காதலும்
மறைத்திட கூடுதில்லை

உன்னிடம் தஞ்சம்
அடைந்தன நெஞ்சம்

உனது-
மார்பக புள்ளிமீது
கோலமிடும் நாள் வருமா ?

முதுகில் நகக்குறி
இடுவ தெப்போது

மெத்தை உறை
கறை படியட்டும்

தாழா தனங்கள்
தாழட்டும்

முக்கால் அழகு
மூடிய ஆடை

முற்றும் துறந்து
ஒளிபெற செய்

பெண்மை படை
எதிர்த்து போரிடு

தலைவ!
பூரித்து நிற்கின்ற அல்குல்
ஐவிரல் கைக்குள்ளே அள்ளியெடுத்து
அதன்வழி அதன்வழி
மேலாய் துடித்திடும் உயிர்
கீழாய் எடுத்திட வருகவே

பெண்ணாய் வழிந்து
காம வேட்கைக் கூறல்
பெண்மைக் கிழிவு

இந்த-
முகிழம் பூவை
முயங்கி கசக்க இச்சையுறு

கச்சை அவிழ்த்து
கல்மார்பு தளர்த்து

இன்பம் ஈந்து
இயலாமை ஏற்படுத்து

காமம்
இழந்து பெறுதல்

காதல்
பெறுதற்கு இழத்தல்

மித்திரனே-
மிதலைக்குள் வாய்போடு
மறுபடியும் மழலையாக்கு

பள்ளியறை
முதல் பாடம்

முத்த படலம்

இரண்டாம் படலம்
துகிலுரிக்கும் படலம்

இழக்க இழக்க ஊறுகின்ற
அமுத சுரபிதானே உணர்ச்சி

உணர்ச்சி உள்ளிழுத்து
மாதரார்-
பார்வையில் வெறி புலப்படுதல் தானே
பாலுணர்ச்சி

உணர்ச்சி நசுக்கும்
வலிமை உண்டு

உயிர் சுமக்கும்
திறன் இல்லாள்

தீ அணைக்க
நீ வாராய்

நீ அணைத்தால்
தீ ஓங்கும்

அணைத்தாலும் அடங்காதது
அடங்கினால் அணைந்துவிடும்

மீண்டும் பேரலை

மாவலன்
மரணம் விதைக்கப்பட்ட
வன்னி வள நாட்டில்
காட்டாறாய் செங்குருதி

மண்டை ஓடுகள்
ஒதுங்கிப் பிணைந்து
நதியில் விழுகின்றது!

குண்டுகள் துளைத்த
பதுங்கு குழிகளிலிருந்து
பீறுட்டுப் பாய்கின்றது
விதைப்புக்காய்க் காத்திருந்த
மண்டை ஓடுகள்!

நதியும் ஆறும்
கலந்தே வீழ்கின்றது
இந்து மா கடலில்!

தொலைவிலிருந்து சில
புலம்பல்களும் ஓலங்களும்
பெரிதாக ஓலிக்கின்றது.

உலகச் செவிப்பறைகளின்
கதவுகள் அடைப்பட்டே
கிடக்கின்றது
ஈழத்தமிழரின்
சுதந்திரத்தைப் போல்
இறைமையைப் போல்
உரிமையைப் போல்

ஆயினும்
இந்து மா கடல்
மண்டைகளையும்
முண்டங்களையும்
விழுங்கி விழுங்கி
பேரலையாய்
உயர்ந்து உயர்ந்து
உக்கிரம் கொள்கின்றது

முற்று பெறாததாய்

உமா
 
புதிதாய்
படைக்க படும் எதுவுமே
பொலிவு தாங்கி வரும்......!
ஆனால் .,
உருவாகும்  போதே
உருக்குலைந்து  போய் உள்ளது
உலக தாயின் ஓர் ஓவியம் .
காரணம்,
வறுமை எனும் தூரிகையால்
தினமும் கிறுக்கபடுகிறது அவள் உருவம் .
எதுகை மோனையினாலோஎன்னவோ அந்த
வறுமை தேவதைக்கு வண்ணம் தீட்ட
கருமை மட்டுமே எடுப்பாய் போனது

இருக்கமான அவளது உதடுகளுக்கு
உறைந்து போன ரத்தத்தால் சாயம்
விடியலுக்கான விடை அறியா
காரிருளில் குருதி புனல்
பாய்ந்து கொண்டு இருக்க ,
எலும்பு துண்டுகளின் மேல் அமர்ந்து
முராரி ராகம் ரசிக்கும்
அந்த உலக தேவதையின் ஓவியத்தை
வறுமை எனும் தூரிகை கொண்டு
வரைபவர் கைகளின்
சுக்கிர மேடுகளில்
எல்லாம் மட்டும் ,
அக்னி குழம்பு
கொந்தளிப்பதால் ,
எளிதில் ஆரா
கொப்பளங்கள் .....!
அதாலோ என்னவோ,
முற்று பெறாத ஓவியமாய்

கிறுக்க பட்டு கொண்டே
இருக்கிறாள் உலக தாய்.!
 

கற்பென்பது

சு.மு.அகமது
சுகமாய் எனைப் புணர்ந்து
அசதியாய் உறைகிறது காற்று

பேரலையின் ஆரவாரம்

தலையாட்டும் பெருந்தருவின்
எதிர்வினை செயலற்றுப்போய்
மென்னியம் உதிக்கிறது

படர்வெளியில் விரல் பிடித்து
நடை பழக்கும் வாசம்
முத்தாத்தனின் மழிக்கப்படாத
முகப்படிமச் சாயலில்

ஆரம்பம் இப்படித்தான்...

புசிக்கப் பழக்கின கனிகள்
அழுகாதிருக்க  புசியப் பழகினதாய் ..

சுவைத்துப் பழகினவை

செறித்துப் போனதால்
திளைத்துப் போகும்
அதன் உலைகள்

தெறிக்கும் துளிகளில்
நான் பெற்றது கையளவு
உன்னுள் கலவாதது உலகளவு

விந்தையின் மேலணியில்
நான் கற்றேன்  நீ கற்பித்தாய்
'கற்ப'து’ பொதுவானது

அடிச் சுவடுகள்

வல்வை சுஜேன்
அகரத்தின் மூலம் ஆணா பெண்ணா!
விடியாத விவாதங்களுக்குள்!
இன்னும் மனிதன்!
காத்தில் நடக்கிறது உலகம்!
விதி விட்ட வழியென்று !
வீழ்ந்து கிடக்கிறான் மூடன் !
வாழ்வுக்கு ஒரு வசந்தம்!
வாசலில் வருவதில்லை!
வாடகை வீட்டிலே!
தேனீக்கள் வாழ்வதில்லை!
உரம் உள்ள உன் நெஞ்சால்!
புறம் எரிப்பதை நிறுத்து!
ஊரோடு நீ இருந்தால்!
வேர்ரோடு வாழல்லாம் !
விழியால் நனைந்த இமைகள் !
யுரத்தில் மாண்டதுண்டா!
காய்த்த கனிகளை !
கொடை கொடுத்த மரம்!
ஏழையாய் போனதுண்டா!
எண்ணத்தின் அலைகளோ!
உள்ளத்தில் நூறு!
இருந்தாலும் இறந்தாலும்!
உள்ளம் என்றும் ஒன்றுதான்!
பயணம் முடிந்துவிடும்!
பாதைகள் முடிவதில்லை!
என் உறவே !
எங்கே நீ !
உன் சுவடுகளை தேடுகிறேன்.!