இனி அப்பாவை நான் காணமுடியாது.!
இணைந்த நிழற் படங்கள் வீட்டினில்.!
இதயத்தில் கொலுவாக இனிய நினைவுகள்.!
இருபத்தி மூன்று மார்கழித் திங்கள்!
இரண்டாயிரத்து ஆறின்; காலை விடியலில்!
இகத்தில் என்னை உருவாக்கிய தந்தையின்!
இனிய சுவாசம் மெது மெதுவாய் நின்றது.!
இதமான விடுதலை உயிர்க்கூட்டிற்கு.!
00000!
எங்கள் வீட்டு மாமரக்குடை அவர்!
குன்றாத ஆதரவுக் குடையில் நாம்.!
என்றும் சுடரான அறிவும் அன்பும்!
நின்று இல்லத்திற்கு. ஒளி தந்தது.!
கடற்கரை மணலாய்ப் பல நினைவுகள்.!
கலையழகுக் கிழிஞ்சல்களாய்ச் சில நினைவுகள்!
கொலுவாக மனதில் அழியாத சொரூபம்.!
கொடுக்கிறது சுய ஆளுமையைச் சுயமாக எமக்கும்.!
00000!
தொண்ணூற்று ஆறில் அம்மா மறைவு.!
இரண்டாயிரத்து ஆறில் அப்பா மறைவு.!
இணையாக இல்லறம் ஐம்பத்தொரு வருடங்கள்.!
இருவரையும் இன்று நிழல் படங்களில்!
இணைத்தே பார்ப்பதில்; ஆத்ம திருப்தி.!
மரணம் நியதியெனும் அவதானம் கொண்டால்!
இரணம் உருவாகாத நிதானம் பெறலாம்.!
தருணம் வருகையில் கல்லறைக்கட்டிலே சரணாலயம்.!
00000!
!
பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.!
ஓகுஸ், டென்மார்க்.!
13-1-07
வேதா. இலங்காதிலகம்