சிந்தனைத் துளிகள் - வேதா. இலங்காதிலகம்

Photo by Didssph on Unsplash

கற்பனை, அனுபவம் தேடல் அறிவாய்!
உற்பவச் சிந்தனைகள் முக்கூட்டுப் பரிமாணம்.!
மூளையுள் சிக்கலான ஊற்றாகி!
மூளும் திறமையான சுய வெளிப்பாடு,!
மொழியுரு ஏறி இனம் காட்டும்.!
அனுபவித்துச் சொல்லும் சிந்தனை வரிகள்!
மனுக்குல இருளகற்றும் ஒளித் திரிகள்.!
மானுடம் சிந்திப்பதால் பூரணமடைகிறது.!
சிந்தனை மொழியோடு புணர்ந்தால்!
வந்து எழிலாகும் செயலுருவம்,!
இசை, நாடகம், ஓவிய மொழியில்!
சுந்தரக் கலை அனுபவம் சொர்க்கம்.!
அந்தரித்துக் கெந்தும் நொந்த மனதுக்குச்!
சாந்தியளித்துச் சஞ்சலம் அகற்றும்.!
வந்தனைக்குரிய சிந்தனை நந்தவனமாகும்.!
விந்தையாய் உலகை நடத்திச் செல்லும்.!
மலையைப் பிடித்துக் கடலை அகழ்வதே!
தலையில் எழும் சிந்தனையை அளத்தல்.!
தொலை நோக்குச் சிந்தனை வளர்ச்சிகளாய்!
தொழில் நுட்பம், மருத்துவம், விஞ்ஞானம்!
தாவர-விலங்கியல், வானியல், பௌதிகம்.!
தாவிய அறிவுவெளி ஆய்வு!
தூவிய உன்னதமே மின்சாரம், கணனி,!
வந்த வசதிகள் நவீன வாழ்வுகள்.!
நாக சர்ப்ப விசமாய் ஏறும்!
வேக வன்முறைப் புரட்சியும் சிந்தனையே.!
தாகச் சிந்தனைத் துளிகளின் திரண்ட!
யாகமே கதை, கவிதை, கட்டுரை.!
தேகசுகம், ஆரோக்கியம் மகிழ்வு!
வாகுடன் அமைந்தால் சிந்தனை தெளிவாகும்.!
பகுத்தறிவுடன் பசிய நடையிடுமிது!
பங்கமானால் தலைகீழாய் மாறிவிடும்.!
அருவியோட்ட வாழ்வில் அனவரதமும்!
குருவிச் சிறகடிக்கும் சிந்தனைத் துளிகள்!
கருவியாகி வாழ்வுப் பாதையைச் சீராக்க!
உருவிக் கொள்! உணர்ந்து கொள்!!
நல்லவை எங்கிருந்து வந்தாலும்!
மெல்லென அவைகளைப் பற்றலாம்!
சொல்ல இவர் யாரென உன்னுள்!
வில்லெடுக்கும் திமிரினைக் கொல்! வெல்!.!
பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.!
ஓகுஸ், டென்மார்க்.!
2-3-08
வேதா. இலங்காதிலகம்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.